மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு அழைப்பு!

savendraaaபோரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும், அதிபர் ஆணைக்குழு, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை விசாரணைக்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது புதுடெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, கற்கைநெறி ஒன்றை மேற்கொண்டு வருகிறார்.

அவரை மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான அதிபர் ஆணைக்குழு விசாரணைக்கு வருமாறு அழைப்பு அனுப்பியுள்ளதாக, ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காணாமற்போனோர் குறித்து விசாரிக்க, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட இந்த அதிபர் ஆணைக்குழுவுக்கு, போர்க்குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரிக்குமாறு பணிக்கப்பட்டது.

இதற்கமையவே, இந்த ஆணைக்குழு தற்போது போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக இறுதிக்கட்டப் போரில் பங்கெடுத்த மூத்த இராணுவ அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகிறது.

ஏற்கனவே, 55வது டிவிசனுக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 57வது டிவிசனுக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், 59வது டிவிசனுக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த ஆகியோரிடம் அதிபர் ஆணைக்குழு விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.

இந்தநிலையிலேயே 58வது டிவிசனுக்குத் தலைமை தாங்கியவரும், முக்கியமான போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவருமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

-http://www.pathivu.com

TAGS: