தீபனுக்கு விருது கிடைத்தமை வரவேற்கத்தக்கது: இலங்கை அரசாங்கம்

theepan_film_001பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் திரைப்பட 2015 விழாவில் தீபன் என்ற ஈழக்கதையை மையப்படுத்திய திரைப்படத்திற்கு விருது கிடைத்தமை வரவேற்கப்பட வேண்டியது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசாங்கப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவிக்கையில்,

புதிய அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கொண்டு வரும் முனைப்புக்களை சர்வதேச சமூகத்திற்கு எடுத்தியம்பும் வகையில் இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த திரைப்படம் சில தசாப்தங்களுக்கு முன்னைய இலங்கையின் சூழ்நிலையை பிரதிபலிப்பதாகவும் தற்போதைய சூழ்நிலை இதில் வெளிக் கொணரப்படவில்லை, தற்போது நாட்டின் நிலைமைகளில் பாரியளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.

ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ள புதிய அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தீவிர முனைப்பு காட்டிவருகின்றது என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் சிறுவர் போராளிகளை பயன்படுத்தியமை இத்திரைப்படத்தின் மூலம் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்களின் அவலங்களைச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகத் வெளிவந்துள்ள இத்திரைப்படத்தில், யாழ்ப்பாணம் கைதடி மண்ணிற்கு சொந்தமானவளும் தற்போது பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்துவரும் ஸ்ரீதர் ஞானசீலி தம்பதிகளின் புதல்வி இளையாள்  தனது நடிப்பாற்றலால் சர்வதேச அரங்கிற்கு வந்துள்ளாள்.

பிரான்ஸில் புகழ்பெற்ற இயக்குநர் jacque audiard இயக்கத்தில் 26 ஆகஸ்ட்டில் உலக திரையரங்குகளில் வெளியாகவுள்ள படம் �தீபன்�. (DHEEPAN) ஈழத்தின் யுத்தச் சூழலில் இருந்து தப்பித்து புலம்பெயர்ந்து பிரான்சுக்குள் வந்த மூன்று பேரைப் பற்றியது.

அகதியாக வந்து புது நாட்டில் புதுச் சூழலில் எப்படி இவர்கள் வாழ்கிறார்கள், வாழ்க்கையை, எப்படி எதிர்த்துப் போராடுகிறார்கள் என்பது தான் கதை. பிரான்சிலும் தென்னிந்தியாவிலும் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் எழுத்தாளர் ஷோபா சக்தி, கலையேஸ்வரி சீனிவாசன் ,செல்வி இளையாள் ஸ்ரீதர் (கிளவ்டீனா விநாசித்தம்பி) ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்,

இப்படம் இந்த வாரத்தில் பிரான்சில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவான Festival De Cannes 2015 இல் திரையிடப்பட்டதுடன் இவ்விழாவின் அதியுயர் விருதான Palme d’Or விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டு அந்த விருதினையும் இன்று தனதாக்கிக் கொண்டது.

இளையாளின் தந்தையார் வினாசித்தம்பி சிறீதர் பாடகராக இசைத்துறையிலும் இருக்கின்றார். இதேவேளை அவளின் தாய் நிகழ்ச்சித்தொகுப்பாளராக ஊடகங்களிலும் மேடைகளிலும் அறியப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: