வித்தியாவின் படுகொலையின் பின் எற்பட்ட அதிர்வலைகள்! அடக்குமுறைக்குள் வாழ்ந்த எமக்கு ஆச்சரியமே!

vidhyaபுங்குடுதீவு மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் அதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை கொடுக்க வேண்டும் என்ற போராட்டம் சம்பவம் நடந்த பகுதியில் மட்டுமல்ல நாட்டின் சகல பகுதிகளிலும் இன மொழி பேதமின்றி நடந்துள்ளது. இப்படியொரு போராட்டத்தை மூன்று சகாப்தங்களாக பலர் பார்த்திருக்கமாட்டார்கள்   ஜனநாயகப் போராட்டங்களை அடக்கியதும், அதனால் ஏற்பட்ட வன்முறைகளும், உயிர் இழப்புகளுமே   வரலாறாக உள்ளது. நியாயங்களுக்கான பல போராட்டங்கள் இல்லாமல் ஆக்கப்பட்டது.

நீதிமான்கள், நேர்மையாளர்கள் பலர் ஜனநாயகப்போராட்டங்கள் மறுக்கப்பட்டதால் புலம்பெயர்ந்துள்ளார்கள். பலர் அழித்தொழிக்கப்பட்டார்கள்.

இலங்கையின் எற்பட்ட ஆட்சிமாற்றம் இத்தகைய போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளதா? இது எவ்வளவு காலத்துக்கு தாக்குப்பிடிக்கப்போகிறது எனப்பலர் கேட்கின்றனர்.

ஆம் ஆட்சிமாற்றம் வழிவகுத்துள்ளது. அந்த ஆட்சியின் மீதும் ஆட்சியாளர்கள் மக்களின்  மீதும் நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிகிறது.  இப்படியான போராட்டங்கள் புங்குடுதீவு மாணவிக்கு நடந்த கொடுமைக்கு நீதி கேட்டு நடத்தப்பட்டது நியாயமானதே.  இந்தப்போராட்டங்களின் போது இராணுவத்தினரும் பொலிசாரும் மிகவும் பொறுமையுடன் செயற்பட்டுள்ளது இலங்கை அரசுக்கே பெருமை. ஆட்சியாளர்கள் எப்படியோ அது வழியேதான் இராணுவமும் நடந்துள்ளது.

இலங்கையின் ஜனாதிபதி பாதிக்கபட்ட மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அந்த மாணவி கல்விகற்ற பாடசாலைக்கும் சென்றுள்ளார். இதுவும் மக்களிடையே ஆட்சியாளர்கள் மீது நம்பிக்iகையை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் வியப்பானது இதற்கு இன சாயம் பூசிவிடாமல் அனைத்து இன மக்களும் அந்த மாணவிக்கு நடந்த கொடுமைக்கு நீதி கேட்டுப் போராடியதைப் பார்க்கும் போது நாம் மாற்றிச் சிந்திக்கிக்க தொடங்கிவிட்டோமோ என எண்ணத் தோன்றுகிறது.

இந்த நிலைமை இலங்கையில் தொடரவேண்டும் . அவன் வீட்டு பிரச்சினை எனக்கென்ன, என இருக்கும் நிலை இல்லாமல் போய்விட வேண்டும். நியாயமான பிரச்சினைகளுக்கு மக்களிடையே ஒரு எழுச்சி ஏற்பட வேண்டும்.  நீதி தேவதை அந்த எழுச்சியைக் கண்டு கண்திறக்க வேண்டும்..

தற்போது புங்குடுதீவு மாணவிக்கு எதிராக நடைபெற்ற கொடுஞ்செயலில் இருந்து அவர்கள் தப்ப முடியாத அளவுக்கு தீர்ப்பு கிடைக்கப்போகின்றது. இதை விரவு நீதிமன்றம் மூலம் நிறைவேற்றப்போவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த இவ்வகைப் போராட்டங்கள் இனங்களிடையேயும் ஐக்கியத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை. இவ்வகை போராட்டங்கள் இனபேதமில்லாமலும் அரசியல் கலப்படம் இல்லாமலும் இருந்தால் நாம் எதனையும் எட்டமுடியும்

– அ.விஜயன் –

-http://www.tamilwin.com

TAGS: