தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு தற்போதைய அரசாங்கம் ஊக்குவிக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று ஊடக பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் உண்மையானதும், நிரந்தரமானதுமான நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தென்னாபிரிக்கா போன்று உண்மையை கண்டறிய விசேட ஆணைக்குழுவொன்றும் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டியுள்ளதினால் தேசிய ஐக்கிய தலைமையகம் அமைக்கப்படவுள்ளதாகவும், இந்த திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பிரதமர் ஊடக பிரதானிகளிடம் கேட்டு கொண்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அறிக்கை மற்றும் அதனை கொண்டு வந்த நாடுகள் புலம்பெயர் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதுடன், இந்த பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்து கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மகிந்த அரசாங்கம் ஐ.நா ஆணையாளர் நாயகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் உள்ளிட்ட விடயங்களே மனித உரிமைகள் பேரவையில் பிரேரணையை முன்வைப்பதற்கு காரணமாக அமைந்தது எனவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக நாம் சர்வதேச சமூகத்தின் காலடியில் விழ வேண்டியதில்லை எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் தற்போது பயங்கரவாத செயல்கள் ஊடுருவாமல் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதினால் பயங்கரவாதம் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதுடன்,
தற்போது உலகலாவிய ரீதியில் தலைதூக்கி வரும் பயங்கரவாதம் குறித்து நாம் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட நபர்களை சட்டத்திட்டங்களுக்கேற்ப கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது தொடர்பில் தவறான விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
19வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை நிறைவேற்றி கொள்வதற்காக சர்வஜன வாக்கெடுப்பொன்றை பெற்று கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.
இது தொடர்பில் அனைத்து சட்ட ஆலோசனையின்படி பாராளுமன்றத்தில் நிறைவேற்றி கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், நீதிமன்றம் பரிந்துரை செய்யும் திருத்தங்களை மேற்கொள்ள தயார் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் துறைமுக நகர் திட்டம் தொடர்பிலான விசாரணை அறிக்கை தற்போது கிடைக்பெற்றுள்ளதினால் அவ் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களின் பொருட்டே எதிர்காலத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடக பிரதானிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com