பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தால் இலங்கைத் தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் – தமிழிசை

THAMILISAIஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தால் இலங்கைத் தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ஆம் தேதி முதல் 3 நாள்கள் இலங்கை பயணம் மேற்கொள்கிறார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கை செல்வது இதுவே முதல் முறையாகும்.தமிழர்களிடம் இருந்து பிரித்துப் பார்க்க முடியாத நாடு இலங்கை. பிரதமரின் பயணத்துக்கு முன்பு அங்குச் சென்ற வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இலங்கைத் தலைவர்களுடன் விரிவாக பேச்சு நடத்தியுள்ளார்.இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்த சுஷ்மா ஸ்வராஜ், மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

எல்லைத் தாண்டினால் மீனவர்களை சுடுவோம் என பேசிதற்காக ரணில் விக்ரமசிங்கே வருத்தம் தெரிவித்ததையும் நாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ளார் சுஷ்மா ஸ்வராஜ்.இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது ஆட்சி அதிகாரம் இருந்தும் அதனைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தவர்கள் இப்போது மோடியின் இலங்கை பயணத்தை குறை சொல்கிறார்கள்.இலங்கைப் பிரச்னையை அரசியலாக்கி தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு விரைவில் கிடைக்கவிருக்கும் நல்ல தீர்வை கெடுத்துவிட வேண்டாம் என தமிழக அரசியல் தலைவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

மத்தியில் மோடி தலைமையில் பாஜக அரசு அமைந்த பிறகு இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்கள் மீட்கப்பட்டனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் உடனுக்குடன் விடுவிக்கப்பட்டனர். மோடி ஆட்சி அமைந்த பிறகு தமிழக மீனவர் ஒருவர்கூட சுட்டுக் கொல்லப்படவில்லை.இலங்கை அரசிடம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ள மீனவர் பிரச்னைக்கும், இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கவும் பிரதமர் மோடியின் பயணம் வழிவகுக்கும். மோடியின் இந்த முயற்சிக்கு தமிழக அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

-http://www.pathivu.com

TAGS: