மஹிந்த ஆட்சியை போன்று புதிய ஆட்சியாளர்களும் நடந்துகொண்டால் பாரிய போராட்டம் வெடிக்கும்! சுரேஷ் எம்.பி

sureesவடகிழக்கு தமிழர் தாயகத்தில் படையினர் அபகரித்து வைத்திருக்கும் நிலங்களிலிருந்து படையினர் வெளியேறுவதும், அந்த நிலத்திற்குச் சொந்தமான மக்களை மீள்குடியேற்றுவதும் படையினரின் முடிவிலேயே தங்கியிருப்பதாக பிரதமர் ரணில் கூறியிருக்கும் கருத்துக்களை நாம் ஒத்துக்கொள்ளப் போவதில்லை.

மஹிந்த ஆட்சியை போன்று புதிய ஆட்சியாளர்களும் தமிழ் மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் அக்கறையற்றிருந்தால் மஹிந்த ஆட்சியில் நடைபெற்ற மீள்குடியேற்றத்திற்கான போராட்டங்களை விடவும் மோசமான பாரியளவு போராட்டங்கள் நடத்தப்படும். அதனையே புதிய ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள், என பா.உ. சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை மாலை நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

மீள்குடியேற்றம் என்பது படையினர் எமது மக்களின் நிலங்களிலிருந்து வெளியேறுவது தொடர்பான விடயம். தனியாருக்குச் சொந்தமான நிலம் பெருமளவு படையினர் வசம் உள்ளது. 99 வீதம் படையினர் உள்ள நிலங்கள் தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்கள், முக்கியமான விடயம் 10 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 40 ஆயிரம் பேர் மீள்குடியேற வேண்டியுள்ளது.

வலி,வடக்கில் மட்டுமல்லமல் பல்வேறு இடங்களில், பல நூற்றுக்கணக்கான நிலங்களை படையினர் வைத்துள்ளார்கள், பயிற்சி முகாம்கள், படை தலைமையங்கள் கட்டியுள்ளார்கள், ஆரம்பம் முதல் கூறிவருகிறோம். அரசாங்கம் முதலில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவோம் என்ற உறுதிமொழியை வழங்கவேண்டும். அவ்வாறு எடுத்தாலே மீள்குடியேற்றம் சாத்தியம்.

ஆனால் தற்போது பிரதமர் சொல்கிறார் மீள்குடியேற்றத்தை படையினர் தீர்மானிக்க வேண்டுமாம். மக்களை குடியேற்ற படையினர் யார்? படையினருக்கும் மீள்குடியேற்றத்திற்கும் என்ன தொடர்புள்ளது. அவ்வாறானால் அரசு எதற்காக இங்கே இருக்கின்றது.

ஒரு விடயத்தை பார்க்கலாம். 59 முகாம்கள் அகற்றப்பட்டது எமது ஆட்சிக்காலத்தில் அல்ல முன்னைய ஆட்சிக்காலத்திலேயே, எமது ஆட்சியில் ஒன்றும் மூடப்படவில்லை. என்பதன் ஊடாக நாங்கள் இராணுவத்தை வடக்கிலிருந்து வெளியேற்ற மாட்டோம். என்ற கருத்தையே சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறார்கள்.

இவர்கள் தேர்தலின் பின்னரும், தமிழ் மக்களை மீள்குடியேற்ற மாட்டார்கள். முதலமைச்சரும் கூறியிருக்கின்றார். படையினர் வடகிழக்கிலிருந்து அகற்றப்படவேண்டும். அவ்வாறு அகற்றப்பட்டாலேயே சாதாரணமான சூழல் உருவாகும். இராணுவம் பல்வேறு தேவைகளுக்காக இங்கே பயன்படுத்தப்படுகின்றது.

தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தவும் பயன்படுத்துகின்றார்கள். வடக்கில் சுமுக நிலை உருவாக வேண்டுமானால் படையினர் வடக்கிலிருந்து அகற்றப்படவேண்டும் என்பது தவிர்க்க முடியாத ஒரு விடயமாகும். தேர்தலுக்குப் பின்னர் திருந்துவார்கள் என நினைத்தால் அதனை விட மோசமான நிலை இல்லை.

மக்களை மீள்குடியேற்றுவதற்கான போராட்டங்கள் மீள் உருவாக்கம் பெறுவதற்கான சூழலை மீள உருவாக்க அரசாங்கம் நினைக்கின்றது. மஹிந்த ஆட்சியில் இடம்பெற்றமை போன்றல்லாமல் மிகப்பெருமளவில் நடைபெறும். மக்கள் மீள்குடியேற்றப்படவேண்டும். அல்லாதுபோனால் போராட்டங்கள் தவிர்க்க முடியாதவை,

இரகசிய முகாம்கள், காணாமல்போனவர்கள் தொடர்பாக,

20 ஆயிரம் பேர் காணாமல்போயுள்ளார்கள் என ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு என்ன நடந்தது என முன்னைய ஆட்சியாளர்களும், இப்போதுள்ள ஆட்சியாளர்களும் கூறவில்லை. காணாமல்போனவர்களின் உறவினர்கள் பல சாட்சிகளை கூறியிருக்கின்றார்கள்.

எங்கே? எப்போது? என்ற விபரங்களை வழங்கியிருக்கின்றார்கள். அந்த விபரங்கள் காணாமல்போனவர்களை கண்டுபிடிப்பதற்கு முழுமையான விபரங்கள் இவை. ஆனால் அவர்கள் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் திருகோணமலை கடற்படை தளத்தில் கோத்தா முகாமில் 700ற்கும் மேற்பட்டவர்கள் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தார்கள், சிறிய வீடுகளில் சிலர் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களுக்கு என்ன நடந்தது? இவர்கள் எங்கே என நாங்கள் கேட்டிருந்தோம். அதற்கு இல்லை என கூறப்பட்டது. முன்னர் இருந்ததா? என்பதற்கு பதில் இல்லை.

உண்மையில் இப்போது கொழும்பிலிருந்தும், வத்தளை, கம்பஹா 11 மாணவர்கள் கடத்தப்பட்டு, பல கோடி பணம் கப்பம் கேட்டதாகவும், இந்த முகாம் வசந்த ஹரன்னகொட என்ற கடற்படை தளபதியின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் புலனாய்வு பிரிவினர் கண்டறிந்து தற்போது நீதிமன்றத்தில் கூறியிருக்கின்றமை ஊடாக நாங்கள் சரியான விடயத்தை வெளிப்படுத்தியிருக்கின்றோம். என்பதும் வெளிப்பட்டிருக்கின்றது.

கொழும்பு, திருகோணமலை கடற்படை தளத்திலும் கடத்தப்பட்டு கப்பம் பெறப்பட்டு கப்பம் பெறாமல் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் நாம் கூறிய கருத்து இன்னும் திடகாத்திரமாக மாறியிருக்கின்றது. இந்நிலையில் சரியான சர்வதேச விசாரணை நடத்தப்படுவதன் ஊடாக இதனை கண்டறிய முடியும் என்பது எங்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கை,

அவ்வாறு நடைபெற்றாலே கடற்படை தளபதிக்கும் மற்றையவர்களுக்கும் என்ன தொடர்பு என்பதை கண்டறிய முடியும். மேலும் பாதுகாப்பு செயலாளருக்கும் என்ன தொடர்பு என்பதையும் கண்டறியலாம். ஆனால் முன்னைய ஆட்சி போன்றே எல்லாவற்றையும் மூடி மறைக்க முற்படுகின்றார்கள்.

முன்னைய ஆட்சிக்காலத்தில், கைதானவர்கள், கடத்தப்பட்டவர்கள், ஒப்படைக்கப்பட்டவர்கள் என அனைவரினதும் விபரங்களுடன் யார் யார் உள்ளார்கள், யார் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதை வெளிப்படுத்தவேண்டும். அவ்வாறு வெளிப்படுத்தினாலேயே போர் குற்றங்கள் முன்னர் இடம்பெற்றுள்ளது என்பதை கண்டறியலாம், ஆனால் அதனை அவர்கள் செய்ய மாட்டார்கள்.

போதைப் பொருள் பாவனை,

உலகின் பல நாடுகளில் இவ்வாறான வேலைத்திட்டத்தை செய்தார்கள், குறிப்பாக பலஸ்தீத்தில் சிறிய யூத குடியேற்றங்களை உருவாக்கி பலஸ்த்தீனியர்களை சிறுபான்மையாக்கினார் கள், இதேபோன்று திபெத்திலும் இடம்பெற்றது.

இதேபோன்று வடக்கிலும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் நிலையில், தமிழ் மக்கள் அல்லது எங்கள் இனத்தின் இளைஞர்கள், மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள். இந்த சக்திகளை அழிப்பதற்காக போருக்குப் பின்னர் படையினர் பல விடங்களை செய்கின்றார்கள். விளையாட்டு போட்டிகளில் சாராயம் வழங்குகின்றார்கள்.

போதைப்பொருள் பாவனையை அவர்களே உருவாக்கினார்கள். போராட்ட காலத்திலும், போராட்டத்திற்கு முன்னரும் இப்போதுள்ளதை போன்று போதைப் பாவனை இருந்திருக்கவில்லை. எனவே இது திட்டமிட்டவகையில் எம்மை அழிப்பதற்கான எமது சமூகத்தை முழுமையாக அழிப்பதற்கான முயற்சி.

ஜனாதிபதியே கூறுகின்றார் குடிமக்கள் அதிகரித்திருப்பதாக எனவே பாடசாலை மட்டத்தில், சில விழிப்புணர்வு முயற்சிகளை மாகாணசபை எடுத்துள்ளது. இதேபோன்று பல்கலைக்கழக மாணவர்களும் இந்த விடயத்தில் அதிகளவு முக்கியத்துவத்தை காட்டவேண்டும். என்றார்.

-http://www.tamilwin.com

TAGS: