‘மைத்திரிபால அரசின் நல்லெண்ணத்தை மதிக்க வேண்டும்’: இமானுவேல் அடிகளார்

imanuvel_adikalar_001இலங்கையில் போர் முடிந்து 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்துடன் தொடர்புகளை பேணத் தயாராக இருப்பதாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இமானுவேல் அடிகளார் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பது தொடர்பில் நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்தி வருவதாகவும் அருட்தந்தை இமானுவேல் பிபிசி தமிழோசையிடம் கூறியுள்ளார்.

முன்னைய மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலம் தமிழ் மக்களுக்கு கொடூரமானதாக இருந்ததாகவும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய அரசாங்கம் வெளிப்படுத்துகின்ற நல்லெண்ண சமிக்ஞைகளுக்கு புலம்பெயர் தமிழர் தரப்பு மதிப்பளிக்க வேண்டும் என்றும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் கூறினார்.

மற்றவர்களின் நல்லெண்ண நடவடிக்கைகளை மதிக்காமல் (தொடர்ந்தும்) நாங்கள் குற்றம் சாட்டிக்கொண்டிருக்க முடியாது’ என்றார் அருட்தந்தை இமானுவேல்.

இலங்கையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நம்பகமான உள்ளக விசாரணை நடத்துவதாக அளித்துள்ள உறுதிமொழிக்காக இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை தொடர்பான ஜெனீவா விசாரணை அறிக்கை வரும் செப்டெம்பரில் வெளியாக இருக்கின்ற சூழ்நிலையில், அந்த அறிக்கையை முக்கிய வரலாற்று ஆவணமாகக் கருதி அடுத்தக் கட்டப் போராட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் எஸ். ஜே. இமானுவேல் கூறினார்.

மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கக் காலத்தில் பல்வேறு புலம்பெயர் தமிழர் அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்களை தடைசெய்வதாக அறிவித்து இலங்கை பட்டியல் ஒன்றை வெளியிட்டிருந்தது.

அந்தப் பட்டியலில் அருட்தந்தை இமானுவேல் உள்ளிட்ட உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: