மாணவர்கள் மீதான வன்முறைகளை முற்றாக ஒழிப்போம் எனும் தொனிப் பொருளில் யாழ்.வயாவிளான் மத்திய கல்லூரி மாணவ சமூகத்தின் ஏற்பாட்டில் புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை (19.5.2015) கல்லூரி முன்பாக அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் யாழ்.மாவட்டத்தில் இன்றைய தினம் பல பாடசாலை மாணவர்கள் வித்தியாவின் படுகொலைக்கு நீதி கோரி வெகுண்டெழுந்து போராட்டத்தில் உணர்வெழுச்சியுடன் பங்கேற்றனர்.
இன்று மதியம் 01.30 மணிக்கு இடம்பெற்ற போராட்டத்தில் கல்லூரி முன் ஒன்று கூடிய மாணவர்களும், ஆசிரியர்களும் ஈடுபட்டனர். வித்தியாவின் படுகொலைக்கெதிரான பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறு அவர்கள் இந்த அமைதி வழிப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆரம்பத்தில் பலாலி வீதியை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பின்னர் போக்குவரத்துக்கு இடையூறின்றிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“சொந்த ஊரும் சொந்த உறவும் அராஜகம் புரிவதா? தமிழினமே விழித்தெழு!”, ”மாணவ சமூகத்திற்கு இது சாபக்கேடா? அன்று கிரிசாந்தி: இன்று வித்தியா: நாளை……?”, ”காட்டு மிராண்டித்தனத்தின் உச்சக்கட்டத்திற்கு மரண தண்டனையே சிறந்தது”, “நமது மண்ணின் மாணவிகள் நடமாட முடியாதா?????”, “காமூக வல்லூறுகளே அப்பாவி மாணவ மாணவிகள் தான் உங்கள் பார்வைக்கு இரையா?”, ”TAKE SERVER E ACTION TO PUNISH THE LASCIVIOUS BRUTES” போன்ற வாசகங்களை மாணவர்கள் தாங்கி இருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட கல்லூரியின் ஆசிரியர் அருட்பணி இ.ராஜ்குமார் கருத்துத் தெரிவிக்கையில்,
அன்று கிரிசாந்தி வன்புணர்வு செய்யப்பட்டமை முதல் இன்று வரை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழர்களுக்கெதிராக இழைக்கப்படும் அநீதியாகவும் இவ்வாறான வன்முறைச் சம்பவங்களைப் பார்க்க வேண்டியுள்ளது.
யுத்தத்திற்குப் பின்னர் எமது பிரதேசங்களில் இடம்பெறும் இவ்வாறான வன்முறைச் சம்பவங்களும், பாலியல் அத்துமீறல் சம்பவங்களும் மனிதத்தையும் நேயத்தையும் களங்கப்படுத்துவதுடன், சமூகத்தில் அன்பற்ற தன்மையையும் விதைப்பதாகவேயுள்ளது.
எங்களுடைய வளர்ந்து வருகின்ற தலைமுறையானது கல்வியோடு போராடுகின்ற அதேவேளை சமூகத்திற்கு ஒவ்வாத சமூக விரோதமான செயற்பாடுகளை மாணவர்கள் மத்தியில் தூண்டும் வகையில் சிலரின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
நாங்கள் காது வழியாகக் கேட்கின்ற செய்திகளனைத்தும் தற்போது நிஜத்தில் வளர்ந்து வருகின்ற சிறுவர்கள் மத்தியில் இடம்பெறுவது வருந்தத்தக்கது. இது எமது சமூகத்தின் எதிர்காலத்தைப் பெரிதும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
எனவே இவ்வாறான வன்புணர்ச்சிக்காரர்களை இனங்கண்டு சமூகத்திலிருந்து முற்றாக ஒதுக்கி வைக்க வேண்டும். இரண்டாவது சட்டத்தின் மூலம் தண்டணை வழங்கப்படுபவர்கள் அந்தச் சட்டத்திலிருந்து தப்பிக்காத வகையில் இறுக்கமான சட்டத்துவம் பேணப்பட வேண்டுமென்பதையும் நாங்கள் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.
தொடர்ந்தும் வளர்ந்து வருகின்ற எங்களுடைய மாணவ மாணவிகளுக்குரிய சமூகப் பாதுகாப்பைச் சட்டத்துறை வழங்க வேண்டுமென்பதையும் இந்தவிடத்தில் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.
இதன் போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த கல்லூரியின் உயர்தர மாணவி ஸ்ரீலக்ஷனா,
இலங்கையில் நாளுக்கு நாள் பெண்களுக்கெதிராக அதிலும் குறிப்பாகப் பாடசாலை மாணவிகளுக்கெதிரான சீரழிவான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் வன்னியிலே சரண்யா என்கிற மாணவி பாதிப்புக்குள்ளாகியிருந்தாள்.
அதே போன்று இன்று புங்குடுதீவில் வித்தியா என்ற மாணவி அடுத்து எமது பாடசாலையிலோ அல்லது எமது மண்ணிலுள்ள வேறு பாடசாலைகளிலோ இத்தகைய நிலைமைகள் ஏற்படக் கூடிய வாய்ப்பிருக்கின்றது.
ஆண்கள் பெண்களைப் பாதுகாப்பதற்காக இறைவனால் படைக்கப்பட்ட கொடையாளிகள். பெண்மையை அவர்கள் பலவீனப்படுத்தக் கூடாது. பெண்களைப் பலப்பதற்காகவே அவர்கள் படைக்கப்பட்டவர்கள். எனவே இதற்கு எதிராக நாம் மேற்கொள்ளும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் நல்லதோர் தீர்வினைக் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்திலும் எமது மண்ணில் தொடராதிருக்கச் சரியான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமெனவும் இந்தவிடத்தில் வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன். என்றார்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மற்றொரு உயர்தர மாணவியான ஜெ.கீர்த்தனா கருத்துத் தெரிவிக்கையில்,
பள்ளி மாணவி காமுகர்களால் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறான கொடூரச் செயல்கள் எமது பாடசாலையில் இடம்பெறக் கூடாது என்பதை வலியுறுத்தியும், யாழ்.குடாநாட்டில் பாடசாலை மாணவிகள் தனியாக நடமாட முடியும் எனும் நிலை உருவாக வேண்டும். அன்று வன்னியில் சரண்யா…. இன்று புங்குடுதீவில் வித்தியா… நாளை யாரென்பது ஒரு பெரும் கேள்விக்குறியாகவுள்ளது.
இன்னமும் சிறுவர்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகள் எமது மண்ணில் இடம்பெறுவது வெட்கக் கேடானது. ஆகவே அனைவரும் விழிப்பாக இருப்பதன் மூலம் இவ்வாறான வன்முறைகள் எதிர்காலத்திலும் இடம்பெறாதிருக்க நாமனைவரும் உறுதி பூணுவோம் என்றார்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற கல்லூரியின் பழைய மாணவர் சங்க உறுப்பினர் எஸ்.நிமலதீசன் கருத்துத் தெரிவிக்கையில்,
இவ்வாறான கொடிய வன்கொடுமைகள் மூலம் நாங்கள் தாழ்வானதோர் நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறோமோ? என எண்ணத் தோன்றுகிறது. இவ்வாறான சம்பவத்தைக் கண்டித்து எமது பாடசாலைச் சமூகம் இன்று போராட்ட நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்துவது வரவேற்புக்குரியது. இவ்வாறான சம்பவங்கள் இனியும் இடம்பெறக் கூடாது.
வித்தியாவின் கொலையுடன் இவ்வாறான கோரமான வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டும். எமது கல்லூரி சமூகத்தின் சார்பில் வித்தியாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், இவரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமெனவும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன் என்றார்.
இன்றைய போராட்டத்தில் பங்கேற்ற கல்லூரியின் மற்றொரு ஆசிரியரான பா.சுதாகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
இன்றைய தினத்தில் நாங்கள் எல்லோரும் ஒன்று கூடியிருப்பது எமது சகோதர மாணவரொருவர் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமையே ஆகும்.
எங்களுடைய மாணவ சமூகத்தைப் பொறுத்த வரையில் பாரியதொரு இழப்பாக அதனைக் கருதி இன்றைய தினம் எமது மாணவர்கள் அமைதியானதொரு எதிர்ப்பினை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இது போன்று பாரதூரமான செயல்கள் எங்களுடைய பிரதேச பாடசாலை மாணவிகள் மீதோ அல்லது மாணவர்கள் மீதோ ஏற்படக் கூடாது என்பதனை வலியுறுத்திக் கூறுவதுடன் இது போன்ற செயற்பாடுகள் எதிர்வரும் காலங்களில் எமது மாணவர்கள் மத்தியிலோ, இளைய சமூதாயத்தின் மத்தியிலோ இடம்பெறக் கூடாது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் கூறினார்.
இதேவேளை, புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு அதியுட்சத் தண்டணை வழங்க வலியுறுத்தியும் யாழ்.மத்திய கல்லூரி, யாழ்.திருக்குடும்பம் கன்னியர் மடம், சென்.ஜேம்ஸ் பாடசாலை மற்றும் கோப்பாய் மகாவித்தியாலய மாணவர்கள் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்: ரவி-
-http://www.tamilcnnlk.com