ஜோன் கெரியை தமிழ்தேசிய கூட்டமைப்பும் சந்தித்தது!!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை இன்று தமிழ்தேசிய கூட்டமைப்பு சந்தித்துள்ளது.இச்சந்திப்பில், இனப்பிரச்சனை தீர்வு மற்றும் மனிதஉரிமைமீறல் குறித்த விசாரணைகளில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாக, கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 9 மணியளவில் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இந்த சந்திப்பு நடந்தது. இதில் கூட்டமைப்ப சார்பில் அதன் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு முதல்வர் சி.வீ.விக்னேஸ்வரன், ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் ஐ.நா வெளியிட தீர்மானித்துள்ள போர்க்குற்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிபாரிசுகளை உள்வாங்கி நடைமுறைப்படுத்துமாறு இலங்கையை வலியுறுத்த கோரிக்கை விடுத்துள்ளனர் கூட்டமைப்பினர். அத்துடன், போர்க்குற்றம் மற்றும் மனிதஉரிமைமீறல் விவகாரங்களில் உள்ளக விசாரணை நடத்தப் போவதாக இலங்கை அறிவித்ததை சுட்டிக்காட்டி, அப்படி நடத்தினால் அது ஐ.நா அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் நடப்பதை உறுதி செய்யுமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காணாமல் போனவர்கள் விவகாரம் மற்றும் உயர் பாதுகாப்பு விடயங்களில் கூடிய அக்கறை காட்டுமாறும், தமிழர்களின் இனப்பிரச்சனைக்கான நிரந்தர தீர்வு தொடர்பினில் கூட்டமைப்பு வலியுறுத்தியதாக தெரியவருகின்றது.

-http://www.pathivu.com

TAGS: