கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்குவது நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தலானது: உதய கம்மன்பில

udaya-gammanpila-100x80தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்குவது நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தலானது என்று பிவித்துரு(தூய) ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோர் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கும்போதே உதய கம்மன்பில மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவது இனவாதத்தை தோற்றுவிக்கும். கடந்த காலத்தில் அமிர்தலிங்கத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கியதன் மூலம் ஏற்பட்ட விளைவுகள் பற்றி அறிவோம். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது நல்ல விடயங்களை விட கெட்ட விடயங்களுக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்து பெரிதாக்கப்பட்டது.

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கினால் பிரதமரை விட எதிர்க்கட்சித் தலைவரே பிரபலமடைவதுடன், சர்வதேச ரீதியில் எதிர்க்கட்சியின் பிரசாரம் வெற்றியளித்துவிடும். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படக்கூடாது.” என்றுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் நிலையில் தினேஷ் குணவர்த்தனவுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் வலியுறுத்தினர்.

-http://www.puthinamnews.com

TAGS: