தமிழர்களை வன்முறையாளர்களாக்க சிறீலங்கா நகர்த்தும் காய்கள்!

ழத் தமிழர்களை எப்படி அடக்கியாள முடியுமோ அப்படியயல்லாம் அடக்கியாள்வதற்கு சிங்கள தேசம் காலத்திற்கு காலம் புதிய வியூகங்களை வகுத்துச் செயற்படுகின்றது. இதற்கு சில தமிழ்த் துரோகிகளும் விலைபோகின்றனர். இந்தத் துரோகிகளை அடிவருடிகளாகக் கொண்டு சிங்கள தேசம் தமிழர் தாயகத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றது.

4

தமிழ் மக்களின் பலமான சக்தியாக இருந்த தமிழீழ விடு தலைப் புலிகளை அழித்துவிட்டோம். இதனால் தமிழ் மக்கள் இனிமேல் எழுச்சி என்ற ஒன்றை கனவிலும் நினைக்க மாட்டார்கள் என்று சிங்கள தேசம் கனவு கண்டது. அந்தக் கனவு விரைவாகவே சுக்குநூறாக உடைந்தமை கண்டு சிங்கள தேசம் கதிகலங்கி நிற்கின்றது. இதனால் தமிழனை எப்படியாவது அடக்கவேண்டும் என்று புதிய வியூகங்களை வகுக்கின்றது. இப்படிப்பட்ட ஒரு புதிய வியூகம்தான் அண்மையில் யாழ்ப்பாண நீதிமன்றம் மீது இடம்பெற்ற தாக்குதல் சம்பவம்.

புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவி வித்தியா கடந்த மே மாதம் 13 ஆம் திகதி காணாமற்போன நிலையில் மறுநாள் 14 ஆம் திகதி மிக மோசமாகப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பாடசாலை சென்ற மாணவி இவ்வாறு படுகொலை செய்யப்பட்டமையானது கல்விச் சமூகத்தினரிடம் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியானது போராட்டமாக வெடித்துக் கிளம்பியது.

1

வித்தியாவின் சடலம் கண்டெடுக்கப்பட்ட 14 ஆம் திகதி வியாழக்கிழமை அந்த மாணவியுடன் கல்வி கற்ற மாணவர்களே இந்தப் போராட்டத்தை முதலில் தொடக்கி வைத்தனர். வித்தியாவைக் கொலைசெய்த குற்றவாளிகளைக் கைது செய்து தண்டனை வழங்குமாறு வீதியை மறித்து அந்த மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பிரதேச மக்களும் இணைந்துகொண்டனர். மறுநாள் புங்குடுதீவிலுள்ள இளைஞர் கழகங்கள், சனசமூக நிலையங்கள், போக்குவரத்துப் பிரிவினர் போன்ற பொது அமைப்பினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் கடையடைப்பு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழர் தாயகம் எங்கும் வித்தியாவுக்கான போராட்டங்கள் வெடித்தன. தாயகத்தையும் மீறி இந்தப் போராட்டம் தென்னிலங்கை வரை வியாபித்திருந்தது. ஆக, வித்தியா கொல்லப்பட்டமை புங்குடுதீவைச் சேர்ந்த நபர்களால். அந்த நபர்களைக் கைது செய்து மரண தண்டனை வழங்கவேண்டும் என்று கோரியே போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், இந்தப் போராட்டத்தில் இளைய சமூகம் அனைத்தும் திரண்டு நின்றதைப் பார்த்த சிங்களம் அதிர்ச்சியடைந்தது. முள்ளிவாய்க் காலில் இத்தனை ஆயிரம் பேரை இழந்த பின் னரும் தமிழரிடம் இப்படியயாரு போராட்ட உணர்வு வருமென்று சிங்களம் நம்பியிருக்கவில்லை.

ஆனால், நடத்தப்பட்ட போராட்டங்களைக் கண்ட அரச புலனாய்வுத்துறை   தமிழர்கள் போராட்டங்கள் நடத்துவதில் சளைக்கமாட்டார்கள் என்று நம்பியது. இதனால் இனிமேல் போராட்டம் என்ற ஒன்று நடத்தப்படாமல் தடுக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிய சிங்கள தேசம் தமிழ் மக்களின், இளைஞர்களின் அமைதிப் போராட்டத்தை வன்முறைப் போராட்டமாக மாற்றியமைத்தது.

2

யாழ்ப்பாணத்தில் மே 19 ஆம் திகதி வித்தி யாவுக்கான போராட்டங்கள் தீவிரம் பெற்றிருந்தன. மறுநாள் 20 ஆம் திகதி கொலைச் சந்தேக நபர்களை யாழ்ப்பாண நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள நிலையில் நீதிமன்றுக்கு முன்பாக அமைதிவழிப் போராட்டம் இடம்பெறவுள்ளதாக புலனாய்வுத்துறை அறிந்தது. இது புலனாய்வுத் துறையினதும் தென்னிலங்கையினதும் உயர்மட்டங்களுக்கு தெரிவிக்கப்பட் டது. இந்த உயர்மட்டங்கள் தீட்டிய திட்டத்தின் அடிப்படையிலேயே யாழ்ப்பாண நீதிமன்று மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இவ்வாறானதொரு தாக்குதல் நடத்தப்பட் டால் தமிழ் மக்கள் நீதியை விரும்பவில்லை, அவர்கள் வன்முறையாளர்கள், வன்முறையிலேயே நாட்டம்கொண்டவர்கள் என்ற அவப் பெயரைச் சர்வதேச மட்டத்தில் பெற்றுக் கொடுக்க முடியும் என்ற திட்டமிடல்களுட னேயே நீதிமன்று மீது சிறிலங்காப் புலனாய்வுத் துறையினர் தாக்குதல் நடத்தினர்.

சிறிலங்கா சுதந்திரம் பெற்ற காலத்திலேயே சிங்கள தேசம் தமிழ் மக்களை அடக்கியாள முற்பட்டதால் அன்றைய காலத்திலேயே தமிழ் மக்கள் ஜனநாயக வழியிலான போராட்டங் களில் இறங்கியிருந்தனர். ஆனால் எப்போதும் அவர்கள் வன்முறைகளில் ஈடுபடவில்லை. மாறாக வன்முறையை நோக்கித் தள்ளப்பட்டார்கள். சிறிலங்கா நீதிமன்றில் தமிழ் மக்களுக்கு எள்ளளவும் நம்பிக்கை இல்லாத போதிலும் அவர்கள் நீதிமன்றை மதித்து நடந்தார்கள். எந்தவொரு காலத்திலும் சிறிலங்கா நீதிமன்று மீது தமிழ் மக்கள் தாக்குதல்களை நடத்தியிருக் கவில்லை. இதேபோன்றுதான் கடந்த மே 20 ஆம் திகதியும் யாழ்ப்பாண நீதிமன்றின் முன்பாக அமைதிவழிப் போராட்டங்களில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்கள் நீதிமன்று மீது தாக்குதல் நடத்தவில்லை. ஆனால், வித்தியா கொலைக் குற்றவாளிகளை ஆஜர்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்றதை அறிந்து பெரும் கொதிப் படைந்து காணப்பட்டனர். இந்தச் சந்தர்ப்பத்தில் தலைக்கவசங்கள் அணிந்து அவற்றின் கறுப்புக் கண்ணாடிகளால் முகத்தை மறைத்தவாறு போராட்டக்காரர்களுக்குள் இறங்கிய புலனாய்வாளர்கள் திடீரென்று நீதிமன்றை நோக்கிக் கற்களை வீசித் தாக்கினர்.

3

இதன் தொடர்ச்சியாக நீதிமன்றுக்கு முன் பாக இருந்த சுப்பிரமணியம் பூங்காவினுள் இருந்தும் கற்கள் வேகமாக நீதிமன்றை நோக்கி வீசப்பட்டன. இவ்வாறு கற்களை வீசியவர்கள் அடுத்த மணித்துளிகளில் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில் இவர்களால் உணர்ச்சி யேற்றப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களில் சில இளைஞர்களும் நீதிமன்றை நோக்கி கற்களை வீசினர். இதனால், திட்டமிடப்பட்டதுபோல் ஏற் கனவே தயார் நிலையில் நின்ற சிறிலங்கா காவல்துறையினரும் விசேட அதிரடிப் படையி னரும் போராட்களை நோக்கி கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதுடன் நீரையும் பீச்சியடித்தனர்.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து யாழ்ப் பாண நகரெங்கும் தொடர் கைதுகள். நீதிமன்றைத் தாக்கியதாக சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் நீதிமன்றப் பக்கமே செல்லாதவர்கள். யாழ்ப்பாண காவல் நிலையத்திற்கு அண்மை யிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தல் எரி பொருள் நிரப்பியவர்கள் கூடக் கைது செய்யப்பட்டனர். மேலும் இரவிரவாக வேட்டை நாய்கள் போன்று அலைந்த சிறிலங்கா காவல் துறையும் விசேட அதிரடிப் படையினரும் யாழ். நகரில் மட்டுமன்றி கொக்குவில், திருநெல்வேலி சந்திகளில்கூட அன்று இரவு பலரைக் கைது செய்தனர். இவர்கள் மீதும் நீதிமன்றைத் தாக்கிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இன்றுவரை இவர்கள் விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ள நிலையில் வீடியோ ஆதாரங்களைப் பயன்படுத்தி கைதுகள் தொடர்கின்றன.

நீதிமன்றம் மீதான தாக்குதலையடுத்து இடம்பெற்ற, இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சம்பவங்கள் சிங்களம் மீது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகிந்த ராஜபக்சவோ இப்படியான தாக்குதல்கள் மூலம்தான் முன்னர் புலிகளும் தோற்றம்  பெற்றனர். எனவே, இவற்றை அனுமதிக்கக்கூடாது என்றார். இதேபோன்று தீவிரவாத சிங்கள பெளத்த கட்சிகளும் யாழ்ப்பாண வன்முறைகளை தமிழருக்கு எதிரான இனவாத நோக்கத்துடனேயே பார்த்து கதையளக்கின்றன.

இந்த நிலையில் யாழ்ப்பாண நகரம் அடிக் கடி போர்க்கோலம் போன்று தோற்றமளிக்கின்றது. சிங்களப் படையினரின் பவள் கவச வாகனங்கள், டாங்கிகள் என்பன இயந்திரத் துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட நிலையில் வீதிகளில் பயணிக்கின்றன. சில வேளைகளில் இவை நகரில் பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் நிறுத்திவைக்கப்படுகின்றன. இந்தச் செயற்பாடுகளானவை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

வித்தியா என்ற சிறந்த, பண்பான ஆற்றல் மிக்க ஒரு மாணவியை நாங்கள் இழந்து தவிக்கின்ற நேரத்தில் எமது வேதனைகளை சிங்கள தேசம் தனது அரசியல் நலனுக்கு பயன்படுத்துகின்றது. தமிழ் மக்கள் இனிமேல் எந்தவொரு போராட்டத்திற்கும் வீதியில் இறங்க முடியாதளவிற்கு இந்தப் போராட்டத்தின் நியாய மறுப்புக்கள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன. தமிழன் இனி அடங்குவான் என்று சிங்களம் கனவு காண்கின்ற சந்தர்ப்பங்கள் தவிடுபொடியாகியதுதான் வரலாறு. இதேபோன்றே வித்தியா கொலையை வைத்து மேலும் மேலும் கனவு சிங்கள தேசம் மீண்டும் வாயடைக்கவேண்டிய நிலைவரும். தமிழன் பொங்கி எழுவான் அது வரை பொறுத்திருப்போம்.

– தாயகத்தில் இருந்து காந்தரூபன்

நன்றி: ஈழமுரசு

TAGS: