போருடன் தொடர்புடைய பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்கு தீர்வு காணப்படும் என்று, சிறிலங்கா வந்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியிடம் சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடன், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி நடத்திய பேச்சுக்களின் போதே இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலருடனான சந்திப்புக்குப் பின்னர், நடத்திய செய்தியாளர் சந்திப்பில், கருத்து வெளியிட்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர,
“புதிய சிறிலங்காவின் நல்லிணக்கச் செயல்முறைகளின் முக்கிய கூறாக, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்திக் கொள்ளும் விடயம் அமைந்திருக்கும்.
எமது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி, பொறுப்புக்கூறுவதற்கான உள்நாட்டு பொறிமுறையை அனைத்துலக தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
பல்வேறு பகுதிகளைக் கொண்ட இந்த விடயத்தில், உள்ளூர் திறனை விரிவாக்குவதற்கும்,தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் வழங்குவதற்கு அமெரிக்கா எமக்கு உதவ முடியும்.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, சிறிலங்காவில் நடத்தும் பேச்சுக்கள், இரண்டு தரப்பும் தமது முன்னுரிமைகள் குறித்து புரிந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் என்று நம்புகிறேன்.
இந்தப் பேச்சுக்கள், தற்போதுள்ள நெருக்கமான நட்புறவை மேலும் உச்சத்துக்கு கொண்டு செல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, சிறிலங்காவில் கடந்த சில மாதங்களில் பல முன்னேற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.
இது சிறிலங்காவுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு என்றும், புதிய அரசாங்கம் தனது வாக்குறுதிகளை செயலில் காட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.pathivu.com