கிழக்கு முதலமைச்சரை கூட்டமைப்பு ஏன் விட்டுக் கொடுத்தது?

east-cmகிழக்கு முதலமைச்சர் விடயம் என்பது இன்னும் மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பது போல்தான் உள்ளது. காரணம் அம்பாறை மாவட்டத்தில் ஒரு சில தமிழ் மாகாண சபை உறுப்பினர்களால் தமிழ் மக்கள் மத்தியில் இன்னும் ஒரு விதமாக உசுப்பேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

குறிப்பாக கல்முனைத் தொகுதி தமிழ் மக்கள் மத்தியில் முஸ்லிம் இனத்தின் மீது ஒரு காழ்ப்புணர்ச்சியை உருவாக்கி வருகின்றார்கள்.

பாடசாலை நிகழ்வுகள் மற்றும் ஏனைய சாதாரண நிகழ்ச்சிகளில் கூட தமிழ் மக்கள் மத்தியில் இந்த மகாண சபை உறுப்பினர்; உரையாற்றும் போது கிழக்கின் முஸ்லிம் முதலமைச்சர் விடயமாகவே ஏதோ முஸ்லிம் மக்கள் இந்த முதலமைச்சர் பதவியைப் பறித்து எடுத்து விட்டார்கள் போன்று தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் உசுப்பேற்றப்படுவது போன்றும் ஒரு இனவிரிசலை ஏற்படுத்தும் நோக்கோடும் தமிழ் மக்கள் மத்தியில் பரப்புரை செய்யப்பட்டு வருகின்றது.

கிழக்கு முஸ்லிம் முதலமைச்சர் விடயத்தில் நடந்தது என்ன வெளிவராத உண்மைகள்

கிழக்கு முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்புக்கு முதலமைச்சர் கிடைக்கவில்லையென்றால் சபையைக் கலைத்து விடும்படி அதிபர் சிறிசேனவிடம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.

ஆனால் புதிய அரசு வந்த வேகத்தில் கிழக்குத் தேர்தலை எதிர்கொள்ள விரும்பவில்லை. அதனால் மு.கா முதலமைச்சர் விடயத்தில் விட்டுக் கொடுக்கத் தயயரில்லை என்ற முடிவுக்கு வந்தது.

காரணம் மு.கா முதலமைச்சர் பெறவில்லையென்றால் மு.கா.வுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதை கூட்டமைப்பிடம் மு.கா. தெரிவித்திருந்தது. ஆக முஸ்லிம்களை ஏமாற்றவே முஸ்லிம் முதலமைச்சர் என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கிழக்கு முஸ்லிம் முதலமைச்சர் நியமனத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள்ளே ஒரு பாரிய எதிர்ப்பு மற்றும் முறுகல் நிலை ஏற்பட்டது என்பதை மக்கள் புரிந்திருப்பீர்கள்.

காரணம் கிழக்கில் ஜெமீல் என்பவர் தனக்கு முதலமைச்சர் கிடைக்கவில்லை என்பதற்காக சாய்ந்தமருதுவில் மு. கா தலைவர் ஹக்கீமுக்கு எதிராக ஜெமீலின் ஆதரவாளர்கள் ஹக்கீமின் பொம்மை கட்டி எரித்து பாரிய ஆர்ப்பாட்டத்தைச் செய்திருந்தர்கள்.

இதன் எதிரொலி உடனடியாக ஹக்கீம் மாகாண சபை உறுப்பினர் ஜெமீலை கட்சியில் இருந்து இடைநிறுத்தினார். 24 மணிநேரத்திற்குள் ஜெமீலுக்கு பாவமன்னிப்பு வழங்கப்பட்டு ஜெமீல் மீதான தடையுத்தரவு நீக்கப்பட்டது.

ஜெமீலும் சாய்ந்தமருது கொடும்பாவி எரிப்புக்கும் தனக்கும் சம்மந்தமில்லையென்று அறிக்கை விட்டார்.அத்துடன் அவரும் அடங்கி விட்டார்.விடயமும் அடங்கி விட்டது.

மு.கா. சின் பின்கதவு வழி

முதலில் ஒரு விடயத்தை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் இந்த முதலமைச்சர் பதவியை அடைவதற்காக பெரும் பணப் பட்டுவாடா செய்யப்பட்டது.மு.கா சிக்குள் இந்த முதலமைச்சர் விடயத்தில் பாரிய எதிர்ப்புக் கிளம்பிய போது சிலருக்கு முள்ளுத் துண்டு வீசப்பட்டதும் வாயடைத்து விட்டார்கள்.

மறுபுறம் மஹிந்த அணி கொண்ட அம்பாறை முன்னாள் கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க.முன்னாள் அமைச்சர் உதுமாலெவ்வை அணி கொண்ட 10 மகாண சபை உறுப்பினர்களிடம் மு.கா.முதலமைச்சர் பதவி பெறுவது சம்பந்தமாகப் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்தப் பேச்சுவார்த்தையில் மாகாண அமைச்சரவையில் எவ்விதமான மாற்றம் செய்வதில்லை என்றும் ஆனால் முதலமைச்சர் நஸீப் மஜீட்டை நீக்கிவிட்டு நஸீர் அஹமட்டை நியமனம் செய்ய வேண்டும் அதற்க்கு உங்களின் ஆதரவு வேண்டும் என்று பேசப்பட்டது.

அதற்கு மஹிந்தர் அணியும் இணக்கம் தெரிவித்து அவர்களின் கையொப்பங்கள் அடங்கிய சம்மதக் கடிதத்தை புதிய ஆளுனர் ஒஸ்ரின் பெர்னாண்டோவிடம் கையளிக்கப்பட்டது.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் மு.கா.இணைந்துதான் ஆட்சியடைப்பது என்றும் யார் யாருக்கு என்னென்ன அமைச்சுப் பதவி பெறுவது என்ற பேச்சுவார்த்தை நடந்த கொண்டிருக்கும் போதுதான் கூட்டமைப்புக்குத் தெரியாமல் மஹிந்த அணியிடம் அப்படியான சம்மதக் கடிதம் பெறப்படுகின்றது.

சம்மதக் கடிதம் ஆளுனரிடம் கையளிக்கப்பட்டவுடன் ஒரு சனி அல்லது ஞாயிறு மாலை சுமார் 6 அணிக்கு திருகோணமலையில் ஆளுனரிடம் ஏறாவூர் நஸீர் அஹமட் முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொள்கின்றார். மாலை 6.30 மணிக்கு ஏறாவூரில் மட்டும் பட்டாசு வெடிக்கின்றது.

இதன் பின்னர்தான் கூட்டமைப்புக்கும் மு.கா அணிக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில்தான் மட்டக்களப்பில் கூட்டமைப்பு எம்பி ஒருவர் மக்கள் மத்தியில் உசுப்பேற்றினார் நாங்கள் எந்த நிலையிலும் கிழக்கில் முதலமைச்சர் விடயத்தில் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் இடமளிக்கமாட்டோம். கிழக்கில் தமிழ் முதலமைச்சர் பெறாமல் விடமாட்டோம் நாங்கள் இரத்தம் சிந்தி போராடிப் பெற்றது என்றெல்லாம் கூவினார்கள்.

இதன் பின்னர் தொடர்ந்து கூட்டமைப்பினரோடு மு.கா. பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. கிழக்கில் ஆட்சியமைப்பது குறித்து 15 நாட்களாக கூட்டமைப்பும் மு.கா அணியும் பே;சுவார்த்தை செய்து வந்தது.

இறுதியாக மு.கா வுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுத் தருவது என்ற விட்டுக் கொடுப்புடன் கூட்டமைப்புக்கு கல்வி,காணி அமைச்சும் விவசாயத்துறை அமைச்சும் பிரதித் தவிசாளர் பதவியும் வழங்குவது என்ற இணக்கப்பாட்டுக்கு கூட்டமைப்பு வந்தது. மு.கா. அணியும் ஏற்றுக் கொண்டது.

பாருங்கள் கூட்டமைப்புடன் இணக்கப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு கூட்டமைப்புக்குத் தெரியாமல் பின்கதவு வழியாக முதலமைச்சரை மு.கா பெறுகின்றது. மறுபுறம் மஹிந்த அணியிடம் எவ்விதமான அமைச்சரவையும் மாற்றம் செய்வதில்லை என்ற உறுதிமொழியுடன் அவர்களின் ஆதரவு பெற்று ஆசைகாட்டி மோசம் செய்யப்படுகின்றது.

கூட்டமைப்பும் மு.கா சின் உறுதிமொழியை அமுத வாக்காகவும் வேத வாக்காகவும் நம்பி ஆமாசாமி போட்டார்கள். நம்பிக்கைதானே வாழ்க்கை நம்பினார்கள். ஏமாந்தார்கள்.

அதன்பின்பு தான் கூட்டமைப்பு கோரிய கூட்டமைப்புக்கு வழங்குவதாக உறுதி கூறப்பட்ட கல்வி மற்றும் காணி அமைச்சர்; பதவியை ஏற்கனவே சபையின் தவிசாளராக இருந்த திருகோணமலை நகரைச் சேர்ந்த ஆரியபதி என்ற பெண்மணி ஆளுனரிடம் சத்தியப் பிரமாணம் செய்து கொள்கின்றார்.

ஏற்கனவே முதலமைச்சர் நஸீரின் உத்தரவுக்கிணங்க ஏற்கனவே கல்வி அமைச்சராக இருந்த அம்பாறை விமலவீர மற்றும் அமைச்சர் உதுமாலெவ்வை ஆகியோர்கள் தங்களது அமைச்சர் பதவிகளை இராஜினாமாச் செய்து விட்டு அமைச்சின் வாகனங்களையும் திருகோணமலையில் ஒப்படைத்து விட்டு அடுத்த கட்ட வியூகம் அமைப்பதில் ஈடுபட்டார்கள்.

இப்போது கூட்டமைப்புக்கு வழங்குவதாக இணக்கம் காணப்பட்ட கல்வி காணி அமைச்சை ஆரியபதி ஏற்றுக் கொண்ட பின்பு கூட்டமைப்பு மீண்டும் மு.கா.சிடம் இரண்டாவது தடவையாக ஏமாந்து நிற்கின்றது. குழம்பி நிற்கின்றது.

கூட்டமைப்புத் தலைவரின் வீடுதேடி வந்த ஆட்சி

இந்த நிலையில்தான் அம்பாறை விமலவீர மற்றும் அதாவுல்லா அணியான உதுமாலெவ்வை, பிள்ளையான் ஆகியோரை உள்ளடக்கிய மஹிந்த அணியான 10 பேர் அடங்கிய மாகாண சபை உறுப்பினர்கள் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தனை திருமலையில் அவரது இல்லத்தில் நேரடியாகச் சந்தித்து தாங்கள் மு.கா.க்கு கொடுத்துள்ள ஆதரவை வாபஸ் பெற்றுள்ளோம் கூட்டமைப்பும் நாங்களும் ஆட்சி அமைப்போம். நாங்கள் 10 பேர் உள்ளோம் கூட்டமைப்பு 11 பேர் உள்ளது கூட்டமைப்பு முதலமைச்சர் பதவி உ;பட விரும்புகின்ற அமைச்சையும் பெற்றுக் கொள்ளலாம் ஆட்சி அமைப்போம் என்று மன்றியிட்டார்கள்.

இந்த நிலையில்தான் முன்னாள் அமைச்சர் உதுமாலெவ்வை முதலமைச்சராம் என்ற கதையொன்று வேகமாக அக்கரைப்பற்று. அட்டாளைச்சேனைப் பகுதியில் பரவியது. மு.கா ஆதரவாளர்கள் மத்தியில் பதற்றம் நிலவியது.இந்த நிலையில்தான் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது.

அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் ஆரியபதி தனது கல்வி,காணி அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்தார். அதன் பின்பு கூட்டமைப்புக்கு ஏற்கனவே பேசப்பட்டது போன்று அவர்கள் கோரிய இரண்டு அமைச்சுக்களும் பிரதி தவிசாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் காணி அமைச்சு மட்டும் கூட்டமைப்புக்கு வழங்கப்படவில்லை.

இந்த அமைச்சுப் பதவிகள் என்பது கூட்டமைப்பு தானாக விரும்பிப் பெறவில்லை. ஆனால் கிழக்கில் சமூக நல்லிணக்கம்.இன ஒற்றுமை, சமூக இணக்கம் மற்றும் சமூக முன்னேற்றம் போன்ற உயர்ந்த நோக்கத்திற்காக கூட்டமைப்பின் விட்டுக் கொடுப்பினால்தான் இந்த முஸ்லிம் முதலமைச்சர் பதவி அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

கிழக்கில் கூட்டமைப்பு விரும்பாத ஆட்சி அமையாது என்றும் யார் ஆட்சி அமைத்தாலும் கூட்டமைப்பின் ஆசீர்வாதமின்றி ஆட்சி அமைக்க முடியாது என்றும் நாங்கள் ஏற்கனவே பல கட்டுரைகளில் பதிவு செய்திருந்தோம். கூட்டமைப்பு நினைத்தால் அடுத்த நிமிடமே ஆட்சி அமைத்திருகக்லாம். இப்போதும் அமைக்கலாம். அதற்கான பெரும் வாய்ப்பு இன்னும் உள்ளது.

ஏன் விமலவீர அணி கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் வீடு தேடிச் சென்று ஆட்சி அமையுங்கள் என்று கோரிய போதுகூட கூட்டமைப்பு நினைத்திருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம். ஆனால் தலைவர் சம்பந்தன் அதை விரும்பவில்லை.

கூட்டமைப்பு என்பது பதவிக்கும் பட்டத்திற்கும் ஆலாப் பறக்கின்ற கூட்டமல்ல என்பதையும் அதிகாரத்திற்கு அலைகின்ற கூட்டமல்ல என்பதையும் புடம்போட்டுக் காட்டி கிழக்கில் முஸ்லிம் தமிழ் இன உறவுக்காகவும் இன முறுகலைத் தடுக்கும் நோக்கில்தான் இந்த முஸ்லிம் முதலமைச்சர் பதவி முஸ்லிம் ஒருவருக்கு விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. இல்லை கூட்டமைப்பு போட்ட முதலமைச்சர் பதவி என்ற பிச்சையாகவே பார்க்கப்படுகின்றது.

ஒருவர் பதவி மோகத்தின் உச்ச கட்டத்தில் ஆசைப்பட்டு பின்கதவு வழியாக குறுக்கு வழியாக அடைந்த பதவியை பறித்தெடுக்கும் ஈனச் சாதியல்ல கூட்டமைப்பு, என்பதை முஸ்லிம் தமிழ் மக்கள் பரிந்து கொள்ள வேண்டும்.

கூட்டமைப்பு என்பது மு.கா சின் முதலமைச்சர் பதவியை பறித்து விட்டது என்ற ஒரு பிரச்சாரத்தை முஸ்லிம் மக்கள் மத்தியில் எடுத்து விடலாம். அதனால் எங்காவது ஒரு இன முறுகல் நிலை உருவாகலாம். அதன் மூலமாக இரண்டு இனமும் அடித்துக் கொள்ளக் கூடிய நிலை உருவாகலாம். அதன் மூலமாக மஹிந்த அணி மார்தட்டலாம். அத்துடன் மஹிந்த ஆதரவு படையினர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இனவிரிசலை அதிகரிக்கும் செயல்களில் ஈடுபடலாம்.  புதிய அரசுக்கு ஒரு தர்மசங்கடம் உருவாகலாம். இவைகளைக் கருத்தில் கொண்டுதான் மிகவும் அவதானமாக கூட்டமைப்பு இந்த விடயத்தைக் கையாண்டுள்ளது. கூட்டமைப்பின் விட்டுக் கொடுப்பு என்பது கிழக்கில் பாரிய இனவிரிசலைத் தடுத்துள்ளது.

இவைகளை புரிந்து கொள்ளாமல் அல்லது தெரிந்தும் தெரியாதது போல் இருந்து கொண்டு முஸ்லிம்கள் முதலமைச்சர் பதவியை அபகரித்து விட்டார்கள் போன்று ஒரு மாகாண சபை உறுப்பினர் தமிழ் மக்கள் மத்தியில் உசுப்பேற்றி வருகின்றார்.

எந்த உயர்ந்த நோக்கத்திற்காக கூட்டமைப்பு விட்டுக் கொடுத்ததோ அந்த நோக்கத்தைச் சிதறடிக்கும் விதமாக அந்த உறுப்பினர் பள்ளிக்கூட நிகழ்வு மற்றும் விளையாட்டு நிகழ்வுகளிலும்கூட தமிழ் மாணவர்கள் மத்தியில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக இருக்கின்றார் என்று, முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தி உசுப்பேற்றி நஞ்சூட்டி வருகின்றார்.

நஸீருக்கு முதலமைச்சர் கிடைத்தது பற்றி முஸ்லிம்கள் பெருமை கொள்ளவுமில்லை. சந்தோசம் கொள்ளவுமில்லை.இது அரசியல் வியாபாரமாகவே நடந்துள்ளது. முஸ்லிம்களின் உரிமைகள் பற்றிக் குரல் கொடுக்கும் ஒரு அணியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்குமானால் முஸ்லிம்கள் சந்தோசமடையலாம். பண உழைப்பும், பதவி ஆசையும் கலந்த கலவையாக இந்த முதலமைச்சர் பதவி உள்ளதால் இதில் கிழக்கு முஸ்லிம்கள் எந்தப் பெருமையும் கொள்ளமாட்டார்கள்.

முதலமைச்சர் பதவி என்பது தனிமனிதனை அழகுபடுத்தும் பதவி என்றும் அந்தப் பதவியால் இனத்திற்கு எவ்விதமான நன்மையுமில்லையென்று மு.கா.செயலாளர் நாயகமும் தற்போதைய சுகாதார பிரதி அமைச்சருமான ஹசன் அலி கடந்த வருடம் தெரிவித்திருந்தார். அதுதான் உண்மையும்.

இந்தப் பதவியில் எங்கு முஸ்லிம் இனம் உள்ளது. இந்த முதலமைச்சருக்கும் முஸ்லிம் இனத்திற்கும் எவ்விதமான சம்மந்தமும் இல்லையே. இப்படியிருக்க முஸ்லிம் இனத்தின் மீது கசப்புணர்வை ஏற்படுத்த முனைவது அரசியல் சுய இலாபத்திற்காகவே.

எதிர்வரும் காலத்தில் தமிழர் முதலமைச்சராவார்

எதிர்வரும் காலத்தில் கிழக்கில் தமிழர் ஒருவர் முதலமைச்சர் பதவியை அடைவார். காரணம் தற்போதைய கிழக்கு மாகாண சபைக்கு ஆயுட்காலம் மிகவும் குறைவுதான். அதனால் சபை கலைந்து மீண்டும் ஒரு தேர்தல் வருமானால் தமிழர்கள் கிழக்கில் ஒட்டுமொத்த வாக்குகளை கூட்டமைப்புக்கு அளிப்பார்கள். கூட்டமைப்பு 18 ஆசனங்களைப் பெறும். ஒரேயொரு ஆசனம் மட்டும் ஆட்சியமைக்கத் தேவைப்பபடும். அப்போது இந்த மு.கா. அமைச்சுப் பதவி கேட்டு கூட்டமைப்பிடம் தவம் கிடக்கும்.இந்த நிலை வரும் பொறுத்திருந்து பாருங்கள்.

இந்த முஸ்லிம் முதலமைச்சர் பதவி என்பது வெறும் கதிரைதான். இந்தக் கதிரை மோகத்திற்காக அலையும் முஸ்லிம் அரசியல் வியாபாரிகள் கொண்ட கிழக்கில் விடுதலை தாகம், ஜனநாயக தாகம், சுய உரிமைத் தாகம், போராட்டத் தாகம் நிறைந்த கொள்கைக்காக அரசியல் செய்யும் கூட்டமைப்பின் பெயரைக் கெடுக்காமல் முஸ்லிம் தமிழ் இன உறவுக்கு தீங்கு நினைக்காமல் அரசியல் செய்வதுதான் நல்லதும் ஆரோக்கியமான அரசியல் என்பதையும் அந்த மாகாண சபை உறுப்பினருக்கு எத்தி வைப்பது காலத்தின் கட்டாயக் கடமை என்று நினைக்கின்றேன்.

எம்.எம்.நிலாம்டீன்.
[email protected]

-http://www.tamilwin.com

TAGS: