இலங்கையில் இந்தியாவின் கண்காணிப்பு ரேடர்கள்

redarஇலங்கையில் இந்தியா கடலோரக் கண்காணிப்பு ரேடர்களையும், தன்னியக்க அடையாளப் பொறிமுறைகளையும் நிறுவியுள்ளதாக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார்.

சீனா தனது கடலடி ஆற்றலை திடீரெனக் கட்டியெழுப்பி வரும் நிலையில், இந்தியாவின் நீர்மூழ்கிப் படைப்பிரிவு வலுவாக இல்லை என்று இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு, நேற்று எழுத்து மூலம் அளித்த பதில் ஒன்றிலேயே இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

“இந்தியா தனது கடல்சார் நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விடயங்களை கண்காணித்து வருகிறது.

தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய எல்லா விவகாரங்களில் இந்திய அரசாங்கம் நிலையான கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது.

அத்துடன், இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு நலனை பாதுகாக்க படைபலப்பெருக்கம், ஆற்றலைக் கட்டியெழுப்புதல், திறன் விரிவாக்கம் உள்ளிட்ட துவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தியக் கடற்படையின் கப்பல்கள் மற்றும் விமானங்களும், இந்தியக் கடலோரக் காவல்படையும், கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதிகளில், கண்காணிப்பை மேற்கொண்டுள்ளன.

கண்காணிப்புத் தொடர்பான தகவல்கள் பல்வேறு முகவர் அமைப்புகளுடன் பகிரப்படுகின்றன. இதற்காக, கடலோர ரேடல் வலையமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலும்    மொரீசியசிலும் கடலோரக்கண்காணிப்பு ரேடர்களையும், தன்னியக்க அடையாளப் பொறிமுறைகளையும் இந்தியா நிறுவியுள்ளது.

இந்தியப் பெருங்கடல் நாடுகளில், அந்த நாடுகளின் வேண்டுகோளுக்கமைய, ரேடர்கள் நிறுவப்படும். கப்பல்களைக் கண்காணிக்க இவை உதவும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: