“சிரியாவில் கை வைத்தால் பற்றி எரியும்”; அதிபர் அசாத் மிரட்டல்

“சிரியா விவகாரத்தில் மேற்குலக நாடுகள் தலையிட்டால், நிச்சயம் மோசமான விளைவுகள் ஏற்படும். இந்த மண்டலத்தில் மேலும் ஒரு ஆப்கானிஸ்தானை உருவாக்க மேற்குலகம் விரும்புகிறது” என, சிரியா குடியரசுத் தலைவர் பஷர் அல் அசாத் குற்றம் சாட்டியுள்ளார். 

சிரியாவில் கடந்த 28-ம் தேதி, “போர் விமானங்கள் பறக்கத் தடை” விதிக்கக் கோரி, மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அன்றும், அதற்கு மறுநாளும், சிரியா இராணுவம் நடத்திய வன்முறையில் மக்கள், போலீசார் என 50 பேர் கொல்லப்பட்டனர்.

சிரியாவில் வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட்டு வரும் நிலையில், மிக நீண்ட இடைவெளிக்குப் பின், நேற்று முதன் முதலாக, பிரிட்டனின் ‘சண்டே டெலிகிராப்’ பத்திரிகைக்கு குடியரசுத் தலைவர் அசாத் நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.

அந்த நேர்காணலின் போது அவர் கூறியதாவது; “சிரியா விவகாரத்தில், மேற்குலக நாடுகள் பெரும் அழுத்தம் கொடுக்கின்றன. இந்த மண்டலத்தில் எப்போது வேண்டுமானாலும் தீப்பற்றிக் கொள்ளக் கூடிய நிலையில் சிரியா உள்ளது. அதனால், சிரியா விவகாரத்தில் மேற்குலக நாடுகள் தலையிட்டால், இங்கு மோசமான விளைவுகள் ஏற்படும். அதனால், இந்த மண்டலமே தீப்பிடித்து எரியும். சிரியாவைப் பிளக்க திட்டமிட்டால் இந்த மண்டலமே பிளவுண்டு போகும்.”

“இந்த மண்டலத்தில் இன்னொரு ஆப்கானிஸ்தான் உருவாக வேண்டுமா? மேலும் பல ஆப்கன்கள் உருவாக வேண்டுமா? பாதுகாப்பு வீரர்கள் பல தவறுகளைச் செய்துவிட்டனர் என்பது உண்மையே. ஆனால் இப்போதைய இராணுவ நடவடிக்கை என்பது ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக மட்டுமே. சிரியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் துவங்கிய ஆறே நாட்களில், நான் பல சீர்திருத்தங்களை அறிவித்தேன். பல புதிய சட்டங்களைக் கொண்டு வந்தேன். எகிப்து, டுனீசியா, ஏமனில் இருந்து சிரியாவின் அரசியலும் வரலாறும் வேறுபட்டவை.” இவ்வாறு அசாத் தெரிவித்தார்.

அரபு லீக்கின் வெளியுறவு அமைச்சர்கள், உடனடியாக மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தும்படி, சிரியா குடியரசுத் தலைவருக்கு அவசரச் செய்தி ஒன்றை நேற்று முன்தினம் விடுத்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில், குடியரசுத் தலைவர் அசாத் இவ்வாறு கூறியுள்ளார்.