அபகரிக்கப்பட்ட தமிழர்களின் இதயம்! வெலிஓயாவான மணலாறு. – ஆதாரங்கள் நிறைந்த நூல் முதலமைச்சரிடம் கையளிப்பு!

தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட காணி அனுமதிப்பத்திரங்கள், தோம்பு காலத்து உறுதிகள், சிங்கள திணிப்பின் நிழற்படங்கள், சிங்கள பெயர்மாற்ற விபரம் பாதிக்கப்பட்டு மக்களின் பெயர் விபரம் என ஆதாரங்கள் நிறைந்த வெலிஓயாவான மணலாறு நூல் கடந்த மாகாணசபையின் 26 வது அமர்வில் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமர்வில் இது தொடர்பில் தனது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றிய வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது உரையின் நிறைவில் முதலமைச்சரிடம் குறித்த நூலை கையளித்ததோடு இதற்கும் மேலாக ஆதாரங்கள் அவசியப்படும் எனில் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து அவர்களின் உதவியுடன் அவசியமான மேலதிக ஆவணங்களை பெற்றுத்தருகிறேன் எனவும் உறுதியளித்திருந்தார்.

இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,

 

கடந்த 2015-03-17 அன்று நடைபெற்ற வடக்கு மாகாணசபையின் 26வது அமர்வில் மணலாறு பகுதியில் காலங்காலமாக நடைபெற்றுவரும் சிங்கள அடையாள திணிப்பு தொடர்பில் தனது கருத்துக்களை வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் முன்வைத்திருந்தார்.

 

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

 

கொக்குத்தொடுவாய் கருநாட்டுக்கேணி மற்றும் கொக்கிளாய் மக்களின் வாழ்வாதார நிலங்கள் விடுவிக்கப்பட்டு அம்மக்களிடம் வழங்கப்படவேண்டும் என பலதடவைகள் இச்சபையின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறேன்.

அயராத முயற்சியின் பலனாக இன்று அந்நிலங்களுக்கான ஆதாரங்களை சேகரித்து நூல்வடிவில் இன்று கொண்டுவர முடிந்திருக்கிறது.

எமது இதயபூமியான மணலாற்றில் உள்ள காணிப்பகுதிகள் யார்யார் பெயரில் எத்தனை ஏக்கர் காணப்படுகின்றன, அவர்களின் வாரிசுகளின் பெயர் விபரம், அரச வர்த்தமானிப்பத்திரிகை ஆவணங்கள், ஏற்கனவே தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த காணி அனுமதிப்பத்திரங்கள், தோம்பு காலத்து உறுதிகள் மற்றும் தமிழர் பாரம்பரிய அடையாளங்களை அழித்து அவ்விடங்களில் பௌத்த விகாரைகள் உள்ளட்ட பல சிங்கள பௌத்தாதிக்க அடையாளங்களை நிறுவியதற்கான நிழற்படங்கள் பாரம்பரிய தமிழ்ப்பெயர்கள் நீக்கப்பட்டு அவற்றுக்கு வழங்கப்பட்ட புதிய சிங்களப்பெயர் விபரம் உள்ளடங்காலான நூலாக இந்த வெலிஓயாவான மணலாறு நூல் காணப்படுகிறது.

வாழ்வாதார வளங்களை இழந்து ஒவ்வொருநாளும் தம் இருப்புக்காய் போராடிக்கொண்டிருக்கும் அந்த மக்கள் சார்பாக இந்நூரை கௌரவ முதலமைச்சர் – நீதியரசர் அவர்களிடம் கையளிக்கிறேன். தங்களின் காலத்திலேயே இந்த மக்களுக்கான நிலங்கள் விடுவிக்கப்பட்டு ஒப்படைக்கப்படவேண்டும்.

தங்களின் முன்னெடுப்பிற்கு மேலதிகமாக இன்னும் பல ஆதாரங்கள் அவசியப்படுமெனில் அவற்றையும் எம் மக்களின் உதவியுடன் அவற்றையும் பெற்றுத்தருகிறேன்.

சட்டரீதியாகவோ நிர்வாகரீதியாகவோ எவ்வகையிலாயினும் அம்மக்களுக்கான விடிவு கிட்டவேண்டும்” என்று தனது கருத்துக்களை சபையில் முன்வைத்து குறித்த நூலினை முதலமைச்சரிடம் கையளித்திருந்தார்.

-http://www.pathivu.com

TAGS: