மிகவும் ஒழுக்கமுள்ள ஒரு சமூகமாக தமிழ்ச் சமூகம் மாற்றப்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியா செட்டிகுளத்தில் வன்னியுர் கவிராயரின் சிலை திறப்பு விழாவில் நேற்று (20.6) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,,
வன்னியூர் கவிராயராக இலக்கிய உலகில் இடம் பிடித்த எஸ்.எவ்.சௌந்தரநாயகம் என்ற இந்தப் படைப்பாளியை இயன்ற வரை எண்ணிப்பார்க்கவும் இலைமறை காயாக வாழ்ந்த இவரையும் இவரின் படைப்புக்களையும் உலகுக்கு அறிமுகஞ் செய்யும் நோக்கோடும் அவரின் படைப்புக்களை நூல் வடிவில் வெளியிடவிருக்கும் இப்பணியானது போற்றுதற்குரியது. நான் வன்னியூர் கவிராயர் பற்றி அதிகம் அறிந்திருக்காத போதும் அவரின் வாழ்க்கைச் சுருக்கக் குறிப்பொன்றை இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எனக்கு வழங்கியிருந்தார்கள். அவற்றில் பொதிந்துள்ள மனதைத் தொட்ட பல நல்ல விடயங்களில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கின்றேன்.
எஸ்.எவ். சௌந்தரநாயகம் அவர்கள் தாம் பிறந்த மண்ணின் மேலுள்ள அளவற்ற பாசத்தினாற் போலும் வன்னியூர் கவிராயர் என்னும் புனைபெயரைச் சூடிக்கொண்டிருந்தார். இப்பொழுதெல்லாம் வன்னிவளநாடு, வீரஞ்செறிந்த வன்னிநாடு என நாம் கூறிப் பெருமைப்பட்டுக் கொள்கின்றோம். ஆனால் கவிராயர் அவர்கள் தமது புனைபெயரைச் சூடிக்கொண்ட ஐம்பதுகளில் வன்னி என்றால் நாகரீகத்தின் நிழல்கூடப்படாத சகல துறைகளிலும் பின்தங்கிய வனம் சார்ந்த பிரதேசம் என்று பொருள் கொள்ளும் நிலை இருந்தது.
ஒருவன் வன்னியான் என்று தன்னைக்கூறிக் கொள்ள சற்றுத் தயங்கிய காலகட்டம் அது. எஸ்.எவ்.சௌந்தரநாயகம் அவர்கள் செட்டிக்குளம் பிரதேசத்தில் இலுப்பைக்குளம் கிழக்கில் 04.04.1921 இல் பிறந்து மன்னார் நல்லாயன் பாடசாலையில் கல்விபயின்றார். அவர் உயர் கல்வியைத் தொடர அவரின் குடும்பத்தாரின் பொருளாதார நிலை இடங் கொடுக்காததால் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்திவிட்டு அவரின் முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாக மேற்கொண்டு வந்த சித்த வைத்தியத் தொழிலையே செய்து வந்தார்.
எனினும் தமிழ் மீதுள்ள அளவற்ற காதலால் தமிழ் இலக்கண இலக்கிய நூல்களைச் சுயமாகக் கற்றுக் கொண்டு இளவயதிலேயே கவிதைகளை இயற்றும் ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்தார். யாப்பிலக்கண அறிவை சுயமாகவே பெற்றுக் கொண்ட இவரின் மரபுக் கவிதைகள் வீரகேசரி வெண்பாப் போட்டியில் இவருக்கு முதற்பரிசைப் பெற்றுக் கொடுத்தது. வன்னியூர் கவிராயர் அவர்கள் கிறீஸ்தவராகப் பிறந்து கிறீஸ்தவ பாடசாலையிலே தமது கல்வியைத் தொடர்ந்த ஒருவர் எனினும் அவர் தொடர்பு கொண்ட பலரும் வெவ்வேறு சமயச் சூழலையும் கருத்து நிலைகளையும் கொண்டிருந்ததாலோ என்னவோ அவரின் ஆக்கங்களில் அவற்றின் தாக்கங்களை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. உதாரணத்திற்கு கதிர்காமக் கந்தனிடம் அவர் பல கோரிக்கைகளை விடுக்கும் பாடல் பிரசித்தமானது.
தன் கவி நீடூழி வாழவேண்டும். தமது புகழ் குன்றின் மேலிட்ட தீபம் போல ஒளிர வேண்டும் எனத் தொடங்கிய அவரின் கவிதை வள்ளி தெய்வானை சமேதராக முருகப் பெருமானை கண்டு மகிழ வேண்டுமென்பதை மூன்றாவது வேண்டுகோளாக விடுக்கின்றது. பின்னர் முருகா நான் இதுவரை கேட்டதெல்லாம் சம்பிரதாயமானவை இன்னுமொன்றைக் கேட்கப் போகின்றேன்,அதனை மறக்காமல் மறுக்காமல் நீ தரத்தான் வேண்டுமென கதிர்காமக் கந்தனை உரிமையுடன் வேண்டி நிற்பது உள்ளத்தைத் தொடுவதாகவுள்ளது. அப் பாடல் வரிகள் பின்வருமாறு –
என் கவிதை நீடுழி வாழவேண்டும்
எனது புகழ் மலை விளக்காய் இலங்க வேண்டும்
பொன்வேண்டும், பொருள்வேண்டும், பூமி வேண்டும்
பூவை தெய்வானை – வள்ளி சகிதம் நின்னை
கண்கள் சிந்தை பூரிக்கக் காணவேண்டும்
காயத்திற் பிணி மூப்புச் சாக்காடற்ற
குன்றாத எழிலிளமை வேண்டும் இந்தக்
குவலயத்தில் பிறப்புடனே முத்தி வேண்டும்.
இன்னவைகள் கேட்கின்றேன் – சம்பிரதாயம்
இவைகளை நீ தந்தாலும் தராவிட்டாலும்
உன்னிடத்தில் நான் கெட்ப தொன்றேயொன்று
உடல் பொருள் ஆவி ஆத்மாவில் மேலாம் என்
அன்னைமொழி இனிய மொழி தமிழ் ஈழத்தில்
அரியணையில் அநவரதம் வாழ வேண்டும்
நன்நயமார் இவ் வரத்தைத் தரத்தான் வேண்டும்
நானிலத்தோர் போற்றுங் கதிர்காமக் கந்தா!
அதாவது தனது உடல், பொருள், ஆவி அனைத்திற்கும் மேலாக மதிக்கின்ற தன் இனிய அன்னை மொழியாம் தமிழ் மொழி தமிழ் ஈழத்தின் அரியணையில் எப்பொழுதும் நிலைபெற்று இருக்கக் கதிர்காமக் கந்தனை வேண்டுவதாக இப்பாடல் அமைகின்றது.
இவரின் கவிதைகளில் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, சிறுமையைக் கண்டு சினம் கொள்ளல். மேலும் சாதி, மதம், இனம், மொழி, மாவட்டம், பிரதேசம் போன்ற பிரிவுகள் மூலம் உயர்வு தாழ்வு பாராட்டாத ஒரு சமூக அமைப்பு, மறுமலர்ச்சி போன்ற பல பண்புகளைத் தரிசிக்கக் கூடியதாக உள்ளது.
ஓரிடத்தில் சிந்தனையை மாற்றுமாறு வேண்டுகின்றார் பின்வருமாறு –
எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம்
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று
எல்லோரும் இன்றும் என்றும் வாழ்ந்திட
நான் நாமாகச் செய் சிந்தனையை – என்றார்.
“நான்” என்பது போய் “நாம்” என்ற பொதுமைப்பாடு உருவாக வேண்டும் என்பதில் அவர் குறியாக நின்றார். இன்றைய காலகட்டத்தில் எம் எல்லோராலும் எமது மனதிற்கு எடுக்க வேண்டிய ஒரு கருத்து இது. “நான்” – “நாமாக” மாற வேண்டும். எம்மிடையே கருத்து வேறுபாடுகள் இருக்க வேண்டும். ஆனால் “நான்” என்ற அகந்தை இருக்கக் கூடாது. நாம் யாவரும் ஒரே மொழி பேசும் சகோதர சகோதரிகளே என்ற எண்ணம் மேலோங்க வேண்டும் என்ற கருத்தை இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன்னரே எம்முன்னே வைத்து விட்டுச் சென்று விட்டார் கவிராயர். 1978 ம் ஆண்டில் இவர் இறைவனடி சேர்ந்தார்.
பல நூற்றுக் கணக்கான கவிதைகள் பத்திரிகைகளிலும், ஏனைய இலக்கிய இதழ்களிலும் வெளியிடப்பட்ட போதும் இவரது கவிதைத் தொகுதி ஒன்று கூட இதுவரை வெளிவரவில்லை. இக்குறைபாடு தற்போதைய நூல் வெளியீட்டின் மூலம் ஓரளவு சீர் செய்யப்படுமென நம்புகின்றேன். அத்துடன் இவ்வாறான பொருள் பொதிந்த கவிதைத் தொகுப்புக்களும், கவிதைகளும் பாடசாலை மாணவர்களின் பாடப் புத்தகங்களில் இடம்பெற வேண்டியது முக்கியமானதாகும். இப் பொறுப்பைப் பாடசாலைப் புத்தக மறுசீரமைப்புக் குழுவின் கவனத்திற்கு விடுக்கின்றேன். இது போன்ற நல்ல நிகழ்வுகள் மேலும் மேலும் முன்னெடுக்கப்பட வேண்டும். எமது பின்னணிகள் வெளிவர வேண்டும். எமது மக்களின் நல்லாக்கங்கள் உலகறியச் செய்ய வேண்டும். இவற்றினூடாக மிகவும் ஒழுக்கமுள்ள ஒரு சமூகமாக தமிழ்ச் சமூகம் மாற்றப்பட வேண்டுமென தெரிவித்தார்.
-http://www.tamilcnnlk.com

























