போராட்ட வடிவங்கள் மாறலாம் இலட்சியம் என்றுமே மாறாது!- முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கூட்டமைப்பினர் உறுதி

may18_jaffna_008மே-18 தமிழர்களின் வரலாற்றில் இலட்சக்கணக்கானவர்கள் உயிர்நீத்த நாளாகும். எந்த இலட்சியத்தை எமது இனம் அடைய வேண்டும் என்பதற்காக எம் உறவுகள் உயிர்நீத்தார்களோ அதனைப் பெறுவதற்காக எமது ஒன்றுபட்ட பயணம் தொரும் என முள்ளிவாய்க்கால் மண்ணில் உறுதிபூண்டுள்ளது.

இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு நேற்றை தினம் முள்ளிவாய்க்கால் கிழக்கு அ.த.க பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. தமிழ் சிவில் சமுகம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா(இலங்கை தமிழரசுக்கட்சி) கூட்டமைப்பின பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்(ஈ.பி.ஆர்.எல்.எப்) பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்(ரெலோ), வடமாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்(புளொட்) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சி.ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டி இந்நிகழ்வின் பின்னர் வெளிப்படுத்திய கருத்துக்கள் வருமாறு

உரிமைக்கான எமது பயணம் தொடரும் – மாவை.சேனாதிராஜா

தமிழர்களின் வரலாற்றில் இலட்சக்கணக்கானவர்கள் தமது உயிர்களைப் பலிகொடுத்த நாளாகும். இணையற்ற அந்த தியாகத்தை நாம் மதிக்க வேண்டும். இருந்தபோதும் அவர்களுக்கு எம்மால் மேற்கொள்ளப்படும் அஞ்சலியை தடைசெய்வதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தது. அந்த தடைகளை நன்கறிந்தே எம்உறவுகளுக்காக இவ்விடத்திற்கு வருகை தந்திருக்கின்றோம்.

உலகவாழ் தமிழர்கள் இந்நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டித்துக் கொண்டிருக்கையில் இழந்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்திப்பதற்காக நாம் இங்கு கூடியிருக்கின்றோம். இறந்த உயிர்களுக்கு அஞ்சலி செலுத்துவதென்பது எமது உரிமை. தமிழர்களின் பண்பாட்டுக்கடமை. அதனை எவரும் தடைசெய்ய முடியாது. அதேநேரம் தமிழர்கள் தமது தாயகங்களில் தங்களை தாங்களே ஆட்சிசெய்து சுதந்திரமாக வாழ்வதற்காக எம் உறவுகள் தமது உயிர்களை தியாகம் செய்தார்கள். அந்த அந்த உரிமையை எம்மினம் பெறவேண்டும் அதற்கான பயணம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதை இந்த இடத்தில் மீண்டும் உறுதிபூணுவோமாக.

அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வேண்டும் – சுரேஸ்பிரேமச்சந்திரன்

எங்களுடை விடுதலைக்காக போராடிய உறவுகளுக்காக நினைவுகூரும் முகமான நினைவேந்தல் நாள் இதுவாகும். அவ்வாறான நினைவேந்தலைச் சுமூகமாகச் செய்வதற்கான சூழல் மறுதலிக்கப்பட்டிருக்கின்றது. அரசாங்கதில் அங்கம் வகிக்கும் ஒரு தரப்பினர் நினைவேந்தல் நிகழ்வை மேற்கொள்ள முடியும் என கூறியபோதும் பிறிதொருதரப்பினர் பொலிஸ், நீதித்துறைகளினூடாக தடையுத்தரவுகளைப் பெற்று அதனை தடுப்பதற்கான பல முயற்சிகளை ஏற்படுத்தியிருந்தார்கள்.

அரசாங்கம் இரட்டை முகத்தைக் கொண்டிருக்கின்றது. தாம் ஜனநாயக பூர்வமான அரசாங்கம், நல்லாட்சியை முன்னெடுக்கும் அரசாங்கம், புதிய ஆட்சியினுள் தமிழ் மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்கின்றார்கள் என சர்வதேசத்திற்கு தனது முகத்தைக் காட்டிக்கொண்டிருக்கின்றனர். மறுபுறுத்தில் தமிழ் மக்கள் இறந்தவர்களுக்கு கூட அஞ்சில செய்யமுடியாதளவு அவர்களின் அடிப்படை உரிமைகள் அனைத்துமே பறிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரையும் இராணுவத்தையும் இந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் குவித்து பாரியதொரு அச்ச சூழலை ஏற்படுத்தி பொதுமக்களை இவ்விடத்திற்கு வருகைதந்து உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதை தடுத்து நிறுத்தியிருக்கின்றார்கள். இது மிகமிக அநாகரிகமான செயற்பாடாகும். இதற்கு பொறுப்புக் கூறவேண்டியது இந்த அரசாங்கம் தான். நல்லாட்சி, ஜனநாயகம் என்பதெல்லாம் பொரும்பான்மை மக்களுக்கானதே தவிர தமிழ் மக்களுக்கல்ல என்ற தோற்றப்பாடு உருவாக்கப்படுகின்றது. தமிழ் மக்கள் மீண்டும் பழைய சூழலுக்குள்ளே தள்ளப்படுகின்றார்கள். அடக்குமுறை தொடர்கிறது. இந்த நிலைமைகளை அரசாங்கம் உடன் மாற்றவேண்டியது அவசியமாகும். அச் செயற்படுகளை முன்னெடுக்காத பட்சத்தில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமாகவிருந்தாலும் அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாத அரசாங்கமாகவே மாற்றம் பெறும். இதனை ஜனாதிபதி, பிரதமர், புரிந்து கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

இலட்சிய இலக்கை வென்றெடுக்க ஒன்றுபடுவோம் – செல்வம் அடைக்கலநாதன்

எமது போராட்ட வடிவம் தற்போது மாற்றப்பட்டிருக்கின்றது. இருந்தபோதும் இலட்சிய வேட்கை எம் மனதினுள்ளே கொழுந்து விட்டெரிகிறது. ஒரு வரலாறு இப்புமியிலேயே புதைக்கப்பட்டிருக்கின்றது. அந்த வரலாற்றின் அத்திபாரத்திலிருந்து விடுபடவேண்டியது தான் எமது பிரதான நோக்கமாக உள்ளது. அந்த வகையில் இந்த நிகழ்வு உயிர்நீத்தி எமது உறவுகளுக்கும் தியாகளுக்கு மட்டுமான ஒரு நிகழ்வாக அமைந்து விடக்கூடாது. அவர்கள் எதற்காக உயிர்நீத்தார்கள். அவர்களின் இலட்சியம் என்ன என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

தமிழ் மக்களை கால்நடைகளை போன்று தென்னிலங்கை நடத்த முற்பட்டிருக்கின்றது என்பதை இன்றை நிகழ்வு வௌிப்படுத்தி நிற்கின்றது. தென்னிலங்கை எமது மக்களின் உரிமைகளை எமக்கு தராது என்ற செய்தியை உணர்த்தவேண்டும். இப்புனித புமியில் நடைபெறும் இந்நிகழ்வானது எம்மவர்கள் விட்டுச்சென்ற இலட்சியத்தை தொடவேண்டும் என்பதை ஆணித்தனமாக கூறுவதற்காகவே முன்னெடுக்கப்படுகின்றது. இது சாதாரண நிகழ்வொன்றல்ல. எம்மக்களின் இலட்சிய பயணத்திற்கான நிகழ்வு. உயிர்நீத்த அந்த ஆன்மாக்களின் இலட்சியத்தை வென்றெடுப்பதற்காக புலம்பெயர் தமிழர்கள், எமது தாயகத்தமிழர்கள் அனைவரும் கைகோர்க்க வேண்டும். காணல்நீர் என பலர் கூறும் எமது இலட்சிய இலக்கை தற்போது இருக்கும் மக்கள் சக்தியுடன் அடைவதற்கான வழியேற்படும். அதற்காக அனைவரும் ஒன்றுபடுவோம் என இந்நாளில் திடசங்கல்பம் பூணுவோமாக.
தேசிய துக்கநாளாக பிரகடனப் படுத்தவேண்டும்

தர்மலிங்கம் சித்தார்த்தன்

தமிழ் மக்கள் பல இனவழிப்புக்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றார்கள். முள்ளிவாய்க்காலில் மிகப்பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்ட துயரச்சம்பத்தை ஆறாவது ஆண்டு கடந்த பின்னர் இன்றைய தினம் இம்மண்ணில் முதற்தடவையாக உணர்வுடன் அனுஷ்டித்துக்கொண்டிருக்கின்றோம். உண்மையிலேயே இந்த மக்கள் எதற்காக உயிர்நீத்தார்களோ அந்த இலட்சியத்தை அடைவதற்காக நாம் அனைவரும் ஒற்றுமையுடன் முன்னோக்கிச் செல்லவேண்டும்.

நாம் தற்போது பல்வேறு நிகழ்வுகளை அனுஷ்டிக்கின்றோம். அதில் தவறில்லாதிப்பினும் கூட ஒட்டு மொத்தமாக எமது உறவுகள் உயிர்நீத்த மே பதினெட்டம் திகதியை தேசிய துக்கநாளாக பிரகடனப்படுத்தவேண்டும். அதன் மூலம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து அம்மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன் மட்டுமல்ல அவர்களின் இலட்சியத்தையும் உணர்ந்து எமது செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.
நல்லிணக்கத்தை எதிர்பார்ப்பது எப்படி?

சிவசக்தி ஆனந்தன்

ஆறு வருடம் கடந்து கூட போரினால் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள், காணமல் போனார்கள் என்ற உண்மையை அறிந்து கொள்ள முடியாத கட்டத்தில் புதிய அரசாங்கத்தின் நல்லாட்சியில் கூட மரணித்த உறவுகளுக்கு சுதந்திரமாக அஞ்சலி செய்ய முடியாத நிலைமை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஒரு புறத்தில் அஞ்சலிக்கான அனுமதியை வழங்குவதாக கூறிக்கொண்ட அரசாங்கம் மறுபக்கத்தில் அதனை தடுப்பதற்காக அனைத்து வழிகளிலும் பாரிய முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

மரணத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமையை மறுக்கப்படும் சூழலில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை இந்த ஆட்சியாளர்களிடம் எவ்வாறு எதிர்பார்க்க முடியும். இறுதி யுத்தத்தில் என்ன நிகழ்ந்தது என்பது இன்றுவரையில் வௌிப்படுத்தப்படாத நிலைமை தொடர்கிறது. அக்காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித அவலங்களுக்கு இன்றுவரையில் பூரணமான விசாரணையொன்று முன்னெடுக்கப்படாதிருக்கின்றது. இவ்வாறான சூழல் தொடர்ந்தும் நீடிப்பதை தவிர்த்து இழப்புக்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கான நீதி வழங்கப்படவேண்டும். அதற்காக சர்வதேச ரீதியான பொறிமுறையொன்றின் கீழ் விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம்.

அதேபோன்று இங்கு நிலவிய அசாதாரண சூழலில் கடத்தப்பட்டு காணமல் போனவர்கள், இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பது கூட இன்றுவரையில் அறியமுடியாத சூழலே நிலவுகின்றது. இவற்றுகான பதில்களை ஜனநாகத்தை நிலைபெறச் செய்யும் இலக்கை கொண்டிருக்கும் புதிய அரசாங்கம் வழங்கவேண்டியது அவசியம்.
தமிழர்கள் புதிய பதையில் பயணிப்பதற்கான நாள்

சிவஞானம் ஸ்ரீதரன்

தமிழர் வரலாற்றில் அவர்கள் இனஅழிப்புச் செய்யப்பட்ட உச்சக் கட்டமான நாளாகவும் பெரும்பான்மை அரசாங்கங்களால் தமிழனம் படிப்படியாக இனஅழிப்புச் செய்யபட்டதன் இறுதிநாளாகவும் உள்ளது. ஆறு ஆண்டுகள் கடந்த போதும் ஆறாத்துயரத்துடன் முள்ளிவாய்க்கால் மண்ணில் எமது உறவுகளுக்கு அஞ்சலி செய்வதற்கு வாய்ப்புக் கிடைத்தமைக்கு முதலில் இறைவனுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த மண்ணில் எமது காலடி படும்போது இங்கே புதைக்கப்பட்ட ஒவ்வொரு உறவுகளும் எம்மை தூக்குங்கள் என கையேந்துவதைப்போன்றே உணர்வே ஏற்படுகின்றது. இருபதாம் நூற்றாண்டில் மனிதகுலமே வெட்கித் தலைகுனியவேண்டியளவிற்கு மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பின் உச்சமே முள்ளிவாய்க்கால் சம்பவமாகும்.

இறுதி யுத்தத்தில் அதீதமாக கொல்லப்பட்டவர்களின் நினைவாக ஆறு ஆண்டுகள் காத்திருந்து ஆறாத்துயருடன் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் ஒர் நாளாக உள்ளது. இது தமிழர்களின் வரலாற்றில் மாற்றம் நிகழ்ந்த ஒரு நாளாகவே பார்க்கவேண்டியுள்ளது. இந்த நாள் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் புதிய பாதையில் பயணிப்பதற்கான சிந்தனையையும் மனமாற்றத்தையும் வழங்கும் ஒரு நாளாக அமையும்.

-http://www.tamilwin.com

TAGS: