எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை சுடும் அதிகாரம் உண்டு; ஆனால், பிரயோகிக்க மாட்டோம்: அஜித் பி பெரேரா

ranil_wickremesinghe_001இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழையும் இந்திய மீனவர்களை சுடுவதற்கு சட்டத்தில் அதிகாரமுள்ளது. ஆனாலும், அதனை பிரயோகிக்க மாட்டோம் என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்து ஊடகங்களில் திரிபுபடுத்தப்பட்டிருப்பதாகவும், சட்டத்தில் அதிகாரம் இருந்த போதிலும் நட்பு நாடான இந்திய மீனவர்களை நாம் சுட மாட்டோம் என்பதுதான் பிரதமர் கூற்றின் உட்கருத்து எனவும் அவர் விளக்கமளித்தார்.

இதே வேளை, இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தினைத் தொடர்ந்து இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு இணக்கப்பாடு எட்டப்படுமென உறுதியாக நம்புவதாகவும் பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய மீனவர்கள் குறித்து இந்தியாவின் தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி தொடர்பில் அச்சு ஊடகங்கள் திரிபுபடுத்தி வழங்கிய செய்தி தமிழ் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறித்து பிரதி வெளிவிவகார அமைச்சர் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.

இலங்கை மீனவர்களின் உரிமை மற்றும் வளங்களை பாதுகாப்பது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கடமை. அதனை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை அரசாங்கம் விட்டுக்கொடுக்காது. எந்தவொரு நாட்டிற்கும் கடல் எல்லையுண்டு. அதனை சட்டவிரோதமாக மீறுவது குற்றச்செயலாகும். இந்தக் கடல் எல்லைச் சட்டம், எல்லை மீறு வோரை சுடுவதற்கான அதிகாரத்தைக் கொண்டுள்ளதென்றே பிரதமர் கூறியிருந்தாரெனவும் அவர் விளக்கியுள்ளார்.

மேலும், தமிழக மீனவர்கள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் எந்தவகையிலும் இலங்கை- இந்திய நட்புறவை பாதிக்காது என்று உறுதியாகக் கூறிய பிரதியமைச்சர் திட்டமிட்டபடி இந்திய பிரதமர் மோடி எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை வருவாரெனவும் தெரிவித்துள்ளார்.

-http://www.puthinamnews.com

TAGS: