தமிழர் தாயகத்தில் கொலைகள், பாலியல் துஸ்பிரயோகங்கள், போதைப்பொருள் வியாபாரங்கள் அதிகரித்துள்ளன

mavai_001தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் கொலைகள் மட்டுமன்றி பாலியல் துஷ்பிரயோகங்கள் போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்டவையும் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, இது தொடர்பில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றிவந்த சமூகசேவை உத்தியோகஸ்தர் சச்சிதானந்தம் மதிதயன் (வயது-44) மண்டூரிலுள்ள அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாதோரினால் கடந்த 26ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டமையைக் கண்டித்தும் இக்கொலையுடன் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் நேற்று திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய மாவை சேனாதிராஜா,

சமூகசேவை உத்தியோகஸ்தர் மதிதயன் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். சமூக முன்னேற்றதுக்காக, சமூக சீரழிவுகளுக்கு எதிராக உழைத்து நன்மதிப்பை பெற்ற உயர்ந்த அதிகாரியான அவர் படுகொலை செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துள்ளன.

இருப்பினும், இக்கொலையுடன் தொடர்புடையவர்களை பொலிஸார் இன்னமும் கைதுசெய்யாமலுள்ளமை ஆச்சரியமாக உள்ளது என்றார்.

மேலும், மக்களின் எழுச்சியை தடுக்கவேண்டுமானால் சமூகசேவை உத்தியோகஸ்தரின் கொலையுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.

இங்கு த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா உரையாற்றுகையில்,

இப்படியான கொலைகள் நடைபெறுவதை நாங்கள் கண்டிக்கின்றோம். மண்டூரில் கடந்த 26 ஆம் திகதி மேற்படி உத்தியோகஸ்தர் கொலை செய்யப்பட்டிருக்கின்றார் என்றால், இங்கிருக்கின்ற அரசியல்வாதிகள், அரச உத்தியோகஸ்தர்கள், பொதுமக்கள் ஆகியோரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்த அச்சுறுத்தல் சில வேளைகளில் இந்த நாட்டில் போர் இடம்பெற்ற காலத்தில் இருந்திருக்கலாம். 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப்படியான அச்சுறுத்தல் நிச்சயமாக ஏற்படக்கூடாது. ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றார்.

-sankathi24.com

TAGS: