இலங்கை ஜனாதிபதியின் பதவிக்காலத்தை இரண்டு பதவிக்காலங்கள் என்று மீண்டும் குறைத்தது, மற்றும் தகவல் அறியும் உரிமை என்ற இரு விஷயங்களைத் தவிர, 19வது சட்டத்திருத்தத்தின் மூலம் மைத்திரிபால சிறிசேன பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்கிறார் சட்ட ஆய்வாளர் குமாரவடிவேல் குருபரன்.
இன்று இலங்கையில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட பெரும்பான்மையுடன் நிறைவேறிய இந்த சட்டத்திருத்தத்தின் மூலம், பொது ஸ்தாபனங்களுக்கு அரசியல் தலையீடு இல்லாமல் நியமனங்களைச் செய்ய உருவாக்கப்பட்ட அரசியல் சட்ட அவையில் பெரும்பான்மையாக அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் இருக்கவேண்டும் என்ற யோசனையைக் கைவிட்டு, இப்போது அந்த அவையில் பத்தில் ஏழு பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பார்கள் என்ற முடிவுக்கு வர அரசு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது என்றார் குருபரன்.
இந்த நிர்ப்பந்தம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களால் தரப்பட்டு அதற்கு ரனில் விக்ரமசிங்க அரசு பணிந்திருக்கிறது என்றார் அவர்.
ரனில் விக்ரமசிங்க இதற்கு பணிந்திருப்பதற்குக் காரணம் , அது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த 19வது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியதாகக் காட்ட வேண்டும் என்ற ஆர்வம்தான் என்றும் அவர் கூறினார்.
-http://www.pathivu.com