முன்னாள் போராளிகளுக்கு விடுக்கப்படும் தொடர் அச்சுறுத்தல்களை புதிய அரசு நிறுத்த வேண்டும்!

ltteமுன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தினரால் விடுக்கப்படும் தொடர் அச்சுறுத்தல்களை ஆட்சிக்கு வந்திருக்கின்ற புதிய அரசாங்கம் நிறுத்திக் கொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்று யாழ் வந்த அவுஸ்திரேலியத் தூதுவர் ரொபின் மூடியிடம் யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் யாழ் வந்த அவுஸ்திரேலிய நாட்டுத் தூதுவர் யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையினை ஆயர் இல்லத்தில் காலை 10 மணியளவில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இச்சந்திப்பு தொடர்பில் யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள அண்மைகால அரசியல் மாற்றத்தின் பின்னர் யாழ்.மாவட்டம் எவ்வாறு உள்ளது? யாழ்.மாவடத்திலும் நாட்டிலும் ஏற்பட்ட அரசியல் மாற்றம் பிரதிபலிக்கின்றதா? என தூதுவர் கேட்டிருந்தார்.

மகிந்தவின் ஆட்சி மாறி மைத்திரியின் ஆட்சி வந்துள்ளது. இப்புதிய ஆட்சியில் தற்போது வரை பெரிதாக மாற்றம் ஏதும் ஏற்படவில்லை சிறு சிறு மாற்றங்களே ஏற்பட்டுள்ளன.

இராணுவம் பிடித்து வைத்துள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதாக கூறி சுமார் ஆயிரம் ஏக்கர் அளவு நிலப்பரப்பினை முதற்கட்டமாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்து அதில் தற்போது நானூறு ஏக்கர் அளவு நிலப்பரப்பினை விடுவித்துமுள்ளனர்.

இதனை விட மேலும் ஒரு ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பினை விடுவிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

அண்மையில் உயர்பாதுகாப்பு வலயத்தில் விடுவிக்கப்பட்ட நிலங்களிற்கு நான் சென்று பார்த்திருந்தேன். விடுவிக்கப்பட்ட தமது காணிகளை மக்கள் துப்பரவு செய்து அதில் குடியேறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். தமது இடம் தமது நிலம் என்ற உணர்வு அந்த மக்களிடையே உள்ளதனை அவதானிக்க முடிகின்றது.

அறிவித்த படி முழு அளவு காணிகளையும் அரசாங்கம் விடுவிக்காவிடினும் எதிர்வரும் காலங்களில் விடுவிப்பார்கள் என ஓரளவு எமக்கு நம்பிக்கையளிக்கின்றது. என தெரிவித்திருந்தேன்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் வடபகுதிக்கு விஜயம் செய்து பலதரப்பட்டவர்களினையும் சந்தித்து சென்றிருந்தார். பிரதமரின் வடக்கு வருகை ஏதும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதா? என தூதுவர் என்னிடம் கேட்டிருந்தார்.

அதற்கு, பிரதமர் இங்கு வந்து பலரை சந்தித்து சென்றுள்ளமை மகிழ்ச்சியானதே எனினும் எமது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை ரணில் சந்திக்காமல் சென்றுள்ளமை எமக்கு வருத்தமளிக்கின்றது.

அதனால் ரணிலின் பயணம் எமக்கு திருப்தியளிக்கவில்லை.

எனினும் இங்கு வந்த ரணில் எமது மக்களின் பலதரப்பட்ட பிரச்சனைகளினையும் கேட்டறிந்து சென்றுள்ளார். இதன் போது இங்குள்ள இராணுவத்தின் இறுக்கமான கட்டமைப்புக்களினையும் அவர் பார்த்து சென்றுள்ளார். மக்கள் செய்ய

வேண்டியவற்றை இராணுவம் செய்து வருகின்றது. இவை இராணுவம் செய்ய வேண்டியவை அல்ல என அவர் அறிந்து கொண்டுள்ளார் என நம்புகின்றோம்.

முன்னாள் போராளிகள் இராணுவத்தினால் தற்போதும் கண்காணிக்கப்படுவதாகவும் அச்சுறுத்தப்படுவதாகவும் முன்னாள் போராளிகள் ரணிலிடம் முறையிட்டுள்ளனர். அதனை பிரதமர் கவனமாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தினரால் விடுக்கப்படும் தொடர் அச்சுறுத்தல்களை ஆட்சிக்கு வந்திருக்கின்ற புதிய அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளேன்.

அடுத்து மீனவர் பிரச்சனை தொடர்பில் கேட்டறிந்த அவர் இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பில் தனிப்பட்டவர்கள் பேசித் தீர்க்க முடியாது என்றும் இதனை இரு நாட்டு அரசாங்கங்களுமே பேசித் தீர்க்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வீட்டுத்திட்டத்தினை அவுஸ்திரேலிய அரசு கிளிநொச்சியில் நடைமுறைப்படுத்தி வருவதாகவும் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கான வாழ்வாதார திட்டங்களை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.

சிங்கள தமிழ் மக்களிடையே புரிந்துணர்வினையும் உடன்பாட்டினையும் ஏற்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கைகளினையும் முயற்சிகளினையும் மேற்கொள்ளும் என தூதுவர் தெரிவித்ததாக யாழ்.ஆயர் மேலும் தெரிவித்தார்.

-http://www.tamilcnnlk.com

TAGS: