வடமாகாண விடுதலையை மறந்து முதலமைச்சர் சர்வதேசத்திடம் வசை பாடுகிறார்!- அரசாங்கம் குற்றச்சாட்டு

wigneswaran12தேசிய அரசாங்கத்தின் உதயத்துடனேயே வட மாகாணத்திற்கு விடுதலை கிடைத்துள்ளது. அதை மறந்து வடமாகாண முதலமைச்சர் சர்வதேசத்திடம் வசைபாடிக் கொண்டிருக்கின்றார் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழ் மக்களை அங்கீகரித்து உரிமைகளை வழங்கியது நாம் என்பதை தமிழ் தலைமைகள் மறந்து விட வேண்டாம் எனவும் அரசு தெரிவிக்கிறது.

வட மாகாணத்தினை கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுவதாக வடமாகாண முதலமைச்சர் ஐ.நா. பிரதி நிதிகளிடம் தெரிவித்துள்ள நிலையில் அரசாங்கத்தின் கருத்தினை வினவிய போதே அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவடைந்தவுடன் வடமாகாணம் விடுதலையடையாது கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் இராணுவத்தின் பிடியில் சிக்கிக் கிடந்தனர்.

வடக்கு மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டும் சொத்துக்கள் பறிக்கப்பட்டும் அம் மக்களை அடிமைகளாக நடத்தியமை தொடர்பில் தமிழ் தலைவர்களே கடந்த காலத்தில் குரல் எழுப்பி வந்தனர்.

இந்நிலையிலேயே கடந்த ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி தேர்தலுடன் வடக்கு விடுதலையடைந்தது.

இம்முறைத் தேர்தலில் வடக்கு வாழ் தமிழ் மக்கள் தமது முழுமையான ஆதரவினை எமக்கு கொடுத்தமையும் எமது வெற்றிக்கு உதவியமையும் வடக்கு மக்களின் ஆதங்கத்தினை முழுமையாக விளங்கிக் கொள்ள முடிந்தது.

அதேபோல் எமது அரசாங்கம் உதயமான பின்னரே வடக்கில் இத்தனை ஆண்டுகளாக அபகரிப்பில் இருந்து தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு தமிழ் மக்களிடையே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இராணுவ முகாம்களில் இருந்து பொதுமக்களின் காணிகளை அவர்களிடமேயே ஒப்படைத்திருக்கின்றோம்.

அதுமட்டுமின்றி நிவாரணங்கள் அனைத்தும் தமிழ் பேசும் வடக்கு மக்களையும் உள்ளடக்கியே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

-http://www.tamilwin.com

TAGS: