முள்ளிவாய்க்கால்: போர் முடிந்து ஆறு ஆண்டுகளாகியும் ஆறா வடுக்கள்! தீரா பிரச்சினைகள்

mulliwaikkaal-01இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசம், இப்போதும், பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து வருவதாக அங்கு மீள்குடியேறியுள்ளவர்கள் கூறுகின்றார்கள்.

வீடமைப்புத் திட்டங்கள், வாழ்வாதாரத் திட்டங்கள் என்பன அங்கு செயற்படுத்தப்பட்டிருக்கின்றன. பாடசாலைகள் இயங்குகின்றன. பிரதான வீதி சீரமைக்கப்பட்டிருக்கின்றது.

எனினும் புது மாத்தளனில் இருந்து முள்ளிவாய்க்காலை ஊடறுத்து முல்லைத்தீவுக்குச் செல்லும் முக்கிய வீதி இன்னும் கவனிப்பாரற்ற நிலையிலேயே காணப்படுகின்றது.

கடற்தொழிலையே இப்பகுதி மக்கள் தமது வாழ்வாதாரத்திற்கான பிரதான தொழிலாகக் கொண்டிருக்கின்றனர். எனினும் பல குடும்பங்கள் இன்னும் வறுமையில் வாடுகின்றன.

உணவுக்கும் பிள்ளைகளின் கல்விக்கும் அல்லாட நேர்ந்துள்ளதாக அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

தொண்டு நிறுவனங்களின் உதவியோடு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அந்த வீடுகள் முற்றுப் பெறாத நிலையிலேயே காணப்படுகின்றன.

அந்த வீடுகளின் சுவர்களுக்குரிய சீமெந்து பூச்சு வேலைகளை வீட்டு உரிமையாளர்களே செய்ய வேண்டும் என்று வீடுகளைக் கட்டிக்கொடுத்தவர்கள் தெரிவித்திருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சாப்பாட்டுக்கே வழியற்ற நிலையில் வீட்டுச் சுவர்களுக்கான பூச்சு வேலைகளை எவ்வாறு மேற்கொள்வது என்று அவர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

இருந்த போதிலும் கூடாரங்களிலும், கொட்டில்களிலும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த தங்களுக்கு இந்த கல்வீடுகள் பாதுகாப்பையும் நிம்மதியையும் அளித்திருப்பதாகவும் அவர்கள் நன்றியோடு குறிப்பிடுகின்றனர்.

இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளுக்குப் போதிய நிதி இல்லாத காரணத்தினால் அந்த வீடுகளை முழுமையாக நிர்மாணிக்க முடியாதிருப்பதாக இன்னும் சிலர் கூறுகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மீள்குடியேற்றப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், இறுதி யுத்தத்தின் போது இந்தப் பிரதேசத்தில் நிகழ்ந்த மோசமான உயிரிழப்புக்கள், பாதிப்புகளில் இருந்து அந்த மக்கள் மீட்சி பெறும் வரையில் அங்கு உண்மையான அபிவிருத்தியைக் காண முடியாது என்று சிவானந்தரூபி செந்தமிழ்ச்செல்வன் என்ற பெண்மணி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

யுத்த மோதல்களின்போது சீறி வந்த துப்பாக்கிக்குண்டுகள், எறிகணைகள் மற்றும் குண்டுகளின் தாக்குதல்களில் சிக்கி காயமடைந்தவர்களையும், இறந்தவர்களையும் ஏற்க முடியாமல் தவித்த தற்காலிக வைத்தியசாலையாகச் செயற்பட்ட முள்ளிவாய்க்கால் மேற்கு பாடசாலை இப்போது புதுப் பொலிவு பெற்று கல்வியிலும் சிறந்து விளங்குவதாக அங்குள்ள ஆசிரியர்களும் மாணவர்களும் தெரிவித்தனர்.

மோசமான யுத்த மோதல்களில் சிக்கி, உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையில், மரணத்தின் விளிம்புவரை சென்று திரும்பியுள்ள தாங்கள், இப்போதுள்ள சூழலில் அங்கு வாழ முடியும் என்று கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை என்றும், அன்றைய நிலைமைகளை மீண்டும் எண்ணிப் பார்க்கும் போது, மரண பயமே தமது மனங்களைச் சூழ்ந்து கொள்வதாகவும் அங்குள்ள பலரும் கூறுகின்றனர்.

-http://www.tamilwin.com

TAGS: