2002 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுடன் நடத்தப்பட்ட சமாதான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்திருந்தால், போரின் மூலம் இழக்கப்பட்ட பல உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
சந்திரிகா குமாரதுங்கவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார்.
போர் நிறுத்த உடன்பாட்டின் கீழ் விடுதலைப்புலிகளுடன் பேச்சு நடத்தப்பட்ட போது சந்திரிகா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதனை புரிந்துக்கொள்ளவில்லை.
2003ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் முரண்பாடுகளுக்கு மத்தியில் தேசியப்பிரச்சினை தொடர்பில் செயற்படமுடியும் என்று தாம் நினைத்த போதும் அது தோல்வியடைந்தாக ரணில் குறிப்பிட்டார்.
அதற்கு பலவேறு காரணங்கள் இருந்தன. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சில உறுப்பினர்கள் அந்த முயற்சியை குறுகிய பார்வையுடன் நோக்கினர்.
இதன்காரணமாக 2003ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சியின் அரசாங்கம் கலைக்கப்பட்டு நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால் விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்தையும் ரத்துச் செய்யப்பட்டது.
இதேவேளை கடந்த காலத்தில் பல முரண்பாடுகள் இருந்தபோதும் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக சந்திரிக்காவுடன் இணைந்து செயற்பட ஐக்கிய தேசியக்கட்சி இணங்கியது.
இதனடிப்படையில் பல்வேறு அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டார் என்றும் ரணில் சுட்டிக்காட்டினார்.
-http://www.tamilwin.com