குற்றவாளியே நீதிபதியாக இருக்கும் போது எப்படி நீதி கிடைக்கும் – மன்னார் ஆயர்

குற்றவாளியே நீதிபதியாக இருக்கும் போது எவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார் மன்னார் மறைமாவட்ட ஆயர் ஜோசப் ஆண்டகை அவர்கள். ஜ.நா அறிக்கை தாமதப்படுத்தியமைக்கு கண்டனம தெரிவித்து யாழ் பல்கலைக்கழக சமூகத்தினால் நடத்தப்பட்ட பேரணியில் கலந்துகொண்டு மனுவைப் பெற்றுக்கொண்ட பின் ஊடகவியலாளரிடம் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்:-

வன்னிப் போரின்போது அரசாங்கம் யுத்த சூனியப் பிரதேசங்களுக்குள் மக்களை செல்லுமாறு அறிவித்தது. இந்த அறிவிப்பை நம்பி தங்கள் உயிரைப் பாதுகாக்கச் சென்ற மக்கள் மீது இராணுவம் தாக்குதலை நடத்தியது. அரசு அறிவித்த யுத்த சூனியப் பிரதேசத்துக்குள் அவர்களே மூன்று தடவைகள் தாக்குதலை நடத்தினர். இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரில் ஒரு இலட்சத்து 46 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் இன்று வரை இதற்கு நீதி கிடைக்கவில்லை.

யுத்தத்தின்போது மனித உரிமைகளை இலங்கை இராணுவம் மீறியது. யுத்த சூனிய வலயங்களை அறிவித்து அதற்குள் புலிகள் இருக்கின்றனர் எனக் கூறி மக்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இது எதற்காக என்றால் புலிகளை மக்கள் வெறுக்கவும், தாங்கள் இந்த மீறல்களை செய்யவில்லை புலிகளே செய்தனர் என சர்வதேசத்திடம் கூறித் தப்பவுமே.

யுத்தத்துக்குக் கட்டளையிட்ட போர்க் குற்றவாளியான மஹிந்த ராஜபக்‌ஷவே போர் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல் குறித்து விசாரணை செய்ய குழு ஒன்றை நியமித்தார். குற்றவாளியே நீதிபதியாக இருக்கும் நிலைதான் இது. இவர்களிடம் இருந்து எமது மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று எப்படி நம்புவது. புதிய அரசாங்கத்தை மக்கள் நம்புகின்றனர். ஆனால் தமிழருக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து விசாரணை விடயத்தில் புதிய அரசாங்கத்தில் மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை. இந்நிலையிலேயே தமிழ் மக்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை இறுதி அறிக்கையில் தமக்கு நீதி கிடைக்கும் என நம்பினர். ஆனால் இந்த அறிக்கை மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படாமல் பிற்போடப்பட்டமை தமிழருக்கு ஏமாற்றமே. தாமதிக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த அறிக்கையை உடன் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என அவர் மேலும் கூறினார்.

-http://www.pathivu.com

TAGS: