சிறிலங்காவில் கடந்த ஆண்டிலும் மனித உரிமைகள் பிரதானமான பிரச்சினைக்குரிய விவகாரமாக இருந்தது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள, நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான 2014ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வொசிங்டனில் நேற்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், சிறிலங்காவில் கடந்த ஆண்டும் மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிவில் சமூகப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், மற்றும் விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் எனக் கருதப்படுவோர் சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்தவர்களால் தாக்கப்படும் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
காணாமற்போகச் செய்யப்படுதல், கண்டபடி கைது செய்யப்படுதல், தடுத்து வைத்தல், சித்தரவதை, தடுப்புக்காவலில் உள்ளோர் துஸ்பிரயோகம் செய்யப்படுதல், வல்லுறவு, ஏனைய வடிவங்களிலான பாலியல் மற்றும் பாலின ரீதியான வன்முறைகள் சிறிலங்கா படைகளாலும், காவல்துறையினராலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பரந்தளவிலான மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படாத நிலை பரவலாக உள்ளது.
போருக்குப் பிந்திய நிலையிலும், ஆட்கள் காணாமற்போகச் செய்யப்படுதலும், நீதிக்குப் புறம்பான படுகொலைகளும் இடம்பெற்றுள்ளன.
ஊடக அமைப்புகள், அரசசார்பற்ற நிறுவனங்கள், அரசாங்கத்தை விமர்சிப்போர், அரச ஆதரவாளர்களால் துன்புறுத்தப்படுவது, அச்சுறுத்தப்படுவது, தாக்கப்படுவது போன்ற சம்பவங்களால், பரவலான அச்சம் காரணமாக ஊடகவியலாளர்கள் சுய தணிக்கையை கடைப்பிடிக்க வேண்டிய நிலை எற்பட்டது.
குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாததால் பொதுவான ஜனநாயக செயற்பாடுகள் முடக்கமடைந்தன.
அரசபடைகள் மற்றும் துணை ஆயுதக் குழுக்களால் பெரும்பாலும் தமிழ்ப் பிரதேசங்களில் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் இடம்பெற்றது மற்றொரு முக்கியமான மனித உரிமை பிரச்சினையாகும்.
மோசமான சிறைகள், விசாரணையின்றி நீண்டகாலம் தடுத்து வைக்கப்படுதல், நியாயமான விசாரணை மறுக்கப்படுதல் என்பனவும் முக்கிய பிரச்சினையாக உள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் மக்களின் தனிப்பட்ட உரிமைகளை மீறியுள்ளது. பேச்சு, ஊடக, அமைதியாக ஒன்று கூடும், நடமாடும் சுதந்திரம் அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்டது.
பெரும்பாலான பிரதான ஊடகங்கள் அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்டன. சில இணையத்தளங்கள் தணிக்கை செய்யப்பட்டன.
பெரும்பாலும் நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் மக்கள் சென்று வரக் கூடிய நிலை இருந்தாலும், வடக்கில் இராணுவ, காவல்துறை சோதனைச் சாவடிக் கெடுபிடிகள் தொடர்ந்தன.
உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்ந்தும் நடைமுறையில் இருந்தன.
இடம்பெயர்ந்தோர் உரிமைகள் மற்றொரு முக்கியமான பிரச்சினையாகும். இடம்பெயர்ந்தவர்கள் தாம் எங்கு மீளக்குடியமர்வது என்பதை சுதந்திரமாக தீர்மானிக்க முடியவில்லை.
அரசாங்கத்தில் வெளிப்படைத்தன்மையில்லா நிலையும், மோசமான ஊழல்களும் தொடர்ந்தன.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும், சிறுவர் துஸ்பிரயோகமும் மற்றொரு முக்கியமான பிரச்சினையாகும்.
சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து இடம்பெற்றன. மத சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான மீறல்களும் அதிகரித்திருந்தன.
அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்துடன் இணைந்திருந்தவர்கள் உயர்ந்தபட்ச தண்டனை விலக்குரிமையை பெற்றிருந்தனர்.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட மிக குறைந்தளவு அரசாங்க மற்றும் இராணுவ அதிகாரிகள் மீதே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
2009இல் முடிவுக்கு வந்த போரில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான சட்ட மற்றும் அனைத்துலக மனித உரிமை சட்ட மீறல்களில் ஈடுபட்ட ஒருவரேனும் இன்னமும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.
அரசாங்க ஆதரவு துணை ஆயுதக்குழுக்கள் என்று சந்தேகிக்கப்படுவோரால், பொதுமக்கள் மீதான கொலைகள், கடத்தல்கள், தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
துணை ஆயுதக்குழுக்களுக்கும் அரச ஆயுதப்படைகளுக்கும் இடையில் அடிப்படை உறவுகள் இருப்பதாக அறிக்கைகள் தொடர்ந்து கிடைக்கின்றன.
மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களில் பொது பலசேனா அமைப்பு ஈடுபட்டுள்ளது. பொது பலசேனாவின் வன்முறைகளால் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த அறிக்கை வெளியிடப்பட்டதையடுத்து நடந்த செய்தியாளர் சந்திப்பில், கருத்து வெளியிட்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமைகள், ஜனநாயகம், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி- சிறிலங்காவிலும், நைஜீரியாவிலும் மக்கள் தமது தலைவர்களை மாற்றும் உரிமையைப் பயன்படுத்திய தேர்தல்கள் நடைபெற்றதாகவும், இந்த பிந்திய மாற்றங்கள் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
-http://www.pathivu.com
ரொம்ப நாளுக்கு பிறகு சிங்கவனின் அட்டுழியம் இந்தியாவின் குள்ளனரிதனமும் அமெரிக்க தெரிந்துகொண்டது.வேதனை என்னவென்றால் சிங்களவன் கடந்த 5 வருடமாக எல்லா சாட்சிகளையும் அழித்துவிட்டான்.இப்போ அமரிக்க என்ன புடுங்க போகுது.
இந்த லட்சணத்தில் இந்தியா ஜெனீவா ஐ நா மனித உரிமை ஆணையத்தில் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக மற்ற நாடுகளில் வாழும் மக்களுக்கு குரல் கொடுக்க ஒரு பொறுப்புள்ள நாடாக அமர்ந்துள்ளது. கேவலத்திலும் கேவலம்; மேலும் இந்தியா ஐ நா பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பினராக ரத்து அதிகாரத்தோடு தேர்ந்தெடுக்கப் பட வேண்டி இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்; ஒரு வேலை இந்தியா தேர்தெடுக்கப் பட்டு விட்டால் அந்தத் தேர்வானது இனிமேல் உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கு திண்டாட்டம்; மேலும், இந்தியா என்றும் கண்மூடித்தனமாக இலங்கைக்கு ஆதரவாக செயல் பட்டுக் கொண்டிருப்பதால் அங்குள்ள பேரினவாதியான சிங்கள மக்களுக்கு இது கொண்டாட்டமாகிவிடும்.