இலங்கையில் அபாயம்…! மீண்டும் மகிந்த….?

mahinda_rajapaksaஆறு மாதங்களுக்கு முன்பு, இலங்கை அரசின் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்த மைத்திரிபால சிறீசேனாவால், அதே ராஜபக்ச இப்போது பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது.

கலைக்கப்பட்டுள்ள இலங்கை நாடாளுமன்றத்துக்கு, அடுத்த மாதம் 17-ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான மனுத்தாக்கல், ஜூலை 6 முதல் 13 வரை நடந்து முடிந்தது. 225 எம்.பி.க்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு 196 பேரை மக்களே வாக்குகள் மூலம் தேர்ந்தெடுப்பார்கள். மீதமுள்ள 29 இடங்களும், கட்சிகள் பெறும் வாக்கு சதவீதத்துக்கு ஏற்ப, பகிர்ந்து அளிக்கப்படும். பிரதமர் பதவிக்கு ரணிலுக்கும் மகிந்த ராஜபக்சவுக்கு இடையிலும்தான் போட்டி!

மனுத்தாக்கல் தொடங்கியது முதல் முடியும்வரை ஒவ்வொரு நாளும் பல தரப்பிலும் பரபரப்புகள். எல்லாவற்றுக்கும் காரணம், ராஜபக்சவுக்கு மீண்டும் சீட் தர மைத்திரி ஒப்புக் கொண்டதுதான்!

இவ்வளவுக்கும், இலங்கை அரசின் மிகவும் உயர்ந்த பதவியான அரசு ஜனாதிபதியாக தொடர்ந்து இரண்டு முறை, 10 ஆண்டுகளாகப் பதவிவகித்த -இனப்படுகொலை குற்றவாளி மகிந்த ராஜபக்சவுக்கு, அதிகாரம் குறைந்த பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் ஆசை.. ஆசையல்ல, வெறி..! அதற்காக ராஜபக்ச எந்த விலையையும் கொடுப்பார் என்பதை கணித்த மைத்திரி தரப்பு, ராஜபக்சவைப் பிரதமராக அறிவிக்காமல், எம்.பி.க்குப் போட்டியிட மட்டும் அனுமதி அளிக்கலாம்; அவருடைய ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் அவரை ஓரங்கட்டலாம்; அப்படிச் செய்தால் ராஜபக்ச தனி கூட்டணி அமைத்துப் போட்டியிடுவார்; ரணிலுடன் சேர்ந்து ஒரே அணியில் போட்டியிடலாம் என மைத்திரி தரப்பு திட்டமிடுவதாகத் தகவல்கள் வெளியாகின.

ஆனால், தன்னுடைய ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு தராததை அடுத்து, இலங்கை சுதந்திரக் கட்சியால் அறிவிக்கப்பட்ட பின்னர், வேட்பு மனுவில் கையெழுத்து இடாமல் மகிந்த முரண்டுபிடிக்க.. அதுவே மைத்திரிக்கு ஒரு பிரச்சினை ஆகிப்போனது. இரு தரப்பும் சமாதானப் பேச்சு நடத்தியதில், ஊழல், போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய நான்கு அமைச்சர்கள் உட்பட பல எம்.பி.களுக்கு மறுவாய்ப்பு தருவதில்லை என்று மட்டும் முடிவானது. இதில் ராஜபக்சக்களின் ராஜ்ஜியத்தில் அடாவடிச் செயல்களைப் பழக்கமாகக் கொண்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவும் அடக்கம்.

ஒருவழியாக, வேட்பாளர் பட்டியல் இறுதியானதில் ராஜபக்சவுக்கு கொள்ளை மகிழ்ச்சி.. ஆம், மகிழ்ச்சியிலும் கொள்ளைதான்!

பரம்பரை எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ரணிலுடன் கைகோர்த்து, ராஜபக்ச குடும்ப ஆட்சியை வீழ்த்த, மைத்திரி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறப் பாடுபட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, ராஜபக்சவின் மீள்வருகையால் கடும் கோபம் அடைந்தார். முன்னதாக, மகிந்தவுக்கு சுதந்திரக் கட்சியில் வாய்ப்பு தந்தால், அந்தக் கட்சியை உருவாக்கி, வளர்த்த குடும்பத்தைச் சேர்ந்த சந்திரிகா, அவரை எதிர்த்துப் போட்டியிடுவார் என சந்திரிகா தரப்பில் பகிரங்கமாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மகிந்த ராஜபக்ச மட்டுமல்ல, அவரின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் மூன்று ராஜபக்சக்கள் அதே கட்சியின் சார்பில் போட்டியிடுவதையும், சந்திரிகாவால் தடுக்க முடியவில்லை.

மைத்திரியை நேரில் சந் தித்த சந்திரிகா, முகத்துக்கு நேராகவே, “நீர் காட்டிக் கொடுத்ததன் மூலம் இந்த நாடு இரத்தக் காடாக மாறப் போகிறது; இப்படி காட்டிக்கொடுப்பீர் எனத் தெரிந்திருந்தால், உம்மை ஜனாதிபதி பதவிக்கு பொது வேட்பாளராக ஆக்க ஒப்புக்கொண்டிருக்க மாட்டேன்…’ என்று கடுமையாகச் சாடியதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அந்த வேகத்தில் இங்கிலாந் துக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்ட சந்திரிகா, போன வாரக் கடைசியில் திரும்பிவந்த பிறகுதான், தேர்தலில் அவர் என்ன செய்யப்போகிறார் என்பது தெரியும் என்கிறார்கள், கொழும்புவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர்கள்.

இன்னார்தான் பிரதமர் வேட்பாளர் என அறிவித்தே பிரச்சாரம் தொடங்குவது வழக்கம் என்றாலும், சுதந்திரக் கட்சியைப் பொறுத்த வரை, ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்காமலேகூட அவர்கள் வாக்குச் சேகரிப்பைத் தொடங்கினாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை என்கிறார்கள் இலங்கை பத்திரிகையாளர்கள்.

யாருக்கு சாதகம், பாதகம் என்றுகூட சொல்லமுடியாத நிலையில், ஆளுக்கொரு கணக்குப்போட்டு களத்தில் இறங்கியுள்ளன, இரு கட்சிகளும்.

மகிந்தவுக்கு வாய்ப்பளித்ததற்கு அதிருப்தி தெரிவித்து, இலங்கை சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்கள் ரணில் கட்சி தலைமையிலான கூட்டணிக்குத் தாவியுள்ளனர். அதில், அரசாங்கத்தின் தகவல் தொடர்பாளரும் மூத்த அமைச்சருமான ராஜித சேனரத்னா மற்றும் அமைச்சர்கள் அர்ஜூன் ரணதுங்கா, எம்.கே.டி.எஸ். குணவர்த்தனா ஆகியோர் முக்கியமானவர்கள்.

இவர்கள் உட்பட 40 பேர் சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, ரணில் தலைமையிலான புதிய ஐக்கிய மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிடுகின்றனர். மேலும், மைத்திரியை ஜனாதிபதியாக்குவதில் தீவிரமாகச் செயற்பட்ட சிங்கள இனவாதக் கட்சியான ஜாதிக ஹெல உருமயவும், சுதந்திரக் கட்சியின் கூட்டணியிலிருந்து விலகி, ரணிலுடன் கைகோர்த்துள்ளது. கொழும்பு மற்றும் மலையகத் தமிழர் மத்தியில் செல்வாக்கு கொண்ட மனோ கணேசனின் தமிழர் முற்போக்கு அணியும் இலங்கை முஸ்லிம் காங்கிரசும் ரணிலின் கூட்டணியில் சேர்ந்துள்ளன.

தமிழீழப் பகுதியான இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில், செல்வாக்கு பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான புதிய அணி ஆகியவற்றுடன், ஜனநாயகப் போராளிகள் கட்சி என்ற பெயரில் ஒரு சுயேட்சைக் குழுவும் போட்டியிடுகின்றது. கடைசி நேரத் தேர்தல் பரபரப்பாக உருவாகிய இந்தக் கட்சிக்கு, யாழ். மாவட்ட முன்னாள் எம்.பி.யும் தொழிலதிபருமான சரவணபவனின் மைத்துனரும் முன்னாள் பத்திரிகை ஆசிரியருமான வித்தியாதரன் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். கூட்டமைப்பின் பதவிப்போட்டிக்கு இடையில், இந்த அணியும் வாய்ப்பு கேட்க, கூட்டமைப்பு தலைவர்கள் மறுத்துவிட்டனர்.

இந்த திடீர் அணி பற்றி விசாரித்தபோது, கடந்த ஐந்து ஆண்டுகளாகத் துயரத்திலுள்ள முன்னாள் போராளி களுக்கான பகிரங்க நல உதவித் திட்டம் எதிலும் இவர் பங்கேற்றுள்ளதாகத் தகவல் இல்லை. கூட்டமைப்பானது தமிழ் மக்களுக்கு நாடாளுமன்றம் மூலம் எதுவும் செய்துவிடாத போதும், ஈழத்தமிழரின் கூட்டுக்குரலாக இருக்கும் கூட்டமைப்பை பலம் இழக்கவே இது பயன்படும். இலங்கையை ஆளப்போகும் சிங்களத் தரப்பிடம் தமிழருக்கான நலன்களைப் பேச, வலுவான புதிய கூட்டமைப்பே இன்றைய தேவை என்ற விமர்சனம் பரவலாக முன்வைக்கப்பட்டது.

-http://www.puthinamnews.com

TAGS: