20 ஆசனங்களை பெற்று பேரம் பேசும் சக்தியாக கூட்டமைப்பு திகழ வேண்டும்

tna_members_003பொதுத் தேர்தலில் 20 ஆசனங்களையாவது பெற்று பேரம் பேசும் பலம்மிக்க சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திகழ வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டத்திலேயே சம்பந்தன் இதனை வலியுறுத்தினார். வவுனியாவில் நேற்று இந்தக் கூட்டம் நடைபெற்றது.

2004ம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 22 ஆசனங்களைப் பெற்றிருந்தது. இம்முறை 2 ஆசனங்கள் குறைக்கப்பட்டிருப்பதால் 20 ஆசனங்களைப் பெற்று பலமான பேரம் பேசும் சக்தியாக கூட்டமைப்பு காணப்பட வேண்டும்.

இதற்கு சகல மக்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்வது அவசியம் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக கலந்துகொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.

ஜனநாயக சூழ்நிலையில் நடைபெறும் பொதுத் தேர்தல் என்பதால் இது முக்கியமான தேர்தலாக அமைந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைக்கும் ஆசனங்களைக் குறைப்பதற்கு பல்வேறு சக்திகள் முயற்சிக்கின்றன.

இவற்றை முறியடித்து பலமான நிலையில் பேரம் பேசும் சக்தியாக இருந்தாலே அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களில் அடுத்து வரும் அரசாங்கத்துக்கு அழுத்தங் கொடுக்க முடியும் என்ற கருத்தும் இக்கூட்டத்தில் கூறப்பட்டதாக அரியநேத்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டு ஓரிரு வாரங்களில் வெளியிடுவதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டமொன்று நடைபெற்றது.

தேர்தல் விஞ்ஞாபனம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கும் பணிகள் வேகமாக இடம்பெற்று வருகின்றன. வடக்குக் கிழக்கில் வாழும் ஒவ்வொரு பொது மக்கனின் உள்ளக்கிடக்கையை உள்ளீர்த்தவாறே அது அமையவுள்ளது.

குறிப்பாக யுத்தத்தின் பின்னரான நிலையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சினைகளை முழுமையாக இவ்விஞ்ஞாபனம் உள்ளடக்கவுள்ளது.

குறிப்பாக அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை, மீள்குடியேற்றம், பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரம், வேலையற்ற இளைஞர் யுவதிகள் பிரச்சினைகள் போன்ற பல்வேறு விடயங்கள் ஆழமாக ஆராயப்பட்டு உள்வாங்கப்படவுள்ளன.

அதேபோன்று நிரந்தர அரசியல் தீர்வு குறித்த பிரதான விடயமும் விஞ்ஞாபனத்தில் உள்வாங்கப்படவுள்ளது. அரசியல் தீர்வு என்பது வடகிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களை மையப்படுத்தியதாகவே அமைய வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். அவ்வாறான நிலையில் எமது தேர்தல் விஞ்ஞாபனம் அதனைத் தெளிவாக அனைவருக்கும் உணர்த்துவதாய் அமையவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிரந்தர அரசியல் தீர்வு விடயத்தில் ஒழிவு மறைவின்றியே தமது நிலைப்பாட்டை முன்வைக்கவுள்ளது. பெரும்பான்மை சமூகம் ஆட்சேபிக்காத வகையில் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை பெற்று தலைநிமிர்ந்து வாழ்வதை அடிப்படையாகக் கொண்டே எமது நிரந்தர அரசியல் தீர்வு பரப்பு அமையவுள்ளது.

இதில் பெரும்பான்மை சமூகத்திற்கோ அல்லது வேறு தரப்புக்கோ ஒழிவு மறைவாகச் செயற்படவேண்டிய தேவை எமக்கில்லை என்றார்.

-http://www.tamilwin.com

TAGS: