சம்பந்தனுக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரிக்கும் இடையில் நாளை சந்திப்பு

sambanthanஇரண்டு நாள் பயணமாக இன்று காலை சிறிலங்காவை வந்தடைந்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டோரை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

இன்று காலையில் கொழும்பு வரும், ஜோன் கெரி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட தலைவர்களையும், ஏனைய சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

காலை 10.15 மணியளவில் இராஜாங்க செயலர் ஜொன் கெரிக்கும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுக்கள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து இருவரும் இணைந்து கூட்டு அறிக்கையொன்றை ஊடகங்களுக்கு வெளியிடவுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை ஜோன் கெரி சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

பிற்பகல் 2 மணியளவில் களனி விகாரைக்கு செல்லும் ஜோன் கெரி, அங்கு மத வழிபாடுகளில் கலந்துகொள்வார்.

மாலை 5 மணிக்கு தாஜ்சமுத்ரா விடுதியில், ஜோன் கெரியின் விசேட விரிவுரையும் அதனைத் தொடர்ந்து செய்தியாளர் மாநாடொன்றும் இடம்பெறவுள்ளது.

நாளை முற்பகல் சுமார் 11 மணியளவில், கென்யத் தலைநகர் நைரோபிக்குப் புறப்பட்டுச் செல்வதற்கு முன்னதாக, நாளை காலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, அமெரிக்க இராஜாங்கச் செயலர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

-http://www.pathivu.com

TAGS: