போரின்போது விஸ்வமடு அருகே 30,000ற்கும் அதிகமான சடலங்கள்: மன்னார் ஆயர் தெரிவிப்பு

rajappu-josephஇலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதியில், நாட்டின் வடக்கே விஸ்வமடு அருகில் 30,000 முதல் 35,000த்துக்கும் அதிகமான சடலங்கள் இருந்ததாக அந்த சடலங்களுக்கு பிரேதபரிசோதனை செய்யச் சென்ற அதிகாரிகள் மூலம் அறிந்ததாக மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்திருக்கிறார்.

இரண்டு கிழமைகளுக்கு முன்னரே தமக்கு இந்த தகவல் தெரியவந்ததாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்த ராயப்பு ஜோசப், இலங்கை போரின் இறுதிப்போரில் நடந்தது இனப்படுகொலையே என்று இலங்கையின் வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சரியென்றும் தெரிவித்தார்.

போரின் இறுதி எட்டுமாத காலத்தில் 1,46,679 மக்களுக்கு என்ன ஆனது என்கிற கணக்கு கொடுக்க முடியாமல் இருப்பதாகவும், அவர்கள் எங்கே என்று இன்றுவரை தெரியவில்லை என்றும் தெரிவித்த மன்னார் ஆயர், இலங்கையின் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் போருக்குப் பிறகும் தொடர்வதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் நடந்த போர்க்கால மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசு நடத்தப்போவதாக கூறும் புதிய உள்நாட்டு விசாரணையால் எந்த பயனும் ஏற்படாது என்று தெரிவித்த மன்னார் ஆயர், ஐநா மன்றத்தின் மேற்பார்வையிலான சர்வதேச விசாரணையே உண்மைகளை வெளியில் கொண்டுவர உதவும் என்றும் கூறினார்.

மேற்கூறிய விடயங்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் தெரிவிக்கவேண்டும். புதிய அரசாங்கம் நல்லெண்ணத்தைக் கொண்டுவர வேண்டுமாகவிருந்தால் சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மீள்குடியேற்றங்கள் விரைவில் செய்யப்படல் வேண்டும். தமிழ் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் வழங்கப்பட வேண்டும்.

இதேவேளை, இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை அறிக்கையை ஐநா பேரவை இலங்கையின் புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டு தள்ளிவைத்துள்ளமையானது துரதிஸ்டமானது என்றும், வரும் செப்படம்பர் மாதம் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இலங்கையில் நடைபெற்ற மனிதவுரிமைமீறல்களை  வெளிக்கொணரும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி  – சர்வதேச விசாரணையை தள்ளிப்போடுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை! – மன்னார் ஆயர்

-http://www.tamilwin.com

TAGS: