பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மீது குற்றம் சுமத்துவதை ஏற்க முடியாது! இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்

jaffna_pro_fisheman_004எமது பிரதேசங்களில் போதைப்பாவனை, வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பதனைத் தடுப்பதற்கு பாடசாலையின் அதிபர்கள் ஒத்துழைப்பதில்லை என யாழ்மாவட்ட அரசாங்க அதிபரும், உளசமூக உத்தியோகத்தரும் குற்றம் சுமத்தியிருப்பதனை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

மாணவச் சமூகம் சீரழிவதற்கு பல்வேறு காரணிகள் பின்னணியில் உள்ளன. அவற்றைக் கண்டறிந்து தீர்வு காண்பதனை விட்டு விட்டு அதிபர்கள் ஒத்துழைப்பதில்லை என்ற நொண்டிச்சாட்டை முன்வைப்பது வேடிக்கையான ஒன்று.

இன்று மாணவர்களைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ திராணியற்றவர்களாக அதிபர்களும், ஆசிரியர்களும் உள்ளனர். மாறாக மாணவர்களைக் கண்டிக்க முற்படும் அதிபர்கள், ஆசிரியர்களுக்கு இன்று எமது சமூகத்தில் என்ன நடக்கின்றது என்பதனை அறிந்துகொள்ளாதவர்களே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

பாடசாலைகளில் கண்டிப்புடன் நடந்துகொள்ளும் ஒவ்வொரு அதிபரும், ஆசிரியரும் இரவுப்பொழுதை பயத்துடனே கழிக்கின்றனர். இதற்கு முழுக்காரணம் மாணவர்களின் எந்தவொரு நடத்தையையும் எவரும் கண்டிக்காததே. மாறாக மாணவர்கள் பக்கம் நின்று அதிபர்களையும், ஆசிரியர்களையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதே இன்னுமொரு காரணமாகும்.

நாற்பது வயதைத்தாண்டிய எந்தவொரு தமிழ் பேசும் மகனை எடுத்தாலும் அவர்களுக்குக் கற்பித்த கண்டிப்பான ஆசிரியர்கள் பற்றியே பேசுகின்றார்கள். அவர்களாலேயே தாங்கள் உயர்வடைந்ததாகக் கூறுகின்றார்கள். இப்போது அதுபோன்ற ஆசிரியர்களும் இல்லை. கண்டிப்பை ஏற்றுக் கொண்டு வழிப்படும் மாணவர்களும் இல்லை.

இதற்கு உறுதுணையாக எம்மினத்தின் மத்தியில் புகுத்தப்படுகின்ற வேண்டப்படாத, ஆபத்தை உண்டுபண்ணும் போதைப் பொருட்களும், பழக்க வழக்கங்களுமே காரணமாகும்.

ஆகையால் பாடசாலை மாணவர்களை சரியாக வழிப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு, சட்டத்துறை என்பன அதிபர்கள், ஆசிரியர்களுக்கு முறையான அங்கீகாரம் வழங்க வேண்டும். மாணவர்களை முழுமையாகக் கண்காணிக்கும் உரிமை வழங்கப்படவேண்டும். எந்தவொரு ஆசிரியரும் மாணவனை எதிரியாகப் பார்ப்பதில்லை. அவனை வழிப்படுத்தவே எண்ணுகின்றார்.  அத்தகைய உணர்வை மாணவர் உணரும் வகையில் பாடசாலை நிர்வாகக் கட்டமைப்புகளில் மாற்றங்கள் கொண்டு வரப்படவேண்டும்.

பாடசாலைகளில் ஒழுக்கத்திற்குப் பொறுப்பான ஆசிரியர்கள் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே தமது கடமைகளைச் செய்கின்றனர்.

எனவே அதிபர்கள், ஆசிரியர்களில் குறைசொல்வதனை நிறுத்தி குற்றவாளிகளைச் சரியாக இனங்கண்டு கூண்டோடு அழித்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி நிற்கின்றது.

அத்தோடு மாணவி வித்தியாவின் கொகையாளிகளுக்கு உச்சமான தண்டனை வழங்குவதை தீவிரப்படுத்துமாறு சங்கம் கோரி நிற்கின்றது.

அதுமட்டுமன்றி பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் அல்லது வழங்குவோருக்கு பகிரங்க தண்டனையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிகளை பாடசாலையில் பாவிப்பதனை முற்றாகத் தடைசெய்ய சட்டரீதியாக கட்டளை வழங்கப்படவேண்டும் எனவும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்  கோரி நிற்கின்றது.

-http://www.tamilcnnlk.com

TAGS: