யாழ்ப்பாணம் பெருமாள் ஆலயத்தில் தெலுங்கு பட்டாச்சாரியார்கள் பூசை யாழ்ப்பாண சைவர்கள் போர்கொடி

navalarஇந்தியா – ஆந்திரப் பிரதேசத்திலிருந்து கொண்டுவரப்பட்ட தெலுங்குப் பட்டாச்சாரியார்களைக் கொண்டு யாழ்ப்பாணம் பெருமாள் கோயிலில் வைணவ முறைப்படி
பூசைகள் ஆரம்பிக்கப்பட்டமைக்கு யாழ்ப்பாண சைவ சமயத்தவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இந்தப் பூசைகளை நிறுத்தி மீண்டும் சிவாகம முறைப்படியான பூசைகளை மேற்கொள்ளவேண்டும் என்று சைவ சமய அமைப்புகளின் பிரதிநிதிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை முதல் மேற்படி கோயிலில் பின்பற்றப்பட்டு வந்த சிவாகம முறைமை முற்றிலும் மாற்றப்பட்டுள்ளமை குறித்து ஆராய்வதற்கான கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் அதன் கொக்குவில் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,

சிவபூமி எனப்படும் ஈழமணித் திருநாட்டில் சைவ சமயத்தவர்களே பெருமாள் ஆலயங்களில் வழிபாடு செய்து வருவதால் யாழ்ப்பாணம் பெருமாள் ஆலயத்தில் இதுவரை பின்பற்று வந்த சிவாகம மரபை ஒட்டியே பூசை வழிபாடுகள் செய்யப்பட வேண்டும்.

இந்த ஆலயத்தில், சைவர்களால் முதலில் வழிபடப்படும் பிள்ளையார் வழிபாட்டை பிரதம பூசகர்கள் ஆற்றாமை இருப்பதும் திருவுருவச் சிலையை வைஸ்ணவ முறைப்படி மாற்றியமைக்க முற்படுவதும் உடனடியாக கைவிடப்பட வேண்டும்;.

ஈழத்து சிவாச்சாரியர்களை கொண்டே தொடர்ந்தும் பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்படுதல் வேண்டும்;. இந்தியாவின் ஆந்திரா பிரதேச தெலுங்கு பட்டாச்சாரியர்களை கொண்டு வழிபாடுகள் நடாத்துதல் நிறுத்தப்படல் வேண்டும்.

இதுவரை சைவ சமயத்தை பின்பற்றி வந்தவர்களுக்கு தெலுங்கு பட்டாச்சாரியர்களை கொண்டு வைஸ்ணவ முறையில் சம்மானம் எனப்படும் தீட்சை வழங்கல் நிறுத்தப்படல் வேண்டும்;. இவ்வளவு காலம் பூஜை செய்ததற்கான திட்டமிடப்பட்டுள்ள பிராயச்சித்த நடவடிக்கைகள் கைவிடப்படுதல் வேண்டும்.

மேற்படி கோரிக்கைகளை எதிர்வரும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்;கு முன்னர் செயற்படுத்த ஆலய நிர்வாகத்திடம் கோருவது எனவும் அவ்வாறு செயற்படுத்த மறுப்பின் இந்த சிவ நிந்தனைச் செயற்பாட்டை நிறுத்த நாடாளாவிய ரீதியில் நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், இந்த வழிபாட்டை நிறுத்துமாறு ஏற்கனவே மேற்படி ஆலயத்தின் மகா சபையின் ஒரு சாரார் யாழ். அரச அதிபர், இந்து கலாசாரப் பணிப்பாளர் ஆகியோருக்கு விடப்பட்ட கோரிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சைவர்களிடையே கையெழுத்துக்களை சேகரித்து உரிய அதிகாரிகளிடம் ஒப்படைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

-http://www.sankathi24.com

TAGS: