“சர்வஜன வாக்கெடுப்பு – 2020” ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கான சர்வஜன வாக்கெடுப்பு

tamileelamகனடா: ஈழத்தமிழரின் இறையாண்மைக்கான சர்வஜன வாக்கெடுப்பின் முக்கியம் இன்று மிகவும் கனிந்து வருகின்றது. இன அழிப்பின் உச்சத்தை 2009 ல் ஈழத்தமிழர்கள் தொட்டதன் பின்புதான் உலக அரசாங்கங்கள் தமிழர் தரப்பு நியாயங்களை செவிமடுக்கின்றதும் ஏற்றுக்கொள்கின்றதுமான ஒரு சூழ் நிலைக்கு தங்களை ஆட்படுத்தியிருக்கின்றார்கள்.

நடந்த இன அழிப்பின் ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் இச் சூழ்நிலையில், இன அழிப்பிற்குட்பட்ட ஈழத்தமிழர்கள் தமக்கான ஒரு சரியான அரசியல் தீர்வை, சரியான தளத்தில் முன்வைப்பதென்பது இன்று அவசியமாகின்றது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின் பல்வேறு கோரிக்கைகளை பல்வேறு தமிழர் தரப்பினரும் முன்வைத்து அனைத்துலகத்திடம் நீதி வேண்டி போராடி வந்த சூழலில் கனடியத் தமிழர் தேசிய அவையானது (NCCT) அனைத்து கோரிக்கைகளையும் உள்ளடக்கியவாறான மூன்று அம்ச கோரிக்கைகளை முன் வைத்தது. அக் கோரிக்கைகளானது:

1. ஈழத் தமிழர்களுக்கு காலம் காலமாக நடைபெறுவது இன அழிப்பே,

2. போர்க்குற்றம், மானிடத்திற்கு எதிரான குற்றம் மற்றும் இன அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை,

3. ஐ. நா.வின் மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் இறையாண்மைக்கான சர்வஜன வாக்கெடுப்பு.

தமிழகத்தில் 36 அமைப்புக்களுடன் கனடியத் தமிழர் தேசிய அவை இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு கோடி கையெழுத்து போராட்டத்திலும் இம் மூன்று கோரிக்கைகளை அடிப்படையாக வைத்தே கையெழுத்துகள் பெறப்பட்டன.

2013 ல் கனடியத் தமிழர் தேசிய அவை; ஜெனிவாவில் 14 நாடுகள் அங்கம் வகிக்கும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையுடன் இணைந்து மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பல நாடுகளிலிருந்தும் 40 ற்கும் மேற்பட்ட முக்கியமான பல்லின சமூக பிரதிநிதிகளை உள்ளடக்கிய அனைத்துலக தமிழர் மகாநாட்டை நடத்தியிருந்தோம். இம் மகாநாட்டில் முக்கிய கருப்பொருளாக பேசப்பட்ட தமிழின அழிப்பு என்ற கருப்பொருளில் கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களான பற்றிக் பிரவுண் மற்றும் ஜிம் கரிக்கியானிஸ் அவர்கள் முதன் முதலாக ஈழத்தமிழர்களுக்கு இடம்பெற்றது இன அழிப்பே என்ற தமது கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள்.

மேலும் கனடாவில் – மார்க்கம் நகரசபையிலும், இத்தாலியில் – பலர் மோ நகரசபையிலும், இந்தியாவில் – தமிழக சட்ட சபையிலும் மற்றும் ஈழத்தில் – வடமாகாண சபையிலும் ஈழ தமிழர்களுக்கு இடம்பெற்றது தமிழின அழிப்பே என்று வலியுறுத்திய தீர்மானங்கள் வெளிவந்தன.

இன்று பற்றிக் பிரவுண் அவர்கள் ஒரு மாகாணக் கட்சித்தலைவராக மேம்பட்ட பின்பும் கடந்த மே 2015 ல் இடம்பெற்ற கனடிய தமிழர் தேசிய அவையின் ஒருங்கிணைவில் இடம்பெற்ற தமிழின அழிப்பு நினவு தினத்தில் தொடர்ந்தும் இடம்பெறும் தமிழன அழிப்பை வெளிப்படையாக நினைவு கூர்ந்திருந்தார்.

கனடாவில் பல அரசியல் கட்சி பிரமுகர்கள் இந் நிலைப்பாடை எடுத்திருக்கும் இவ்வேளையில் கனடிய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரான கிரிஸ் அலெக்சாண்டர் அவர்கள் தமிழின அழிப்பிற்குரிய பொறுப்புக் கூறுதலை சுட்டிக் காட்டியதென்பது ஒர் மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது.

இவ்வாறான கால சூழ்நிலைகள் கனிந்து வரும் இக் காலத்தில் ஈழத்தமிழர்கள் ஒன்றுபட்டு தமது இறையாண்மைக்கான தளத்தை உருவாக்குவதென்பது முக்கியமாகின்றது. இவ்வாறான எண்ணக்கருவுடன் கனடிய தமிழர் தேசிய அவை கனடாவிலும், அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை மற்றய நாடுகளிலும் ‘தமிழர் சுய நிர்ணய உரிமைக்கான சர்வஜன வாக்கொடுப்பு’ வருடம் 2020 ல் வைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஒரு பாரிய வேலைத்திட்டத்தை உருவாக்கி உள்ளார்கள். இவ் வேலைத்திட்டத்திற்கான ஆதரவை கனடிய தமிழர் தேசிய அவையினர் அனைவரிடமும் எதிர் பார்த்து நிற்கின்றனர்.

மேலதிக தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை – NCCT

-http://www.pathivu.com

TAGS: