வடக்கில் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் அவசியமாகும். இலங்கை தமிழர் மேம்பாட்டு பேரவை
வடமாகாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த அரச மற்றும் அரசசார அமைப்புக்கள் முன்வரவேண்டும் என இலங்கை தமிழர் மேம்பாட்டு பேரவையின் தலைவர் தவராசா தர்ஸன் வேண்டு கோள் விடுத்துள்ளார்.
போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பான விசேட செயற்றிட்டம் ஒன்றை வடக்கில் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது
தமிழர்களின் பொருளாதாரத்தையும் கலாசாரத்தையும் சிதைக்கும் நோக்கில் சில விசமிகளால் வடமாகாணத்தை மையமாக கொண்டு போதைப்பொருள் வியாபாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் பாடசாலை சிறுவர்களும் அன்றாட தொழிலை மையமாக கொண்டவர்களும் பெரும்பாலும் இலக்காகி வருகின்றனர்.
அது மாத்திரமன்றி சட்டவிரோத கசிப்பு விற்பனை மற்றும் அன்றாடம் அதிகரித்து வரும் மது விற்பனை நிலையங்களும் இளம் தமிழ் சமுதாயத்தை பாதித்து வருகின்றன.சில மதுபான நிலையங்கள் பாடசாலைக்கு அருகாமையில் விதிமுறைகளிற்கு அப்பால் அமைந்திருப்பதை கண்ணூடாக
காணக்கூடியதாக உள்ளது.இதற்கான அனுமதியை யார் தயவில் வழங்கியுள்ளனர் என்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட வேண்டி உள்ளது.
அரச அதிகாரிகள் மக்களுக்கு பாதிப்பினை உருவாக்கும் விடயங்கள் தொடர்பாக தலையீடு செய்வதை விரும்பாது உள்ளனர். தலையீடு செய்ய முற்பட்டால் தமது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதாவது பாதிப்பினை குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் உருவாக்கி விடக் கூடும் என்ற ஒரு வகையான அச்சம்காரணமாக ஒதுங்கி தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.
பிரதேச செயலகங்களில் ஒரு கிராமசேவகர் பிரிவுக்கு குறைந்த பட்சம் மூன்று வெளிக்கள உத்தியோகத்தர்கள் கடiயில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆயினும் இவர்களால் இவ்வாறான செயல்பாடுகள் தொடர்பாக பொலிசாருடன் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தில் ஈடுபட முடிவதில்லை.
இந்நிலையில் சட்டவிரோத கசிப்பு விற்பனையாளர்கள் தினமும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு வருகின்ற போதும் அவர்கள் கசிப்புவிற்பனையை தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.இவற்றினை கட்டுப்படுத்த கிராமிய அபிவிருத்தி சங்கங்கள் அச்சப்படுகின்றன.
ஏனெனில் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் நீதி மன்றால் ஏற்கனவே குற்றவாளியாக இனங்காணப்பட்டு தண்டனை பெற்றவர்களாக இருக்கின்றனர்.இவ்வாறான நிலமை தொடருமாக இருந்தால் எமது பொருளாதாரம் மாத்திரமன்றி தமிழ் மக்களுடைய
கலாசாரமும் நலிவடைவதுடன் எதிர்காலத்தில் தமிழர் பிரதேசங்களில் குற்றச்செயல்கள் அதிகரிக்கும் வாய்ப்பும் அதிகமாக காணப்படுகிறது.
எனவே வடக்கில் தலை தூக்கியுள்ள போதைப்பொருள் பாவனையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் காவல்துறையினர் ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் ஒன்றினை வடக்கில் செயற்படுத்த முன்வரவேண்டும். அவ்வாறான சந்தர்ப்பத்தின் மூலம் மாத்திரமே போதைப்பொருள் பாவனையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-http://www.tamilcnnlk.com
குடியையும் ,போதை பொருள்களையும் ஒழித்தால் சிந்திக்கும் தமிழன் கூடுவான் .தமிழினம் விழித்து எழும்