இலங்கையில் நிலவும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு ஒன்று காணப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நேற்று புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் குழுவொன்று சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில், திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இந்தியப் பிரதமரைச் சந்தித்து, காவிரிக்கு குறுக்கே புதிய அணை ஒன்றை கர்நாடக அரசு கட்டும் விவகாரம், ஆந்திராவில், 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் பேச்சு நடத்தியிருந்தனர்.
இதன்போது, இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்தும், பேசப்பட்டதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதுகுறித்து தகவல் வெளியிட்ட அவர்,
இலங்கையில் அரசியல் நிலைமைகள் முன்னேற்றமடைந்துள்ளதாக இந்தியப் பிரதமர் தெரிவித்தார்.
அங்கு அரசியல் தீர்வு ஒன்று காணக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் இதனைத் தமது அரசியல் விளையாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டாலேயே, இது சாத்தியமாகும் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததாகவும் விஜயகாந்த் குறிப்பிட்டார்.
-http://www.tamilwin.com