புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தொடர்பினில் விசேட நீதிமன்றம் ஒன்றை அமைத்து, அதனூடாகவே கொலைக் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுமெனவும் அத்துடன் மிக விரைவில் அத்தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி, வேம்படி மகளிர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் உரையாற்றும்போது இதனை தெரிவித்தார்.
மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
முன்னதாக காலை 10 மணியளவில் யாழ்.வருகை தந்த ஜனாதிபதியை, யாழ் பழைய மாநகர சபை வளாகத்தில் வட மாகாண ஆளுநர் மற்றும் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் வரவேற்றிருந்தனர்.
அதனையடுத்து வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு சென்ற ஜனாதிபதி, அங்கு விஷேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். பின்னர் அவர் வேம்படி மகளிர் கல்லூரிக்கு விஜயம் செய்திருந்தார்.
-http://www.pathivu.com
வித்தியா எனும் அழகிய மலர் சில மிருகங்களால் வேட்டையாடப்பட்டு கருகிவிட்டது, இக்கொடுமையைப் புரிந்த காமுகன்கள் நிச்சயம் தண்டனை பெறவேண்டும். அதேவேளை அந்த மிருகங்கள் தங்கள் கைப்பேசிகளில் அவளை வதைசெய்த கோரக்காட்சிகளை படம் எடுத்திருந்தார்கள் எனக் கூறி அதையும் பிரசுரித்திருந்த செய்தியாளர்களின் செயலும் மிகவும் கண்டனத்திற்குறியதே.முக நூலில் அப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன. இவர்கள் வீட்டுப் பெண் என்றால் இப்படி செய்தியாக்கி இருப்பார்களா ? பலருக்கு அவள் மேனியை படங்காட்டி செய்தி என வகைப்படுத்துவார்களா? இறந்துவிட்ட பின்னரும் அவளை மேலும் பல கண்கள் மேய வகைசெய்யும் அந்தப் புகைப்படங்களை வெளியிட்டவர்களும் தண்டனைக்குரியவர்களே. மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் எனக்கூறி இது போன்ற விக்ஷங்களை பறிமாறும் விக்ஷமிகளை கண்டிக்க நாம் தயங்கக்கூடாது, இது அந்த அபலைகளின் குடும்பத்தினர்க்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் நாம் செய்யும் பேருதவியாகும்