வடக்கு கிழக்கை சேர்ந்த 15 வெகுசன அமைப்புக்கள் சேர்ந்து கூட்டாக ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம்

zeid_zeidஉள்ளகப் பொறிமுறை உருவாக்குவது தொடர்பில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடன் எந்தவொரு கலந்தாய்வையும் இலங்கை அரசாங்கம் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டி ஐ. நா மனித உரிமை ஆணையாளருக்கு வடக்கு கிழக்கைச் சேர்ந்த 15 வெகுசன அமைப்புக்கள் சேர்ந்து கூட்டாக  கடிதம் ஒன்றை இன்று அனுப்பி வைத்துள்ளன.

தமிழ் சிவில் சமூக அமையம், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம், யாழ்ப்பான பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம், வவுனியா பிரஜைகள் குழு, மன்னார் பிரஜைகள் குழு, காணாமல் போனோரின் உறவினர் சங்கம், கிழக்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் கூட்டமைப்பு உட்பட வடக்கு கிழக்கை சேர்ந்த 15 வெகுசன அமைப்புக்கள் சேர்ந்தே கூட்டாக கடிதம் ஒன்றை இன்று அனுப்பி வைத்துள்ளன.

மார்ச் மாதம் 28வது கூட்டத்தொடரில் தொடக்கவுரை ஆற்றிய போதும், கடந்த மாதம் 29வது கூட்டத்தொடரில் தொடக்கவுரை ஆற்றிய போதும் ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் உள்ளகப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதாயின் அது பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்தாலோசித்தே உருவாக்கப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கியிருந்தார்.

அவ்வாறான ஆலோசனை செயன்முறை ஒன்று நடைபெற்று வருவதாக இலங்கை வெளிநாட்டமைச்சகம் அண்மையில் தெரிவித்துள்ள நிலையிலேயே இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐ. நாவின் வதிவிடப் பிரதிநிதி ஜூன் 4ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற மீள்குடியேற்றம் சம்பந்தமான முழுமையான கொள்கை வரையறை மற்றும் செயற்பாட்டுத் திட்டத்தை உருவாக்கல்’ எனும் தலைப்பில் இடம்பெற்ற நிதி வழங்காளர் மாநாட்டில் (Donor Conference on the Comprehensive Policy Framework and Formulation of the Resettlement Action Plan) உள்ளகப் பொறிமுறை ஒன்றிற்கு ஐ. நா நிதி வழங்கத் தயார் என்று கூறியிருந்தமையை இக்கடிதத்தில் இவ்வமைப்புக்கள் கண்டித்துள்ளன.

செப்டெம்பரில் ஜெனீவா அறிக்கை வர முன்னரே இப்படியான அறிவிப்புக்கள் தவறானவை என்றும் அவை ஐ. நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையின் பெறுமதியைக் குறைக்கும் தன்மையானவை என்றும் இவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இவ்வறிவிப்பு தொடர்பில் ஐ. நா. மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் கலந்தாலோசிக்கப்பட்டதா என்று கேள்வியையும் கடிதம் எழுப்புகின்றது.

-http://www.tamilwin.com

TAGS: