ஐ.நா. உரிமைப்பேரவையின் 28 வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது. தமிழ் மக்களாலும், குறிப்பாக வடமாகாண சபையாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பேரவையின் விசேட அறிக்கை இம்முறை வெளியிடப்படமாட்டாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கும் மைத்திரி- இரணில் ஆட்சிக்கு, பெரும் ‘தத்து’ ஒன்று கழிந்தது போலிருக்கும்.
முதல் நாள் நிகழ்வில் உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஒத்திவைப்பிற்கு நன்றி தெரிவித்தார்.
மிகவும் திட்டமிட்ட வகையில் எழுதப்பட்ட உரை அவரால் வாசிக்கப்பட்டது. எப்பாடுபட்டாவது அறிக்கை வெளிவரக்கூடாதென்பதில் உறுதியாகவிருந்த புதிய ஆட்சியாளர்கள், ‘தீர்மானம்’ கொண்டுவந்தவர்களின் உதவியோடு தாம் நினைத்ததைச் சாதித்து விட்டார்கள்.
இங்கு இலங்கை அரச பரப்புரையின் முக்கிய வகிபாகத்தினை, மேற்குலகும் இந்தியாவும் கையேற்றது போல் தெரிகிறது.
சிங்களத்தின் நேர்த்தியான அல்லது கடும் உழைப்பால் இந்த அறிக்கை பிற்போடப்பட்டது என்று கற்பிதம் கொள்வது தவறு.
ஜனவரி 9 ஆம் திகதியிலிருந்து பேரவையின் மாநாடு ஆரம்பிக்கும் வரையான காலப்பகுதியில், இலங்கை தொடர்பான ஒபாமா, ஜோன் கெர்ரி, நிஷா பிஸ்வால் போன்ற அமெரிக்க உயர் தலைவர்களின் பாராட்டு மழையில் பேரவையின் 47 உம் நனைந்து விட்டது.
அதாவது முள்ளிவாய்க்காலில் ஒன்று சேர்ந்தவர்கள், மறுபடியும் இந்த ‘அறிக்கை’ விவகாரத்தில் இணைந்துள்ளார்கள் போல் தெரிகிறது. இரண்டு கட்டத்திலும், தமது பிராந்திய நலனே இவ்வல்லரசுகளின் முக்கிய குறியாக அமைந்திருக்கிறது.
செப்டெம்பரில் ‘கட்டாயம் இவ்வறிக்கையினை வெளியிடுவோம்’ என்று சூளுரைக்கும் மனித உரிமைப்பேரவையினர், மார்ச்சில் அதனை வெளியிட மறுப்பதற்கு பொருத்தமான ஒரு காரணத்தையும் தெரிவிக்கவில்லை. இப்போது அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானமல்ல பிரச்சினை. அதாவது பேரவை நியமித்த விசேட குழுவின் அறிக்கை ஏன் வெளியிடப்படவில்லை என்பதுதான் விவாதிக்கப்பட வேண்டிய விவகாரம்.
அதேவேளை அமெரிக்கத் தீர்மானத்தை எரித்தவர்களும் நிராகரித்தவர்களும், அறிக்கை பற்றியோ அல்லது ஐ.நா.சபையின் நடவடிக்கை குறித்தோ பேசாமல் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று தமிழர் தரப்பில் ஒரு சாரார் கருதுகின்றனர். இப்பார்வை தவறானது.
ஊடகங்களில் கசிந்த ஐ.நா.சபையின் உள்ளக விசாரணை அறிக்கை ( சார்ல்ஸ் பெற்றி) இல் குறிப்பிடப்பட்ட விவாதத்திற்குரிய பல விவகாரங்கள் பற்றி, எரித்தவர்களை எதிர்ப்பவர்கள் ஏன் பேசுவதில்லை?. இறுதிப்போரில் ஐ.நா.சபை போட்ட இரட்டை வேடங்களை அந்த உள்ளக அறிக்கை அம்பலப்படுத்தியது. அவ்வேளையில் ஐ.நா.வில் அசமந்தமாகச் செயலாற்றிய பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐ.நா.பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெற்ற உலக வல்லரசுப் புலனாய்வாளர்களால், இறுதிப்போரில் 40,000 ( அவர்களின் கணிப்பு) மக்கள் கொல்லப்பட்டது தெரியவில்லையா?. மனித உரிமைச் சங்கங்களின் எச்சரிக்கைகளையும், புலம் பெயர் மக்களின் பெரும் போராட்ட எழுச்சியையும் ஐ.நா.ஏன் கவனத்தில் கொள்ளவில்லை?.
நீண்டகாலமாக ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் முக்கிய பிரச்சினையை மனித உரிமை மீறல் என்றும், மதக் குழுக்களின் பிரச்சினை என்றும் குறுகிய சட்டகத்துள் அடக்கும் ஒரு தீர்மானத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுவது தவிர்க்க முடியாதது. ஆனாலும் பாண் கி மூன் நியமித்த மூவர் குழுவின் ( மர்சூக்கி தருஸ்மான், யஸ்மின் சூக்கா, ஸ்டீவன் ரட்னர்) அறிக்கையை எவரும் நிராகரிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளல் வேண்டும். அதன் போதாமையை கருத்தில் கொண்டு, பூரணமான அனைத்துலக சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையே பெரும்பாலானோர் வலியுறுத்தி வருகின்றனர்.
இப்போதுள்ள பிரச்சினை என்ன?.
‘அறிக்கையை பின்போடுங்கள், நாங்கள் உள்ளக பொறிமுறையோடு கூடிய விசாரணையைத் சர்வதேச தரத்தில் நடாத்துவோம்’ என்று கற்பூரத்தில் அடித்துச் சத்தியம் செய்யாத குறையாக மைத்திரி அரசு வேண்டுகோள் விடுக்கிறது. மகிந்தாவிற்கு, ஒன்றரை வருடம், மைத்திரிக்கு ஆறு மாதமென்று கால அவகாச நீடிப்பு நாடகம் நடக்கிறது .ஆனால் வலி வடக்கில் தவணை முறையில் காணி ஒப்படைப்பு நடைபெறுமென்று ஐ.நா.சபையில் வாக்குறுதி வழங்கும் மங்கள சமரவீர, சிறையில் வாடும் அரசியல் கைதிகள் குறித்து பேசவில்லை.
‘சிறிலங்கன் டயஸ்போரா’ இலங்கைக்கு வர வேண்டும் என்று கூறும் அதேவேளை, வர்த்தமானி மூலம் தடை செய்த 425 டயஸ்போராக்கள் பற்றி அவர் பேசுவதில்லை.
பிரான்சைச் சேர்ந்த ஜெயகணேஷ் பகீரதியும் அவரது பெண் குழந்தையும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட விவகாரம், நல்லிணக்கத்திற்கும் இந்த அரசாங்கத்திற்கும் உதட்டளவில்கூட உறவில்லை என்பதனை உணர்த்துகிறது. ‘பிரான்சில் புலிகளுக்கு உயிரூட்டுகிறார் இவர் கணவன்’ என்கிற குற்றச் சாட்டினை முன்வைக்கும் TID யினர், கணவனை வரவழைக்க போடும் நாடகம் இதுவென்று பரவலாகப் பேசப்படுகிறது.
இந்த சனநாயக (?) அரசிற்கும், அடுத்த தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு புலிப் பூச்சாண்டி தேவைப்படுவது போலுள்ளது. தென்னிலங்கையிலுள்ள தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு வட – கிழக்கில் நல்லிணக்க (!) விஜயங்களும், மகிந்த அணியோடு மோதுவதற்கும் இனவாத அரசியல் செய்வதற்கும் கட்டுநாயக்க கைதுகள் தேவைப்படுகிறது.
வாக்களித்த வடக்கு மக்களுக்கு அதிபர் மைத்திரிபால சிறிசேன நீட்டும் நட்புக்கரங்களுக்குப் பின்னாலுள்ள அரசியல், பூசாவிலும் கட்டுநாயக்க விமான நிலையத்திலும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
அண்மையில் கிழக்கில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமாகிய பஷீர் சேகு தாவூது அவர்கள், தோழர் க.வே.பாலகுமாரனின் இருப்பு குறித்து பல கேள்விகளை முன்வைத்ததோடு, அவரின் விடுதலை குறித்த முயற்சியில் தான் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். பஷீரின் ‘தேடுதல்’ என்பது நியாயபூர்வமாகக் காணப்படுவதோடு, முன்னைய அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் பெயர்ப் பட்டியலை மைத்திரி உடனடியாக வெளியிட வேண்டும் என்கிற அவசியத்தையும் சுட்டிக்காட்டுகிறது. அதேபோல் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களும் இதே விடயத்தை நீண்ட காலமாக முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை ‘நாட்டின் இறைமையைக் காப்பாற்றுகிறோம்’ என்கிற போர்வையில் மக்களின் இறைமைக்குச் சவாலாக விளங்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்குமாறு சகல தமிழ் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும், சிங்கள முற்போக்கு சக்திகளும் இணைந்து பெருங்குரல் எழுப்பினாலும் இந்த புதிய சனநாயக்காவலர்களின் மைத்திரி சிந்தனைக்கு ஏறாது போல் தெரிகிறது.
17 வது திருத்தச் சட்டத்தினை மீட்டெடுப்பதைவிட , தமிழ்பேசும் சமூகங்களின் மீது ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடும் பயங்கரவாத தடைச் சட்டத்தினை அடியோடு அகற்றுவது அவசியமானது.
கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட திருமதி ஜெயக்குமாரியையும் அவர் மகள் விபூஷிகாவையும் மகிந்தரின் கொடுங்கோல் ஆட்சி சிறைப்பிடித்து விட்டது என்கிற ஒரு கோபக் காரணியும், மைத்திரிக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவின் பின்புலத்தில் இருக்கிறது.
மைத்திரிக்கு ஆதரவளித்து அவர் வெல்வதற்கு உறுதுணையாக நின்ற அந்த மக்களே, சிறையிலுள்ளோரின் விடுதலைக்காக வீதியில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். மைத்திரிக்கு வாக்களிக்கச் சொன்ன கட்சிகளும், படம் எரித்த விவகாரம் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதிகாரமற்ற தேசிய நிறைவேற்று சபையில் ( National Executive Council) பங்காளிகளானால், போராடக்கூடாதென்பது எழுதப்படாத விதியா?.
மைத்திரிக்கு ஆதரவளிக்கச் சொன்னவர்களே, அரசிற்கு கடுப்பாக இருக்குமெனத் தெரிந்தும், வடமாகாண சபையில் ‘ இன அழிப்பு’ தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். இவைதவிர, ‘எமக்கு உரித்தானதை மட்டுமே நாம் கேட்கிறோமே தவிர, புதிதாக ஒன்றையும் உங்களிடம் கேட்கவில்லை’ என தமிழ் தேசத்தின் இறைமை குறித்து மிக இலகுவான மொழியில் அரசை நோக்கிக் கேட்கின்றார் வடக்கின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள்.
அதுமட்டுமல்லாது, வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா.வின் அரசியல் விவகார உயர் அதிகாரியிடம், இரு தேசங்களின் (Nation ) இணைந்த தீர்வு குறித்து பேசப்படல் வேண்டும் என்கிற அடிப்படையில் முதலமைச்சர் தனது கருத்தினை முன் வைத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் 13 வது திருத்தச் சட்டம் ‘போதுமான சர்வரோக நிவாரணி’ என்று நியாயப்படுத்தும் சில தமிழ் அரசியல் தலைவர்கள், விக்கினேஸ்வரன் அவர்களின் இக்கருத்தினை கவனிக்க வேண்டும்.
தவணை முறையில் மக்களின் நிலங்களை வழங்கும் அரசியல் அரங்கு ஒன்றினை, மைத்திரி- ரணில் அரசாங்கம் வடக்கில் திறந்து வைத்துள்ளது . அதாவது இராணுவத்தால் அடாத்தாக அபகரிக்கப்பட்ட 6500 ஏக்கர் நிலத்தில் சுமார் 1500 ஏக்கரில் ‘மீள்குடியேற்றம்'(?) மேற்கொள்ளப்போவதாக புனர்வாழ்வு அமைச்சர் சுவாமிநாதன் அவர்கள் கூறுகின்றார்.
அவர் காணி அமைச்சரோ அல்லது படைத்துறை அமைச்சரோ அல்ல. இந்தத் தமிழ் அரச முகம், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற முகம் மட்டுமே.
இங்குள்ள முதன்மையான பிரச்சினை என்னவென்றால், மக்களின் காணிகளை அவர்களிடம் திரும்பவும் ஒப்படைக்க வேண்டும். அதற்கான ஆதாரங்கள் யாழ்.அரச அதிபரின் காரியாலயத்தில் இருக்க வேண்டும். முன்பொரு காலத்தில் திருக்கோணமலை கச்சேரியிலுள்ள காணி ஆவணப் பகுதி திடீரென்று எரிந்தது போன்றதொரு நிலைமை, யாழ்.கச்சேரியில் நடைபெறவில்லை. ஆகவே புதிதாக எதையோ தேடுவது போல், தேர்தல்வரை காலத்தை இழுத்தடிக்கும் போக்கு மாற வேண்டும்.
காணாமல் போகடிக்கப்பட்டோர், சிறையில் வாடுவோர், நிலங்களை இழந்தோர் குறித்து கவலை கொள்ளாமல் ஆட்சிகளும் காட்சிகளும் மாறுகின்றன. புதிதாய் பூ மலரும் என்கிற கனவில், மக்களும் வாக்களிக்கின்றனர். மகிந்தர் காலத்தில் எல்.எல்.ஆர்.சி. மைத்திரி ஆட்சியில் உள்ளக விசாரணைப் பொறிமுறை. இந்த இரண்டையும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனை உணர்த்தும் வகையில் வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் போராடுகின்றார்கள்.
கொழும்பு அரசியல் களத்தை நோக்கினால், அங்கும் பல முரண்பாட்டுப்பூக்கள் மொட்டவிழத் தொடங்கியுள்ளன.
100 நாள் தேனிலவு முடிந்த கையோடு தேர்தலை நடாத்தாவிட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்கிறது ஜே.வி.பி.
இதுவரை கழிந்த நாட்களில் தமக்குத் திருப்தி ஏற்படவில்லை என்கிறது அரச பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய.
இவைதவிர, அரசியலமைப்பில் மாற்றமா? தேர்தலா? எது குறித்து முதலில் கவனிக்கப்பட வேண்டும் என்பதில் இரணில் – மைத்திரி அணிக்கிடையே கருத்துமோதல் ஆரம்பமாகியுள்ளது.
தேர்தல் காலத்தில், பிரச்சினையை உருவாக்குமெனக் கருதப்பட்ட ஐ.நா.அறிக்கையும் அமெரிக்கப் புண்ணியத்தில் செப்டெம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில், தமது கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளலாமென பலவீனமான கட்சி எதிர்பார்க்கும்.
இதில் யு.என்.பி.யைவிட மைத்திரி அணிக்கே உள்ளக பிரச்சினை அதிகம். ஆனாலும் பிரச்சினையை தோற்றுவிக்கக்கூடிய மகிந்த அணி பொறுமையாக இருந்து மைத்திரியின் தலைமையைப் பலப்படுத்தினால், நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம்.
பொதுவாகவே பலவீனமான சக்திகள் இணைந்து, பலமான சக்தியோடு மோதும் நிகழ்வினை இரண்டாம் உலக யுத்த காலத்தில் கூடப் பார்த்திருக்கிறோம். ஜனவரி 8 தேர்தல் அரங்கில் இந்நிகழ்வு இலங்கையில் நடந்தது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ‘ தேசிய அரசாங்கம்’ என்கிற பெயரில் இவ்விணைவு சாத்தியப்படுமா என்பதை தேர்தல் முடிவுகள் தெரிவித்துவிடும்.
தமிழ் மக்களைப்பொறுத்தவரை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் வலியுறுத்துவது போன்று, ‘நீதிக்கூடாகவே நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும்’ என்பதற்கான சாத்தியம் ஐ.நா.வின் ஊடாக ஏற்பட வேண்டுமாயின், நாடாளுமன்றத் தேர்தலில் யார் பலம்பெற வேண்டும் என்பதிலும் அது தங்கியுள்ளது என்பதுதான் உண்மை.
அனேகமாக யு.என்.பி பலமடைந்தால் அறிக்கை விவகாரம் இன்னும் பின்தள்ளப்படும். அதுமட்டுமல்லாது ‘உள்ளக விசாரணைப் பொறிமுறை போதும்’ என்று அமெரிக்கா மட்டுமல்ல,தென்னாபிரிக்காவும் கூறும். ஆழமாகப் பார்த்தால் புவிசார் அரசியலின் பிராந்திய சமநிலையே இதனைத் தீர்மானிக்கும் என்பதுதான் நிஜம்.
மறுபுறத்தில் ஸ்ரீ.ல.சு.கட்சி அணி வென்றால் தீர்மானமும், அறிக்கையும் உயிர்ப்புடன் இருக்க வாய்ப்புண்டு.
ஆக மொத்தம் இலங்கை மீதான தீர்மானங்களையும், விசாரணைகளையும் தீர்மானிப்பது சீனா தொடர்பான அமெரிக்க- இந்திய சர்வதேச அரசியல் மூலோபாயங்கள்தான் என்பதை மறுக்க முடியாது.
சனாதிபதி ஆட்சி முறைமையில், தேசிய நீரோட்ட வாக்குவங்கி அரசியலைத் தீர்மானிக்கும் குறிப்பிடத்தக்க சக்தியாக தமிழ் பேசும் மக்கள் இருந்தார்கள். கடந்த சனாதிபதித் தேர்தலில் அது நிரூபிக்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் அவ் வகிபாகம் இல்லையென்றே கூறலாம். இது குறித்த தனது சந்தேகத்தினை ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் வெளிப்படுத்தியுள்ளார்.
-http://www.pathivu.com