எதிர்வரும் செம்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பிலான விசாரணை அறிக்கை தடம் புரளுகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் தனது அச்சத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் போலியான உள்ளக விசாரணைகளும், அனைத்துலகமும் சம்பந்தபட்ட நாடும் இணைந்ததான அரசியல் சாயம் பூசப்பட்ட கலப்பு விசாரணைகளும் பல்வேறு இடங்களில் நடந்துள்ளன என பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் தெரிவித்துள்ளார்.
இதுவே இலங்கை விவகாரத்திலும் நடக்கின்ற அபாயம் ஏற்பட்டுள்ளதெனவும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கை விவகாரத்தில் இனப்படுகொலையாளிகளின் பொறுப்புகூறலுக்கு, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையினை பாரப்படுத்த வேண்டிய தேவை உள்ளதென பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு கோரி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பத்து இலட்சம் கையெழுத்துப் போராட்டத்தில் தன்னையும் ஒரு பங்காளராக இணைத்துக் கொண்டு கருத்துரைக்கும் பொழுதே பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் அவர்கள் மேற்குறித்த கூற்றினைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் அவர்கள் 1995ம் ஆண்டு முதல் தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்காக குரல் கொடுத்து வருபவர் என்பதோடு,
2009ம் தமிழினப் படுகொலையினை முன்னிறுத்தி எனும் புத்தகம் ஒன்றினையும் எழுதியிருந்தார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைக்குழுப் பிரதிநிதியாகவும் இருக்கின்ற பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் அவர்கள், 1993ம் ஆண்டு சர்வதேச நீதிமன்றில் பொஸ்னியா மக்களுக்காக வாதிட்டு இனப்படுகொலைக்கு எதிரான வெற்றிகளை ஈட்டியிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




























பிரான்சிஸ் பொய்ல் அவர்களுக்கு நன்றி.தமிழர்களின் துயரத்தை அறிந்து உதவி புரிகிறீர்கள் .