பண்பாட்டின் விளைநிலம் என்றிருந்த யாழ்ப்பாணத்தின், வடபுலத்தின் சமகால நிலைமையை நினைக்கும் போது இதயம் கருகிப் போகிறது. இன்று எங்கள் மண்ணில் நடக்கின்ற சமூக விரோத செயல்களை அடியோடு வேரறுக்கக் கூடியவர்கள் வட புலத்தின் நீதிபதிகள் என்ற ஒரே ஒரு நம்பிக்கை மட்டுமே தமிழ் மக்களிடம் உள்ளது.
அந்தளவிற்கு எங்கள் தமிழ் இனம் தாங்கொணாத சமூக விரோத செயல்களைச் சந்தித்து வருகிறது. அதிலும் மிகப் பெரும் வேதனை, சமூக விரோதிகள் எங்கள் மாணவச் செல்வங்களை தங்கள் அநியாயச் செயல்களுக்கு பயன்படுத்துவதாகும்.
தமிழ் இனத்தின் ஒரே மூலதனம் கல்வி. 30 ஆண்டு கால யுத்தத்தின் போதும் நாம் கட்டிக்காத்த பெரும் செல்வம் அது.
மின்சாரம் இல்லாத காலத்திலும் குப்பி விளக்கில் குந்தியிருந்து படித்து உயர்தரத்தில் சாதனை படைத்த எங்கள் மாணவர்களின் வரலாற்றை நினைக்கும் போது இன்று… இப்போது மின்சாரம், தொலைக் காட்சி, தொலைபேசி, இணையம் என எல்லா வசதிகளும் வாய்த்த போது, எதை இழக்கக் கூடாதோ அதை இழந்து போகிறோம் என்பதுதான் துயரம்.
கல்வியில், பண்பாட்டில், விருந்தோம்பலில், ஆத்மிக செழுமையில் உயர்ந்து நின்ற ஒரு இனம் யுத்தத்திற்குப் பின்னர் பான்பராக் பாக்கு, பாபுள் என்று எங்கள் இளைஞர்கள்… ஓ! கடவுளே எங்கள் பிள்ளைகளை காப்பாற்றுவது, கட்டுப்படுத்துவது யார்?
ஏன்? இப்படி ஒரு நிலைமை. பெற்றதாய் தந்தை, கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், அயல் அட்டம், உறவுகள், நட்புகள், பெரியவர்களின் போதனைகள், ஆலயங்களில் நடக்கும் தெய்வீக உரைகள் எல்லாம் தோற்றுப் போனது எப்படி? பெற்றவர்கள் தங்கள் கடமைகளை சரிவரச் செய்யவில்லையா?
மாணவர்களைக் கண்டிக்காதே என்ற சட்டம் ஆசிரியர்களின் ஆளுமையை அடியோடு அறுத்து விட்டதா? அயல், சமூகம் என்ற உறவுப் பாண்பாடுகள் வேரறுந்து; அடுத்தவீட்டான் என்ன செய்தாலும் நமக்கென்ன என்ற சுயநலம் மேலெழுந்து போயுள்ளதா? எதுவும் புரியவில்லை.
ஆனாலும் எங்கள் பிள்ளைகளை, இளைஞர்களை நாம்தான் காப்பாற்ற வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்று திரள்வது அவசியம்.
போதையிலும் பண்பற்ற வாழ்க்கையிலும் தொலைந்து போன இனங்கள் மீண்டதாக-எழுச்சி பெற்றதாக வரலாறு இல்லை. ஆகையால் முளையில் கிள்ளி எறிந்து எங்கள் சமூகத்தை, இளைஞர்களை, மாணவச் செல்வங்களை ஒழுக்கமான வாழ்வுக்கு தயார்படுத்துவோம்.
வெறும் கையராக, மெளனிகளாக, அடுத்த வீட்டில் கூக்குரல் கேட்க எம் வீட்டுக் கதவை இறுக்கச் சாத்து கின்ற கோழைகள் ஆகிவிட்டோம். இல்லை இல்லை ஆக்கி விட்டார்கள். இதில் இருந்து தப்பிப் பிழைக்க தமிழ் இனம் கடுமையாகப் பாடுபடவேண்டும்.
இன்று எங்கள் மண்ணில் நடக்கின்ற சமூக விரோத செயல்களை அடியோடு வேரறுக்கக் கூடியவர்கள் வட புலத்தின் நீதிபதி என்ற ஒரே ஒரு நம்பிக்கை மட்டுமே தமிழ் மக்களிடம் உள்ளது. இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதாக வடபுலத்து நீதிபதிகளின் செயற்பாடுகளும் மக்களுக்காக அவர்கள் தெரிவிக்கும் அறிவுறுத்தல்களும் அமைந்துள்ளமை கண்டு ஆறுதல் அடைய முடிகிறது.
அரசியலால், அதிகாரத்தால், தலைமைத்துவத்தால், பொருளாதாரத்தால் பலவீனப்பட்டுப் போயுள்ள எங்கள் இனம் மீண்டும் மிடுக்கோடு எழுகை பெற, வட புலத்தின் ஒரே நம்பிக்கை நீதிமன்றங்கள் என்பதை இவ்விடத்தில் கூறித்தானாக வேண்டும்.
-http://www.tamilwin.com


























ஓரூ சமுதாயத்தை வேரறுக்க போதைப் பொருள் ராணுவத்தை
விட வலிமைமிக்கது.எடுத்துக்காட்டு
தமிழக குடிகாரர்கள்.சினிமாவும்
சீரியலிலும் விளம்பரம்.குடிகாரனுக்
கு பணம் குடுத்தால் ஒட்டு போடுவான்
.