இலங்கையில் போரின் போது காணாமல் போனோரை கண்டுபிடிக்கும் செயற்பாட்டில் உதவத் தயார் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணிப்பாளர் டொமினிக் ஸ்டில்ஹாட் இலங்கைக்கு ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்தித்தார்.
இந்தநிலையில் இந்த விஜயம் குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
காணாமல் போனோரின் உறவினர்கள் மத்தியில் பணியாற்றிய அனுபவம் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துக்கு உள்ளது.
எனவே அதனை பயன்படுத்தி இலங்கையில் காணாமல் போனோரை கண்டுபிடிக்க தம்மால் உதவ முடியும் என்று ஸ்டில்ஹாட் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபரில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம், 1990ம் ஆண்டு முதல் காணாமல் போனோரின் உறவினர்களின் மாதிரிகளை கொண்டு நாடளாவிய ரீதியில் தேடுதல்களை நடத்தியது.
இதன்போது சங்கத்துக்கு 16ஆயிரத்து 100 முறைப்பாடுகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com