தமிழ் பிரதேசங்களில் இருந்து உடனடி படைக்குறைப்புக்கு வாய்ப்பில்லை: ரணில்

ranil_wickremesinghe_001நிலைமையில் முன்னேற்றங்கள் ஏற்படும் வரையில் தமிழ்ப் பிரதேசங்களில் இருந்து உடனடியான இராணுவ குறைப்புக்கு வாய்ப்பில்லை என்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எனினும் தமிழர் பிரதேசங்களில் எதிர் பார்க்கும் முன்னேற்றங்கள் என்ன என்பது தொடர்பில் அவர் தகவல்களை வெளியிடவில்லை.  அரச கட்டுப்பாட்டில் இருந்த பல காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் படையினர் முகாமிட்டுள்ளனர்.

இந்தநிலையில் இராணுவத்தினர் சில மாவட்டங்களில் இருந்து ஏன் விலகிச்செல்ல வேண்டும் என்பதற்கான காரணத்தை தாம் அறியமுடியவில்லை.

இலங்கையின் இராணுவத்தினர் முகாமிட்டுள்ள நிலையானது இந்தியாவை அடிப்படையாக கொண்டதே என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எனினும் வடக்கில் பொதுமக்களின் விகிதாசாரத்துடன் ஒப்பிடுகையில் படையினர் எண்ணிக்கை அதிகம் என்பதை ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.

13வது அரசியல் அமைப்பை முழுமையாக அமுல்படுத்த முடியும் என்று குறிப்பிட்ட அவர், எனினும் பொலிஸ் அதிகாரத்தை முதலமைச்சரிடம் வழங்கினால் பொலிஸ் அதிகாரம் தனிப்பட்ட இராணுவப் பிரிவாக மாறிவிடும் அச்சம் உள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கு- கிழக்கு மாகாணங்களை இணைக்கும் வகையில் இரண்டு மாகாண சபைகளும் தீர்மானம் நிறைவேற்றினால் இலங்கை அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: