சந்திரிகா ஆணைக்குழு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வு காணும்!– இரா. சம்பந்தன் நம்பிக்கை

Sampanthan _Chandrikaமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் அமைக்கப்படவுள்ள ஆணைக்குழு, இந்த ஆண்டு இறுதிக்குள், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஆற்றலைக் கொண்டிருக்கும் என்று நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான எல்லா விபரங்களையும் அவரிடம் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.

இந்த பிரச்சினைகள் அர்த்தபூர்வமான வகையில், உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்.

1994ம் ஆண்டு, சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது, தமிழ் மக்களின் குறைகளுக்குத் தீர்வு காண்பதில் அக்கறை கொண்டிருந்தார்.

அந்தப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சிகளையும் ஆரம்பித்திருந்தார். எனினும் அதை வெளிப்படையாக காண முடியவில்லை.

முன்னைய அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு, புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததில் இருந்து, அரசியல் அரங்கில் பல மாற்றங்கள் இடம்பெறுகின்றன.

சிங்கள மக்களும் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்திருந்தார்கள், தமிழ் மக்கள் பெரும்பான்மையாக அவரை ஆதரித்திருந்தனர். ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன பெற்ற வெற்றியினால் எல்லோரும் நன்மை பெற வேண்டும்.

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதிப்பளிப்பார் என்று நம்புகிறேன். அந்த கோரிக்கைகளை வென்றெடுப்பதில் நாம் தெளிவான கவனம் செலுத்த வேண்டும்.

பொருத்தமான அரசியல் தீர்வு காணுமாறு அனைத்துலக சமூகம் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகிறது என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: