வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டில் எந்த பகுதியிலும், தமிழர்கள் போரில் இறந்த தமது உறவுகளை நினைவு கூரலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. அது அவர்களின் உரிமை என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது மனிதாபிமான செயல். அத்துடன் அது உறவுகளின் உரிமையாகும்.
வடக்கில் தமிழர்கள் தமது உறவுகளை நினைவு கூரும் போது அதற்கு யாரும் தடை விதிக்க முடியாது. நாமும் தடை விதிக்கவில்லை.
வடக்கு மட்டுமன்றி நாட்டில் எந்த பிரதேசத்திலும் இறந்த ஒருவருக்காக உறவினர்கள் அஞ்சலி செலுத்தலாம்.
அதேவேளை, தடை செய்யப்பட்ட அமைப்பு என்ற ரீதியில் விடுதலைப் புலிகளை நினைவு கூருவதே சட்டவிரோதமானது என்ற ரீதியில், அதனை நாம் தடை செய்துள்ளோம்.
விடுதலைப் புலிகள் சட்டவிரோத அமைப்பு என்ற ரீதியில் அவர்களை நினைவு கூருவது தவறாகும்.
புலிகள் அமைப்பை நினைவு கூரும் விதமாக பொது இடங்களில் கூட்டங்களை நடத்துவது, சுடர் ஏற்றுவது உள்ளிட்ட நிகழ்வுகளை நாம் தடை செய்கிறோம்.
அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை நாம் கைது செய்வோம்.
அண்மையில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் விடுதலைப் புலிகளை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றுவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
முல்லைத்தீவு காவல்துறையினர் அங்கு சென்று அவரிடம் விளக்கம் கோரிய போது, அவர் போரில் உயிரிழந்த தனது உறவினர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். அது அவரது உரிமை.
அவரது உறவுகளுக்கு அவரால் அஞ்சலி செலுத்த முடியும். அதில் எவ்வித தவறும் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.
-http://www.pathivu.com

























