செப்டெம்பரில் வெளியாகவுள்ள அறிக்கை கடுமையானது: சொல்ஹெய்ம்

erick_solheim_001போரின் இறுதி தருணங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்ததாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் விசேட பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம், தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

போரின் இறுதி தருணங்கள் தொடர்பாக நம்பகத்தன்மை மிக்க தேசிய அல்லது சர்வதேச ஆணையத்தின் முன்பாக தான் அறிந்த அனைத்தையும் தெரிவிப்பதற்கு ஆயத்தமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள இலங்கை குறித்த அறிக்கை சாதரணமாக காணப்படாது, கடுமையானதாக விளங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

போர் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் எவராகயிருப்பினும், அவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அறிக்கையை எதிர்பார்க்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பால்க்கன்ஸ், ஆபிரிக்கா,இலத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் போர்க்குற்றச்சாட்டு பொறுப்புகூறலுக்கு சிறிது காலம் தேவைப்பட்டதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைவரும் சிறிது பொறுமையுடன் செயற்பட வேண்டும்.

ஆனால் இறுதியில் போர் குற்றவாளிகள் அம்பலப்பபடுத்தப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.

எவ்வித தயக்கமுமின்றி குற்றவாளிகள் அனைவரும் கண்டிக்கப்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் ஏற்றுக்கொள்ள முடியாத போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது மிக தெளிவான ஒரு விடயமாகும்.

உண்மையை நிலை நாட்டுவதே மிகவும் அவசரமான ஒரு விடயம், ஏனெனில் அப்போதுதான் யுத்தத்தினால் உயிர் தப்பியவர்கள் தங்கள் குடும்பத்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளமுடியும்.

தனது கணவன் அல்லது பிள்ளைகள் உயிருடன் இருப்பதை அறியாமல் பெண்ணொருவரால் தனது வாழ்க்கையை எவ்வாறு மீண்டும் ஆரம்பிக்க முடியும்.

நான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு ஆயத்தமாகவே உள்ளேன்.

எனினும் இலங்கையில் நடைபெறவுள்ள பொது தேர்தலுக்கு முன்னர் வரமாட்டேன்.

நான் அவ்வாறு பொது தேர்தலுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டால் எனது வருகையை சிலர் பயன்படுத்த முயற்சிக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: