தாம் இன்னமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நம்பத் தயாரில்லை என்று வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தமிழ் மக்களின் பாரிய பிரச்சினைகளுக்கு இன்னும் புதிய அரசாங்கம் சிறந்த தீர்வுகளை முன்வைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அபகரிக்கப்பட்ட காணிகளை இராணுவம் பொதுமக்களிடம் மீள வழங்கி விட்டதாக உலகம் முழுவதும் பிரசாரம் செய்யப்படுகிறது.
எனினும் ஒட்டகப்புலத்தில் மக்கள் வீதியோரங்களில் இருந்து கொண்டு தமது காணிகள் எப்போது விடுவிக்கப்படும் என்று ஏங்கிக் கொண்டிருப்பதாக அனந்தி குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்துள்ள அவர், சிறையில் பல வருடங்களாக அடைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்பதையும் அனந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் என்ற அடிப்படையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமது யாழ்ப்பாண பயணத்தின் போது அவரை சந்தித்திருக்க வேண்டும் என்றும் அனந்தி கருத்துக் கூறியுள்ளார்.
இதற்கிடையில் மக்கள் விரும்பினால் மாத்திரமே தமது அரசியல் பயணத்தை நிறுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.pathivu.com