“கருணாவுக்கு” தேசியப் பட்டியலிலும் இடம் இல்லை

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் இரு பிரதான கூட்டணிகளும் தமது தேசியப் பட்டியலுக்கான வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளனர்.

karuna_amman

விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஐ ம சு மு வாய்ப்பு அளிக்கவில்லை

 

இந்தப் பட்டியலில் “கருணா” என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் பெயர் இல்லை.

கடந்த நாடாளுமன்றத்தில் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமனம் பெற்று அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஃபௌசி, பேராசிரியர் பீரீஸ், திஸ்ஸ அத்தநாயக்க உட்பட பலரது பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

அதேபோல் ஐக்கியத் தேசியக் கட்சித் தலைமையிலான கூட்டணியில் கரு ஜயசூரிய, டி எம் சுவாமிநாதன், நிசாம் காரியப்பர், கே வேலாயுதம் போன்றோர்களின் பெயர்களும் உள்ளன.

ஐ தே க பட்டியலில் ஹஸன் அலி, எம் கே டி எஸ் குணவர்தன, சோபித தேரர், அதுலிய ரட்ண தேரர் ஆகியோரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

ஐ ம சு முன்னணியின் பட்டியலில் பிரபா கணேசன், பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க ஆகியோருக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வகையில் தமிழர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஐந்து வேட்பாளர்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு நால்வரும், ஐந்தாவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு அளிக்கப்பட்ட போதிலும், அதை அவர் மறுத்துவிட்டதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிபிசி தமிழோசையிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார். -BBC

TAGS: