தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே வடக்கில் படையினர் நிலைகொண்டுள்ளனர். வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. இராணுவத்தினரை வடக்கிலிருந்து வெளியேற்றுவது குறித்து அரசே தீர்மானிக்கவேண்டும் எனத் தெரிவித்த இராணுவம், வடக்கில் நிலைகொண்டுள்ள படையினரின் எண்ணிக்கையை வெளியிடமுடியாது என்றும் உறுதிபடத் தெரிவித்தது.
யாழில் 2009 ஆம் ஆண்டில் இருந்த 152 இராணுவ முகாம்களில் 59 முகாம்கள் அகற்றப்பட்டு 93 முகாம்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. தற்போதைய நிலையில் பாதுகாப்புத் தேவைக்கு ஏற்ற அளவிலேயே ஏனைய பகுதிகளைப் போல யாழிலும் படையினர் நிலைகொண்டுள்ளனர் என்றும் இராணுவம் தெரிவித்தது.
யாழ். அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடக சந்திப்பு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே இராணுவத்தினரால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
“ஐந்து பொதுமக்களுக்கு ஓர் இராணுவம் என்ற வீதத்தில் வடக்கில் படையினர் நிலைகொண்டுள்ளனர் என வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அவ்வாறான நிலைமை வடக்கில் உள்ளதா? இங்கு நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறிப்பிட முடியுமா?” என ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.
இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்த இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர,
“தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு படையினர் நிலைநிறுத்தப்படவேண்டும். இவ்வாறான நிலையில் படையினரின் எண்ணிக்கை குறித்து என்னால் தகவல் வழங்கமுடியாது. அத்துடன், வடக்கிலிருந்து படையினரை வெளியியேற்றுவது குறித்து அரசுதான் தீர்மானிக்க வேண்டும். எனவே, இது குறித்து அமைச்சரவைப் பேச்சாளரிடமே நீங்கள் வினவவேண்டும்” – என்றார்.
வடக்கில் படைக்குறைப்பு செய்வதற்கான கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது. இந்நிலையில், படைக்குறைப்பு செய்வதற்கான நோக்கம் உள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த,
“2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் 192 இராணுவ முகாம்கள் இருந்தன. 2009 முதல் இன்றுவரையான காலப்பகுதிகளில் 59 முகாம்கள் அகற்றப்பட்டு 93 முகாம்கள் மட் டுமே எஞ்சியுள்ளன. முகாம்களின் அகற்றம் இவ்விதமாக இடம்பெற்றுள்ளது.
படைக்குறைப்பு மற்றும் முகாம் அகற்றம் என்பன முழுமையாக தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயமாகும். தேசிய பாதுகாப்பின் ஒரு பகுதிதான் யாழ்ப்பாணமாகும். இங்கு போன்று முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா கிழக்கு, தெற்கு என நாடு முழுவதும் பாதுகாப்பு படைத் தலைமையகங்கள் உள்ளன. இந்தப் பாதுகாப்புப்படைத் தலைமையகங்களுக்கு ஏற்றவாறு இராணுவத்தினர் அங்கு நிலைகொண்டுள்ளனர். அது அந்த இடத்தின் தன்மைக்கேற்ப மாறுபடும்” – என்றார்.
இதேவேளை, படைத் தலைமையகத்திற்கென கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க நடவ டிக்கை எடுக்கவுள்ளீர்களா எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,
“படைத் தலைமையகம் என்பது விசாலமானதாகும். இராணுவத்தினரின் எண்ணிக்கை, அவர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கே இந்தக் காணி பயன்படுத்தப்படுகின்றது. இதற்குப் பாரியளவு காணி தேவைப்படுகின்றது. இருப்பினும், நாம் படைத்தலைமையகத்துக்கென கையகப்படுத்தியிருந்த காணிகளில் குறிப்பிட்டளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அதனால்தான் இந்தக் காணிகளை நாங்கள் வைத்துள்ளோம். வடக்கில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையாயின், படைத் தலைமையகத்தில் உள்ள காணிகளை விடுவிக்கலாம் என நீங்கள் கேட்கலாம். இன்றிருக்கும் நிலை மாறமுடியும். அதற்கும் நாங்கள் தயாராக இருக்கவேண்டும். மேலதிக படையினர் தேவையேற்படின் அவர்களை நிலைநிறுத்த இடம் தேவை. அவர்களை வேறு எங்கும் நிலைநிறுத்த முடியாது. இங்குதான் நிலைநிறுத்த முடியும். அவர்களுக்கு பயிற்சி வழங்கவேண்டும். இவற் றைக் கருத்தில்கொண்டுதான் இந் தக் காணிகளை நாம் வைத்துள் ளோம்” – என்றார்.
இதேவேளை, வடக்கில் தீவிரவாத நடவடிக்கை இடம்பெறவில்லை. பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு முழுமையான சிவில் ஆட்சியே நடைபெறுகின்றது. இராணுவ ஆட்சி ஒருபோதும் இடம்பெறவில்லை என்று யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த தெரிவித்தார்.
அத்துடன், ஒழுக்கம்மிக்க இலங்கை இராணுவத்தினருக்கும் வடக்கில் இடம்பெறும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கும் எவ்வித தொடர்பும் இல்லையயனக் கூறி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்தார்.
வடக்கு மாகாணத்தில் 2009 ஆம் ஆண்டின் பின்னர்தான் போதைப்பொருள் பயன்பாடு ஆரம்பித்துள்ளது. இராணுவத்தினராலேயே இந்த போதைப்பொருள் பாவனை கொண்டுவரப்பட்டுள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றஞ் சாட்டியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்தென்ன என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிதபோதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு:-
“வடமாகாணத்தில் தற்போது குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றன. ஆனால், தீவிரவாத நடவடிக்கை ஒருபோதும் நடைபெறவில்லை. தீவிரவாத அச்சுறுத்தலும் இல்லை. யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை இராணுவம் ஒரு ஒழுக்கம் மிக்க இராணுவமாகும். கடந்த காலப்பகுதிக்குள் வேறு எந்த நாட்டு இராணுவத்தினராலும் பெறமுடியாத வெற்றியை எமது இராணுவம் பெற்றது. இவ்வாறான நிலையில் எமக்கும் வடக்கில் இடம்பெறும் போதைப்பொருள் பயன்பாட்டுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
இது சட்டம், ஒழுங்குடன் தொடர்புபட்ட விடயமாகும். அதற்கான நடவடிக்கையை பொலிஸாரே மேற்கொள்ள வேண்டும். அதற்கு உதவி வழங்க நாங்கள் தயாராகவுள்ளோம். மேலும் யாழ்ப்பாணத்தில் இராணுவ ஆட்சி இடம்பெறவில்லை. முழுமையாக சிவில் நிர்வாகமே இடம்பெறுகின்றது” – என்றார்.
-http://www.tamilcnnlk.com

























