கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் தலைவர் கர்ணல் கடாபியின் மகன்களுள் ஒருவரான சயீப் அல் இஸ்லாம் (வயது 39) அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐ.சி.சி.,) சரண் அடைவதற்கான பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகிறார்.
கிளர்ச்சியாளர்களினால் கடாபியும் அவரது மற்றொரு மகன் முட்டாசிமும் கொல்லப்பட்ட நிலையில், சயீப் அல் இஸ்லாம் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் நைஜர் அல்லது லிபிய எல்லையில் பதுங்கியிருக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன போதிலும் அது உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், ஐ.சி.சி.,யில் தன் மீதான வழக்கில் சரண் அடைவதற்கான பேச்சு வார்த்தைகளை சயீப் சிலர் மூலம் நடத்தி வருகிறார்.
“லிபியாவில் நடந்த போர்க் குற்றங்கள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” என அவர் கூறியதாக ஐ.சி.சி.,யின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
லிபியாவில் கடாபி ஆட்சிக்கு எதிராக நடந்த மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மீது ராணுவத்தை ஏவி வன்கொலைகளில் ஈடுபட்டதற்காக, கடாபி மற்றும் சயீப் மீது அனைத்துலக குற்றவியல் நீதிமனவழக்குகள் தொடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில், இருவரையும் கைது செய்வதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.மக்களுக்கு எதிரான குற்றவியல் செயல்களில் மறைமுகமாக கூட்டுச் சதியில் ஈடுபட்டது, கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலான நாட்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மக்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தியது ஆகிய குற்றங்கள் சயீப் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.